இந்தியா

"அரசு ஊழியர்கள் வரதட்சணை மறுப்பு சான்றிதழ் அளிப்பது கட்டாயம்... மீறினால் 5 ஆண்டு சிறை": கேரள அரசு அதிரடி!

கேரளாவில் அரசு ஆண் ஊழியர்கள் வரதட்சணை மறுப்பு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

"அரசு ஊழியர்கள் வரதட்சணை மறுப்பு சான்றிதழ் அளிப்பது கட்டாயம்... மீறினால் 5 ஆண்டு சிறை": கேரள அரசு அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலத்தில் அண்மையில், வரதட்சணை கொடுமையால் இளம்பெண்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விஷ்மாயா என்ற மருத்துவக் கல்லூரி மாணவி, நல்ல கார் வாங்கி கொடுக்காததால் கணவன் கொடுமைப் படுத்தியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

அதேபோல், அர்ச்சனா என்ற பெண் அதிகமாக வரதட்சணை கேட்டு கணவன் வீட்டார் கொடுமை செய்தது தாங்காமல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் சுசித்ரா என்ற பெண்ணும் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து நடந்த இந்த மூன்று சம்பவங்களும் கேரள மாநிலத்தையே உலுக்கின.

இதனைத் தொடர்ந்து கேரள அரசு வரதட்சணை கொடுமையை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் வரதட்சணை கொடுமை குறித்து தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணையும் வெளியிட்டது. வரதட்சணையை கட்டுப்படுத்தும் வகையில் கேரள அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கேரள அரசின் கீழ் பணிபுரியும் அனைத்து ஆண் ஊழியர்களும் திருமணத்திற்குப் பின் வரதட்சணை பெறவில்லை என்று உறுதி அளித்து அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

"அரசு ஊழியர்கள் வரதட்சணை மறுப்பு சான்றிதழ் அளிப்பது கட்டாயம்... மீறினால் 5 ஆண்டு சிறை": கேரள அரசு அதிரடி!

இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநர் அனுபமா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கேரளாவில் அரசுப்பணியில் இருக்கும் ஆண்கள் தங்கள் திருமணத்தின்போது பெண் வீட்டாரிடம் இருந்து வரதட்சணை வாங்கவில்லை என்ற சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தச் சான்றிதழில் மணமகள், மணமகளின் பெற்றோர் ஆகியோர் கையெழுத்திட்டிருக்க வேண்டும். திருமணம் முடிந்த மாதத்திலேயே இந்தச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் வரதட்சணை தடுப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவரிடம் அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் உயர் அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் துறையில் பணி செய்வோரின் திருமண விவரங்கள், வரதட்சணை மறுப்பு குறித்து அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். வரதட்சணை வாங்கிக்கொண்டு அரசு அதிகாரிகள் திருமணம் செய்தது தெரியவந்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் .

வரதட்சணை கொடுப்பதோ, பெறுவதோ சிறைத் தண்டனை வழங்கத்தக்க குற்றமாகும். மேலும், இதற்கான சிறை தண்டனை 5 ஆண்டுக்குக் குறையாமல் இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories