இந்தியா

சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க ரூ. 2 கோடி லஞ்சம்... போலிஸ் அதிகாரிகளை விளாசிய கர்நாடக ஐகோர்ட்!

லஞ்ச புகாரில் சிக்கிய சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி சத்யநாராயண ராவ், எஸ்.பி. கிருஷ்ணகுமார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க ரூ. 2 கோடி லஞ்சம்... போலிஸ் அதிகாரிகளை விளாசிய கர்நாடக ஐகோர்ட்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பரப்பன அக்ரஹாரா சிறை முறைகேட்டில் ரூ.2 கோடி பணம் கை மாறியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை காலத்தை அனுபவித்து வந்தார்.

இதனிடையே அவர் சிறையில் இருந்த காலத்தில் பல்வேறு சிறப்பு சலுகைகள் அவருக்கு வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக ரூ.2 கோடி வரை பணம் கை மாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் விசாரணை நடத்தி அறிக்கையை மாநில அரசிடம் ஒப்படைத்தனர். அறிக்கையில் சலுகைகள் வழங்கப்பட்டது உண்மைதான் என்றும் ஆனால் பணம் கைமாறியது தொடர்பான விசாரணையை தங்களால் நடத்த முடியாது என்றும் அதை ஊழல் தடுப்பு அமைப்பு ஏற்று நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

மாநில அரசு இந்த வழக்கை ஊழல் தடுப்புப் படைக்கு மாற்றியது. அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கீதா தாக்கல் செய்த மனு மீது கடந்த ஜூன் 11ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி லஞ்சம் ஒழிப்பு புகார் தொடர்பாக விசாரணை நடத்தி 2 மாதத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டுமென்று உத்தரவிட்டது.

இதையடுத்து விசாரணையை துரிதப்படுத்திய லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அங்காங்கே சோதனை நடத்தினர். இதில் பரப்பன அக்ரஹாரா சிறையில் பணியாற்றிய முன்னாள் எஸ்.பி கிருஷ்ண குமார் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கீதா மனு மீதான விசாரணை மீண்டும் உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது ஊழல் தடுப்பு அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மேலும் சில மாதங்கள் கால அவகாசம் வழங்கவேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். இதற்கு மனுதாரர் கீதா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் கால தாமதம் ஏற்பட்டால் இந்த வழக்கை உடனே சி.பி.ஐக்கு மாற்றவேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அனைத்து தரப்பின் வாதத்தை கேட்ட நீதிபதி

ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் இதுவரை நடந்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி கர்நாடக லஞ்ச ஒழிப்பு போலிஸார் இன்று பரப்பன அக்ரஹாரா சிறையில் 2 கோடி வரை பணம் கைமாறி இருப்பது தொடர்பாக யார் யாரிடமெல்லாம் விசாரணை நடத்தப்பட்டது, எத்தனை பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தயார் செய்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இந்த விசாரணை அறிக்கையில் 2 கோடி லஞ்சம் தொடர்பான விசாரணை இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என்றும், தற்போது வரை நடத்தப்பட்டுள்ள விசாரணையில் 2 கோடி பணம் கைமாறி இருப்பது தொடர்பான எந்த முழுமையான ஆதாரமும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது கர்நாடக உயர்நீதிமன்றம். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரனைக்கு வந்தது.

சிறையில் லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகள் பெற்ற வழக்கில் கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லஞ்ச புகாரில் சிக்கிய சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி சத்யநாராயண ராவ், எஸ்.பி. கிருஷ்ணகுமார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பி சிறைத்துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸ் நடவடிக்கை எடுக்காதது பற்றி கர்நாடக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

30 நாட்களுக்குள் காவல்துறை அதிகாரிகள் நால்வர் மீதும் நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கர்நாடக அரசின் முதன்மை செயலாளர் ரவிக்குமார் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories