
டெல்லியில் பிரதான் மந்திரி லோன் யோஜனா திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதாகக் கூறி போலியான கால் சென்டர் நடத்தப்பட்டு வருவதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து போலிஸார் டெல்லியில் உள்ள ரோகிணி செக்டர் அடிக்குமாடி குடியிருப்பு பகுதிக்குச் சென்று விசாரணை செய்தனர். அப்போது இளைஞர்கள் மற்றும் சில பெண்கள் தொலைபேசிகள் மூலம் தனிநபர் கடன்களை வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வந்தது தெரியவந்தது.
பின்னர் போலி கால் சென்டர் நடத்தி வந்த தீபக் சைனி உட்பட 11 பேரை போலிஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து லேப்டாப், 29 செல்போன்கள், வைஃபை டாங்கிள் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலிஸார் கூறுகையில், ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அப்பாவிகளைக் குறிவைத்து ஏமாற்றி வந்துள்ளனர். இவர்கள் தொலைபேசி செயலிக்கான கட்டணம் என்ற பெயரில் பணம் செலுத்தும்படி கூறுவார்கள். பின்னர் பணம் வந்த பிறகு தொலைபேசியை அணைத்துவிடுவார்கள்.
இப்படியே இந்த கும்பல் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மோசடி செய்து வந்துள்ளார்கள். மேலும் இந்த கும்பலின் முக்கிய தலைவனைப் பிடிப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளனர்.
ஒன்றிய அரசின் திட்டத்தின் பெயரை பயன்படுத்தி மக்களிடம் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.








