
தமிழகம் முழுவதும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மூங்கில் மண்டபம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் கழக மூத்த முன்னோடிகள், தூய்மை பணியாளர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள், கழக நிர்வாகிகள் என 1000க்கும் மேற்பட்டோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் ஏற்பாட்டிலும் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையிலும் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், சிறப்பு விருந்தினராக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, உயிரிழந்த கழக நிர்வாகிகள் குடும்பத்திற்கு உதவித்தொகை, தூய்மை பணியாளர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய அத்தியாவசிய பொருட்கள் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் என சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள், ஏழை எளிய மக்கள், மகளிர் வாழ்க்கை தரம் உயர மேற்கொண்ட திட்டங்கள் குறித்து சிற்ப்புரையாற்றினர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது :-
விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்றத்தில் அறிவித்தபடி 'வேளாண் 2.0' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வாரத்திற்கு மூன்று நாட்கள் (வியாழன், சனி மற்றும் ஞாயிறு) கிராம ஊராட்சிகளுக்கு நேரில் சென்று விவசாயிகளைச் சந்திக்க வேண்டும்.
அதிகாரிகள் வயல்களுக்கே சென்று பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், விவசாயிகளின் குறைகளைக் கேட்கவும் வேண்டும். பின்னர், வெள்ளிக்கிழமையன்று அலுவலகத்தில் அந்தப் புகார்கள் குறித்த நடவடிக்கைகளையும் விளக்கங்களையும் அளிக்க வேண்டும். அதிகாரிகள் கட்டாயம் களத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
பாமக பிரமுகர் அன்புமணி ராமதாஸுக்கு விவசாயம் செய்த அனுபவம் கிடையாது. அவர் எடப்பாடி பழனிசாமியின் முகவர் போலவும், அதிமுகவின் 'பி-டீம்' (B-Team) போலவும் செயல்பட்டு அரசுக்கு எதிராகப் பேசுகிறார். வன்னியர்களுக்கு முதலில் இடஒதுக்கீடு வழங்கியவரே கலைஞர்தான்.

கடந்த அதிமுக ஆட்சியில் தேர்தலுக்காக அவசரமாக 10.5% இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. ஆணையத்தின் பரிந்துரை இல்லாமல் செய்ததால் அது நீதிமன்றத்தில் நிற்கவில்லை. முறையான பரிந்துரை பெற்றே அதைச் செயல்படுத்த முடியும்.
கொரோனா காலத்தில், அதிமுக ஆட்சியில்தான் போதைப் பழக்கம் அதிகரித்தது. அப்போதே அதைத் தடுக்கத் தவறிவிட்டனர். குட்கா விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் உள்ளன. அவர்கள் விட்டுச்சென்ற இந்தப் பிரச்சினையைத் திமுக அரசு தற்போது கலையெடுத்தும், தடுத்தும் வருகிறது.
இளைஞர்களை நல்வழிப்படுத்தவும், போதைப் பழக்கத்திலிருந்து மீட்கவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிராமந்தோறும் விளையாட்டுப் போட்டிகளை ஊக்கப்படுத்தி வருகிறார். தமிழர் கலாச்சாரம் மற்றும் வீர விளையாட்டுகள் மூலம் இளைஞர்கள் நல்வழிப்படுத்தப்படுகிறார்கள்." என்றார்.






