இந்தியா

“வேண்டும்.. வேண்டும்..! நீதி வேண்டும்..!” : தமிழால் அதிர்ந்த நாடாளுமன்றம்!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமிழ் மொழியில் முழக்கம் எழுப்பியுள்ளனர்.

“வேண்டும்.. வேண்டும்..! நீதி வேண்டும்..!” : தமிழால் அதிர்ந்த நாடாளுமன்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், கடந்த 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம், ரஃபேல் ஊழல், பெகாசஸ் உளவு விவகாரம் உள்ளிட்ட உள்ளிட்ட பிரச்னைகளை, நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் தொடர்ச்சியாக எழுப்பி வருகின்றன.

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க மோடி அரசு மறுத்து வருவதால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. இதன் காரணமாக இரண்டு அவைகளுமே ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும், தமிழ் மொழியில் முழக்கத்தை எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட விவகாரங்களை அவையில் விவாதிக்க வலியுறுத்தி, “வேண்டும்.. வேண்டும்..! விவாதம் வேண்டும்...! வேண்டும்... வேண்டும்..! நீதி வேண்டும்..!” என நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தமிழில் முழங்கியுள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “வழக்கமாக, நாடாளுமன்றத்தில் ஆங்கிலம் அல்லது இந்தியில்தான் முழக்கங்கள் எழுப்பப்படும். மாநிலங்களவை வரலாற்றில் முதன்முறையாக, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும், தமிழ் மொழியில், “வேண்டும்.. வேண்டும்... விவாதம் வேண்டும்..!” என முழக்கமிட்டனர்.

வலுக்கட்டயாமாக எந்தவொரு மசோதாவையும் தாக்கல் செய்வதற்கு முன்பு விவாதம் நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல், நாடாளுமன்ற மக்களவையில், பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி., ஜஸ்பீர் சிங் கில் தலைமையில் திரண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், “வேண்டும்.. வேண்டும்.. நீதி வேண்டும்..”! என முழக்கமிட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மோடி அரசுக்கு எதிராகவும், ஜனநாயகம் காக்கும் வகையிலும், தமிழில் முழங்கியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories