இந்தியா

“EWS இடஒதுக்கீடு ஏன்? சினோ கமிட்டி அறிக்கை எங்கே?” : ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

உயர்சாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் ஒன்றிய அரசின் முடிவு குறித்து உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

“EWS இடஒதுக்கீடு ஏன்? சினோ கமிட்டி அறிக்கை எங்கே?” : ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

எந்த ஆய்வின் அடிப்படையில் உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு பற்றி முடிவு செய்யப்பட்டது என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மண்டல் குழு பரிந்துரைகளின் படி 27% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடப்பட்டும் 27% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படாமல் இருந்தது. இதற்கு எதிராக தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சட்டப் போராட்டம் நடத்தின.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட ஒன்றிய அரசு இதனை அமல்படுத்தாமல் இருந்தது. இதற்கு எதிராக தி.மு.க நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதன்பின்னரே ஒன்றிய அரசு ஓ.பி.சி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க முன்வந்தது.

இதற்கிடையே உயர்சாதிகளில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. இந்நிலையில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை சந்திரசூட், விக்ரம்நாத், பிவி நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதே, உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க ஆண்டு வருமான வரம்பு ரூ.8 லட்சம் என்பது எப்படி நிர்ணயிக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போதும் உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்வைத்தனர்.

உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு என்ன ஆய்வுகளை ஒன்றிய அரசு மேற்கொண்டது? எந்த ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவை ஒன்றிய அரசு எடுத்தது?

சினோ கமிட்டி அடிப்படையில்தான் உயர்சாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு சொல்கிறது. அந்த சினோ கமிட்டி அறிக்கையை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லையே. அதை ஏன் தாக்கல் செய்யவில்லை?

உயர்சாதி ஏழைகள் 10% இடஒதுக்கீடு பெற ஆண்டு வருமான வரம்பு ரூ. 8 லட்சம் என்பதை எப்படி வரையறை செய்தீர்கள்? உயர்சாதி ஏழைகளின் சொத்துகளை கணக்கில் எடுக்காமல் வருமானத்தை மட்டும் எப்படி கணக்கில் எடுக்க முடியும்?

ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுக்கு கிரீமிலேயர் இருப்பது போல உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டுக்கு கிரீமிலேயர் உள்ளதா? இத்தனை கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் பிரமாண பத்திரத்தை வரும் 28-ஆம் தேதிக்குள் ஒன்றிய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

banner

Related Stories

Related Stories