இந்தியா

“விலையை உயர்த்தியதால் தான் இலவசமாகத் தடுப்பூசி போட முடிந்தது” : சப்பைக் காரணம் கட்டும் ஒன்றிய அமைச்சர்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வால்தான் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போட முடிந்தது என ஒன்றிய அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“விலையை உயர்த்தியதால் தான் இலவசமாகத் தடுப்பூசி போட முடிந்தது” : சப்பைக் காரணம் கட்டும் ஒன்றிய அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும் பல மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயைக் கடந்துவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், சிலிண்டர் விலையும் உயர்ந்து கொண்டே வருவதைப் பார்த்து குடும்பத் தலைவிகள் கதிகலங்கிப் போயுள்ளனர். மேலும் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கண்ணுக்குத் தெரியாமல் விலைவாசி ஏறிக்கொண்டே செல்கிறது.

இதையடுத்து தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு எதைப்பற்றியும் கவலைப்படாமல் நாட்டின் பொதுச் சொத்துக்களை எப்படி விற்பது என்ற ஒரே திட்டத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாகவே நாட்டு மக்களுக்கு இலவசமாகத் கொரோனா தடுப்பூசி போட முடிந்தது என ஒன்றிய அமைச்சர் ரொமேஷ்வர் தெலி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அசாமில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் தெலி, ”பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான் நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்கு முக்கிய அங்கமாக உள்ளது. இந்த நிதியைக் கொண்டுதான் மக்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். விலையைக் குறைப்பதை விட்டுவிட்டு வெற்று வசனங்களை ஒன்றிய அமைச்சர்கள் பேசுவதால் என்னபலன் கிடைக்கப்போகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories