இந்தியா

‘பாரத் நெட்’ ஊழல்: “CAG கேட்கும் 500 கோடி எங்கே?” - பிரதமர் மோடிக்கு பவன் கெரா கேள்வி!

‘பாரத் நெட்’ திட்டத்தில் நடந்துள்ள சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான ஊழலை சி.ஏ.ஜி. அம்பலத்திற்கு கொண்டுவந்துள்ள நிலையில், அதுபற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்கவேண்டும் என்று பவன் கெரா வலியுறுத்தியுள்ளார்.

‘பாரத் நெட்’ ஊழல்: “CAG கேட்கும் 500 கோடி எங்கே?” - பிரதமர் மோடிக்கு பவன் கெரா கேள்வி!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

‘பாரத் நெட்’ திட்டத்தில் நடந்துள்ள சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான ஊழலை சி.ஏ.ஜி. அம்பலத்திற்கு கொண்டுவந்துள்ள நிலையில், அதுபற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்கவேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பவன் கெரா வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்கள் பயன்பெறும் வகையில் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை பிராட்பேண்ட் இண்டர்நெட் மூலம் இணைப்பதற்காக கொண்டுவரப்பட்டதுதான் ‘பாரத் நெட்’ திட்டம் ஆகும். இந்த திட்டத்தில்தான் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியின் (CAG) அறிக்கையை குறிப்பிட்டு, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

‘பாரத் நெட்’ திட்டத்தின் இலக்கை எட்ட ‘யூனிவெர்சல் சர்வீசஸ் ஆப்ளிகேசன் பண்ட்’ (USOF), பாரத் பிராட்பேண்ட் நெட்ஒர்க் லிமிடெட் (BBNL) மற்றும் காமன் சர்வீசஸ் சென்டர் (CSC) ஆகிய மூன்று வெவ்வேறு துறைகளுக்கு இடையே ஒளிவடக் கம்பி, தொலைத்தொடர்பு சாதனங்களை நிறுவுவது, பராமரிப்பது குறித்து 2019 ஜூலை மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. ‘யூனிவெர்சல் சர்வீசஸ் ஆப்ளிகேசன் பண்ட்’ (USOF) நிறுவனத்திற்கு 55 ஆயிரம் கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது.

ஒளிவடக் கம்பி புதைப்பது, தொலைத்தொடர்பு சாதனங்களை நிறுவுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தனியார் நிறுவனங்களை ஒப்பந்தம் செய்த ‘காமன் சர்வீசஸ் சென்டர்’ நிறுவனங்களைப் பற்றி எந்தஒரு ஆய்வும் செய்யாமல் பணிகளை வழங்க ஒப்பந்தம் செய்திருக்கிறது.

இந்த நிறுவனங்கள் மூலம் பல்வேறு செலவினங்களில் பலகோடி ரூபாய் எந்தவித தணிக்கையும் இல்லாமல் வாரி வழங்கப்பட்டிருக்கிறது. “மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுச் சேவை மையங்களுக்கு (சி.எஸ்.சி.)2019 ஜூலை முதல் 2020 டிசம்பர்வரை பெரும்பணம் செலுத்தப்பட்டுள்ளது” என சி.ஏ.ஜி சுட்டிக்காட்டியுள்ளது.

இவற்றை முன்வைத்தே காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் பவன்கெரா மோடி அரசுக்கு கேள்விகளை எழுப்பியுள்ளார். ‘தணிக்கைத்துறையின் இந்த அறிக்கை காரணமாகவே தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத்தின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதா?’ என்பதை பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ள பவன் கெரா, “அரசுத்துறைகள் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கும் ‘பாரத்நெட்’ ஊழலுக்கு ரவிசங்கர் பிரசாத்தை மட்டுமே பொறுப்பாக்கி ‘பலிகடா’ ஆக்கியிருப்பதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி தன்னை அப்பழுக்கற்றவர் என்று காண்பிக்க முயற்சி செய்கிறார்” என்றும் குற்றம்சாட்டியுள்ளார். “இந்த ஊழலில் தொடர்புடைய நிறுவனங்கள் மீது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? என்பதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும்.

ஏனெனில், மக்கள் வரியாக செலுத்தும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ‘பாரத் நெட்’ திட்டத்தில் சூறையாடப்பட்டுள்ளது. இதனை பதவியில் இருக்கும் நீதிபதி மூலம் நியாயமான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என்றும் கெரா வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories