இந்தியா

“தென்னை மர விவசாயிகள் மோடி அரசை மன்னிக்க மாட்டார்கள்” : GST கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கண்டனம்!

தேங்காய் எண்ணெய்க்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டிருப்பது தென்னை சாகுபடி அதிகம் உள்ள தென் மாநிலங்களுக்கு எதிரான நடவடிக்கை என்று தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது.

“தென்னை மர விவசாயிகள் மோடி அரசை மன்னிக்க மாட்டார்கள்” : GST கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கண்டனம்!
 • Twitter
 • Facebook
 • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தேங்காய் எண்ணெய்க்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டிருப்பது தென்னை சாகுபடி அதிகம் உள்ள தென் மாநிலங்களுக்கு எதிரான நடவடிக்கை என்று தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது.

நேற்று நடைபெற்ற 45-ஆவது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் வேறு பணிகளின் காரணமாக தமிழக நிதி அமைச்சர் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் கருத்துக்கள் எழுத்து வடிவில் ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தின் முன்பாக வைக்கப்பட்டது.

அதன் விவரங்கள் பின்வருமாறு:

சிக்கலான செயல்பாடு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு பொருண்மைகளின் காரணமாக சரக்குகள் மற்றும் சேவைகள் வரி செலுத்துவதற்கான செயல்பாடுகளால் சிறிய அளவில் வரி செலுத்துவோர் மீது சமமற்ற அளவிலான சுமை ஏற்றப்படுகிறது. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி செலுத்துவோர் குறிப்பாக, சிறு வணிகர்கள் தங்களுடைய பயனர் கணக்குகளை பயன்படுத்துகையில் அனைத்து உள்ளடக்க விவரங்களும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளதால், சிரமத்தை எதிர்கொள்வதாக தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இதன் விளைவாக, சிறு வணிகர்கள் "வரி ஆலோசகர்களின்" சேவைகளைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது, இது வரிவிதிப்பு நடைமுறையில் அவர்களுடைய செலவை அதிகரிப்பதோடு வரி தாக்கல் செய்வதில் அவர்களுக்கு இருக்கும் முழு கட்டுபாட்டைத் தடுக்கும் வகையிலும் அமைகிறது. பெருவணிகங்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு உதவி புரியக்கூடிய ஒரு சூழலை வழங்க விரும்புகிற சுமூகமான வர்த்தகத்திற்கேற்ற ஒரு மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி முறை தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த நான்கு ஆண்டுகளில், தமிழ் மொழியில் சேவைகளை வழங்குவது குறித்து எவ்வித குறிப்பிடத்தக்க முயற்சியும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தொடர்பான சேவைகளை தமிழ் மொழியில் வழங்க ஏற்பாடு செய்வதாக தமிழக அரசு சட்டமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. ஆகையால், எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாக தமிழ் மொழியில் சேவைகளை வழங்குமாறு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி கட்டமைப்புக்கு உத்தரவிடக் கோரி இந்த மாமன்றத்திடம் வலியுறுத்துகிறோம். சரக்குகள் மற்றும் சேவைகள் வரி கட்டமைப்பின் இணையதளத்தின் படிவங்கள் மற்றும் உள்ளடக்கங்களை மொழிபெயர்ப்பதில் ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் உதவி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சரக்குகள் மற்றும் சேவைகள் வரி கட்டமைப்பின் உடனடி நேர்மறை பதிலை எதிர்பார்க்கிறோம்.

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி முறையை செயல்படுத்த தயக்கத்துடன் ஒப்புக்கொள்கையில், அளவு மற்றும் கட்டுப்பாட்டின் அடிப்படையில், நிதி தன்னாட்சியை பெருமளவில் மாநிலங்கள் விட்டுக் கொடுத்திருப்பதை இந்த மாமன்றத்தின் மாண்புமிகு உறுப்பினர்கள் அறிந்திருக்கிறார்கள். சரக்குகள் மற்றும் சேவைகள் வரி நடைமுறையிலுள்ள இந்த நான்கு வருட அனுபவத்துடன், சரக்குகள் மற்றும் சேவைகள் வரியை அறிமுகப்படுத்தியதன் காரணமான செலவுகளையும் பயன்களையும் மாநிலங்களின் கண்ணோட்டத்திலிருந்து மறுபரிசீலனை செய்ய இது ஒரு சரியான நேரமாகும். கொரோனா பெருந்தொற்றின் ஒட்டுமொத்த பேரழிவை காரணமாக குறிப்பிட்டாலும், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அறிமுகப்படுத்தியது மற்றும் அதனைத் தொடர்ந்து வரிவிதிப்பு வருவாய் வளர்ச்சி காரணமாக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் அதிகரிப்பு குறித்த வாக்குறுதி முழுமையானதாக இல்லை. சட்டத்தில் கூறப்பட்ட இழப்பீட்டு நடைமுறைகளின் மூலம் எதிர்மறையான விளைவுகள் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளன.

இந்த செயல்முறையானது தனித்துவமான சவாலை நிவர்த்தி செய்ய மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் முறையான அபாயத்தை சமாளிக்க எந்த ஏற்பாடோ அல்லது அம்சமோ இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் (கோவிட் தொற்றுநோய் மற்றும் விரைவான மற்றும் முழுமையான ஊரடங்கால் ஒட்டுமொத்தமாக நாட்டின் பொருளாதாரம் Q1 FY'20 GDP 25% குறைந்துள்ளது). இழப்பீட்டுக்கான இந்த சட்ட விதிமுறை கூட பல "விளக்கங்களுக்கு" உட்பட்டது ஆகும். ஒவ்வொன்றும் மாநிலங்களின் இழப்பில், மற்றும் ஒரு சட்டத்தின் ஒருங்கிணைந்த கூறின் "உள்ளபடியான நோக்கம்" பற்றிய சர்ச்சைக்குரிய விவாதங்களுக்குப் பிறகு இறுதி "தீர்வு” வந்துவிட்டது என்பது வேறு விஷயம். மறுபுறம், கட்டுப்பாடு இழப்பு மற்றும் நிதி சுயாட்சி ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களுக்கான கட்டமைப்பு செலவுகள், தொடக்கத்தில் எதிர்பார்த்ததை விட பெரியதாக மாறியுள்ளது. பெரும்பாலும் செயல்பாடு மற்றும் நிர்வாக குறைபாடுகள் மற்றும் பிற குறைபாடுகளால் இது இயக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, உள்ளபடியான செலவுகள் உள்ளபடியான பயன்களை விட அதிகமாக உள்ளது. எனவே, நேரடி மற்றும் மறைமுக வரிகள் இரண்டையும் முழுமையாக மாற்றுவதற்கு வழிவகுக்கும் முழு வரி மாதிரியின் அடிப்படை மறுபரிசீலனையே காலத்தின் தேவை என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். நிதி அதிகாரங்கள் பகிர்மானத்தைப் பொருத்தவரையில் ஒன்றிய அரசின் நேரடி அதிகார எல்லை மற்றும் மாநிலங்களுக்கிடையேயான சமூக ஒப்பந்தம் பற்றிய நமது புரிதலையும், நிலைப்பாட்டையும் மேம்படுத்த உதவும் வகையில், சிறந்த பொருளாதார வல்லுநர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் அறிஞர்கள் குழுவை உருவாக்கும் பணியில் எமது அரசு ஈடுபட்டுள்ளது.

இக்கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலுக்கான குறிப்பிட்ட பதில்களை அளிக்க விரும்புகிறேன்:

 • ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரியை செலுத்துவதன் மூலமாக திருப்புத்தொகை பெரும் வசதியை ஒரு சில வகையான ஏற்றுமதியாளர்களுக்கு மட்டுமே வழங்கவேண்டும் என சட்டக் குழு இனம் 3 (xv) இல் பரிந்துரைத்துள்ளது. தற்போது, ​​ஏறத்தாழ 70,000 ஏற்றுமதியாளர்கள் ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரியை செலுத்தி திருப்புத்தொகை பெறுகின்றனர். இத்திருப்பிச் செலுத்தும் சலுகையை மாற்றியமைக்கும் முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால், இது சுமார் 10,000 ஏற்றுமதியாளர்களாக குறைக்கப்படும். இது நிச்சயமாக ஏற்றுமதி செயல்பாட்டை மோசமாக பாதிக்கும்.

சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தில் அண்மையில் செய்யப்பட்ட திருத்தங்களுக்குப் பின்னர், இரண்டு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் போலி பட்டியல் வணிகர்கள் மீதான நடவடிக்கையினை மேலும் கடுமையாக்கியுள்ளது என்பதை நான் இந்த மதிப்பிற்குரிய மாமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். அதில் முதலாவதாக GSTR-3B படிவத்தை தாக்கல் செய்து இரண்டு மாதங்களுக்கு முன்னதாக வரி செலுத்தப்பட்டிருந்தாலன்றி, GSTR-1 படிவத்தைப் பயன்படுத்தி வரி வரவை மாற்றம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது மற்றும் தற்போதைய கூட்டத்தில் இந்த கால அளவானது ஒரு மாதமாக குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது, வரியைச் செலுத்தாமல் போலி பட்டியல் வணிகச் சங்கிலி வணிகர்களால் உள்ளீட்டு வரிவரவு தோற்றுவிக்கப்படுவதை தடுக்கிறது. இரண்டாவது குறிப்பிடத்தக்க மாற்றமானது GSTR-1 படிவத்தை தாக்கல் செய்து வரவு மாற்றப்பட்டாலன்றி உள்ளீட்டு வரிவரவைப் பயன்படுத்த இயலாது என்பதாகும். போலி பட்டியல் வணிகச் செயல்பாடுகள் வாயிலாக தவறாக தொகையை திரும்பப்பெறுவதை தடுக்க இந்த இரண்டு மாற்றங்களும் போதுமானதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், அதிக எண்ணிக்கையிலான ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படும் வகையில் ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரித் தொகை திரும்பப் பெறும் வழிகளை தடுக்க வேண்டிய தேவையில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 • மேலும் இக்கூட்டத்தில், அமைச்சர்கள் அடங்கிய குழுவின் கால அளவு மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க மாண்புமிகு உறுப்பினர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

 • சுட்டிக்காட்டப்பட்ட நிலையான எண் அமைப்பு முறையை விரைவாக செயல்படுத்த ஆதரவினை தெரிவித்துக்கொள்கிறோம்.

 • மக்களின் பயன்பாட்டிற்கான மதுபானத்தை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் ஒப்பந்த அடிப்படையிலான சில்லறை சேவைகளுக்கு விதிக்கப்படும் 18% வரி விதிப்பதற்கான செயற்குறிப்பை வலுவாக எதிர்க்கிறோம். தமிழ்நாடு இந்த உயரளவு வரி வீதத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. மக்களின் பயன்பாட்டிற்கான மதுபானம் குறித்து வரி விதிப்பதற்கு மாநில அரசுகளுக்கு உரிமையுள்ளது. எனினும் உத்தேசிக்கப்பட்ட வரிவீத அதிகரிப்பானது, வருவாயை அதிகரிப்பதற்காக மதுபானம் மீதான வரிவீதத்தை மாற்றுவதற்கு மாநிலங்களுக்கு உள்ள நிதி அதிகாரத்தை இது குறைப்பதாக அமையும். மேலும், உத்தேசிக்கப்பட்ட வரிவீத அதிகரிப்பு உற்பத்தியாளர்களின் செலவை அதிகரிப்பதுடன், அவ்விலை உயர்வு நுகர்வோருக்கு மாற்றப்படுகிறது. எனவே, ஒப்பந்த உற்பத்தியாளர்கள் மதுபான உரிமையாளர்களுக்கு வழங்கும் சில்லரை சேவைகளின் மீதான வரி விகிதம் நீக்கப்படவேண்டும் அல்லது தொடர்ச்சியாக குறைந்தது 5% அளவிலாவது விதிக்கப்பட வேண்டும். மேற்சொன்னவை, உணவு பொருளாக வகைப்படுத்தப்படவில்லையெனினும், தேவை இருப்பின், அதற்கான தனியான குறிப்பிட்ட பதிவை மேற்கொள்ள வேண்டும்.

 • பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரிவிதிப்பானது, அவற்றின் சொந்த வருவாயை நிர்வகிப்பதில் மாநிலங்களுக்கு விடப்பட்டுள்ள ஒரு எஞ்சிய அதிகாரமாக இருப்பினும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அறிமுகப்படுத்தியதால் இந்திய அரசமைப்பில் எழுதப்பட்ட சிறிய அளவிலான உரிமைகள் பெரும்பாலும் இழக்கப்பட்டுள்ளன என்பது எங்களுடைய பொதுவான கருத்தாகும். எங்களின் எஞ்சியுள்ள இத்தகைய சில உரிமைகளை நாங்கள் இழக்க விரும்பாததால், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி எல்லைக்குள் இத்தகைய உற்பத்தி பொருட்களை கொண்டு வருவதை நாங்கள் வலுவாக எதிர்க்கிறோம். இது தொடர்பாக அதிகரித்துள்ள எங்களின் பிரச்சனைகள் வருமாறு,

a) ஒன்றிய அரசு 2014ஆம் ஆண்டிலிருந்து இன்றைய நாள்வரையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விதிப்பை 500% மற்றும் 1,000% -ற்கும் இடையே அதிகரித்து வந்துள்ளது, மற்றும்

b) இதே வேளையில், ஒன்றிய அரசு 2014ஆம் ஆண்டில், ஆயத்தீர்வையில் (நிதிக்குழுவின் விதிமுறையின் கீழ் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கத்தக்கவை) 90%க்கு அதிகமாகவும் 10%-ற்கும் குறைவான மேல்வரி மற்றும் உபரிவரியிலிருந்து (மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாதவை), அத்தகைய உற்பத்தி பொருட்களில், ஒன்றிய அரசின் மொத்த வரிவிதிப்பில் சுமார் 4% மட்டுமே இன்று ஆயத்தீர்வையாகவும், மிகப்பெரிய அளவிலான 96 சதவீத வரிவிதிப்பு மேல்வரி மற்றும் உபரிவரியாகவும் இந்த வரிவிதிப்பின் கலப்பில் மாற்றம் செய்துள்ளதால், மாநிலங்களுக்கு ஒரு பைசா கூட பகிர்ந்தளிக்கப்படவில்லை.

இத்தகைய வளர்ச்சியானது, ஒவ்வோராண்டும் மாநிலங்களின் பெரும்பான்மையான வருவாயை இழக்கச் செய்யும் அதே வேளையில், இத்தகைய உற்பத்தி பொருட்களிலிருந்து ஒன்றிய அரசுக்கு கிடைக்கப்பெறும் வருவாய் இலட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், ஒவ்வொரு மாநிலத்தால் நிர்ணயிக்கப்படும் அளவுகளிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரிவிதிப்பை சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வரம்பிற்கு மாற்றுவது மிகவும் மோசமான, அபாயகரமான, அநீதியாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.

இருப்பினும், அத்தகைய பொருட்களுக்கான அனைத்து மேல்வரி மற்றும் உபரிவரியினை முழுமையாக ஒன்றிய அரசு கைவிடும்பட்சத்தில், எங்கள் நிலைப்பாட்டினை மறுபரிசீலனை செய்ய வாய்ப்புண்டு.

ஒன்றிய அரசு மற்றும் மாநிலங்களுக்கிடையேயான ஒட்டுமொத்த வள பங்கீட்டை ஆராயாமலும் மாநிலங்களின் நிதி தன்னாட்சியை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளை வகுக்காமலும் இதனை தனியே ஆய்வு செய்ய இயலாது.

 • உள்ளடக்கப்பட்ட பல்வேறு பொருட்களுக்கு நாங்கள் குறைந்த/பூஜ்ஜிய வீதங்களை கோரியிருந்தாலும், தற்போதைய "ஒருமித்த" வீதங்களை டிசம்பர் 31 வரையில் நீட்டிப்பதற்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்.

 • ஒரு முக்கியமான விதிவிலக்குடன் வரி விகித நிர்ணயக் குழுவின் செயல்திட்டத்தில் உள்ள ஏனைய துணை இனங்களின் யாதொரு முன்னுரிமையையும் தவிர்க்கவே விரும்புகிறோம். பொது நுகர்வோர் பயன்பாட்டு முறையைக் கருதி, வரிவிகித நிர்ணயக் குழு பின்வருமாறு பரிந்துரைத்துள்ளது:

 1. 1000 மில்லி லிட்டருக்கும் குறைவான ஓரலகு கொள்கலனில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தேங்காய் எண்ணெய், அதன் இறுதிப் பயன்பாடு என்னவாக இருப்பினும், தலைக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெயாக வகைப்படுத்தப்பட்டு, (அத்தியாயம் 33 இன் கீழ்), அதற்கு 18% சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்படும்.

 2. 1000 மில்லி லிட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட அலகு கொள்கலனில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சமையல் தேங்காய் எண்ணெய், 5% சரக்குகள் மற்றும் சேவைகள் வரிக்கு உட்படும்.

இந்தப் பரிந்துரை முரண்பாடுடையதாகவும், காரணமற்றதாகவும் நியாயமற்றதாகவும் உள்ளதால் இதனை நாங்கள் மிகக் கடுமையாக எதிர்க்கிறோம். உண்மையில், மிகப்பெரிய தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு மற்றும் பல தென் மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகியவற்றின் நலனுக்கு எதிராக, தவறான நம்பிக்கையுடன் எடுக்கப்பட்ட ஒரு முடிவாக இதனை நாங்கள் கருதுகிறோம். சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பிற்காக மட்டும், தெளிவாக உண்ணத்தக்க ஒரு பொருளை உண்ணத்தகாதது (கொள்கலன் அளவைப் பொறுத்து) என எப்படி வகைப்படுத்த முடியும்? ஒரு பொருள் உண்பதற்கு பயன்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதற்கு, 1000 மில்லி லிட்டர் அளவை (1 முழு லிட்டர்) வரம்பு அளவீடாக எப்படி நிர்ணயம் செய்ய முடியும்? இது இரக்கமற்ற மற்றும் அடிப்படை தர்க்கமற்ற ஒரு தன்னிச்சையான வரம்பு அளவாகும். பெரும்பாலும் ஏழை குடும்பங்கள் சமையல் எண்ணெயை 1 லிட்டருக்கு மேல் வாங்குவதில்லை.

தென் மாநிலங்களில் நிறைய குடும்பங்கள் தேங்காய் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவது மிக அதிகம். கடுகு எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் போன்ற பல பயன்பாடுகளுடைய மற்ற சமையல் எண்ணெய்களை ஒப்பிடும்போது தேங்காய் எண்ணெய்க்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம் காட்டப்படுகிறது. கடுகு எண்ணெய் அல்லது நல்லெண்ணை தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில் பெரிதும் தயாரிக்கப்படுவதில்லை என்பதால் அவைகளுக்கு இந்த வரம்பு தரப்படவில்லையா? பனை எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற இறக்குமதி எண்ணெய்களை, ஒன்றிய அரசு, அதன் கருத்திற்கிணங்க இறக்குமதி வரிகளிலிருந்து விலக்கு அளிக்கத் தேர்ந்தெடுத்தது ஏன்? வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் எந்த ஒரு அளவில் இருந்தாலும் 5% விகிதத்தைப் பெறும் அதே வேளையில், தென்னிந்திய எண்ணெய்க்கு மட்டும் ஏன் பாகுபாடு காட்டப்படுகிறது?

ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால், இந்த கருத்துரு குறைந்த அளவில் எண்ணெய் வாங்கும் ஏழைகளுக்கு எதிரானதாகவும், பெரும்பகுதி தேங்காய் விளையக்கூடிய இடங்களாக உள்ள தென் மாநிலங்களுக்கு எதிரானதாகவும் உள்ளது. மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆலிவ் மற்றும் பனை போன்ற எண்ணெய்களுக்கு முன்னுரிமை அளிப்பது இந்தியாவிற்கே எதிரானதாக உள்ளது. வரிவிகித நிர்ணயக் குழுவின் இந்த முடிவு சரியான வகையில் மனதை செலுத்தி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்ற வகையில் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இது தேங்காய் எண்ணெயின் முழு பயன்பாடு பற்றி சரியாக ஆராயாமல் எடுக்கப்பட்ட வெளிப்படையற்ற, பாரபட்சமான ஒரு முடிவாகும். பல சமையல் எண்ணெய்களுள் ஒரே ஒரு எண்ணெய்க்கு மட்டும் எதிரான இத்தகைய அப்பட்டமான பாகுபாடு எந்த நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றாலும், நிச்சயம் அமில சோதனையை தாண்டிவிட முடியாது.

இத்தகைய காரணிகள், விவாதங்கள் மற்றும் கருத்துரைகள் இருந்தபோதிலும், ஏழைகளுக்கு எதிரான அளவின் அடிப்படையிலான இத்தகைய வரிவிதிப்பு வீதம் "அதன் உண்மையான இறுதி பயன்பாட்டைப் கருத்தில் கொள்ளாமல்" விதிக்கப்படுவது யாதொரு சமையல் எண்ணெய்க்கும் விதிக்க வேண்டுமென இந்த மாமன்றம் கருதினாலோ, அனைத்து சமையல் எண்ணெய்க்கும் 1000 மிலி என்றில்லாது 100 மிலி என்றவாறு அனைத்துக்கும் பொதுவாக அவ்வாறே விதிக்கப்பட வேண்டும். இந்தியாவின் ஏனைய பகுதிகளைச் சார்ந்த மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்களுக்கான சரக்குகள் மற்றும் சேவைகள் வரிவிதிப்பு அதிகரிப்பு 5% என இருக்கும் நிலையில், தென்னிந்தியாவை மையமாகக் கொண்ட சமையல் எண்ணெய்க்கு மட்டும் 360% அளவிற்கு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிவிதிப்பை அதிகரிக்கக் கூடாது என்பதே நியாயமான அடிப்படைக் கொள்கையாக இருக்க முடியும்.

சரக்குகள் மற்றும் சேவைகள் வரிவிதிப்பு மன்றமானது இத்தகைய மாபெரும் அநீதியின்பாற்பட்ட முடிவினை எடுக்க முனைந்தால் அதனை தமிழ்நாடு மற்றும் ஏனைய தென் மாநிலங்களின் இலட்சக்கணக்கான தென்னை மர விவசாயிகள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்.”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories