இந்தியா

200 நாளை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம் : ஜூன் 26ல் ஆளுநர் மாளிகை முன்பு கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்!

டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 200வது நாளை எட்டியுள்ளது.

200 நாளை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம் : ஜூன் 26ல் ஆளுநர் மாளிகை முன்பு கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்!
Anindito Mukherjee
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த கருப்பு வேளாண் சட்டதை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையான சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் பகுதியில் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் தங்கள் போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறார்.

கடந்த நம்பவர் 6ம் தேதி துவங்கிய இவர்களின் போராட்டம் இன்று 200 வது நாளை எட்டியுள்ளது. இந்திய வரலாற்றில் இப்படி ஒரு நீண்ட போராட்டம் நடந்தது இல்லை என வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அந்த அளவும் தங்களின் கோரிக்கையில், நம்பிக்கையுடன் விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

டிரக்டர் பேரணி, சக்கா ஜாம், சாலை மறியல் என பல கட்ட போராட்டங்களை நடத்தியும் இவர்களின் நியாயமான கோரிக்கையை தொடர்ந்து ஒன்றிய அரசு புறக்கணித்து ஏமாற்றி வருகிறது.

கடந்த மே 26ம் தேதி கூட பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று ஏழு ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி அன்றைய தினத்தைக் கருப்பு தினமாக அனுசரித்து போராட்டம் நடத்தினர். மேலும் எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் இங்கிருந்து எங்கும் போவதாக இல்லை என்றும் அவர்கள் உறுதியுடன் போராடி வருகிறார்கள்.

இந்நிலையில், ஒன்றிய அரசுக்குப் பாடம் புகட்டும் வகையில் ஜூன் 26ம் தேதி அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர் மாளிகை முன்பு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. பின்னர் போராட்டத்தின் முடிவில் குடியரசு தலைவருக்கு மனுக்களை அனுப்ப விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் விவசாயிகளுள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் #200DaysOfFarmersProtest என்ற ஹாஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது. கிசான் ஏக்தா மோர்ச்சா அமைப்பும் இந்த ஹாஷ்டேக் பயன்படுத்தி எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளது.

வேளாண் கருப்பு சட்டத்தைத் திரும்ப பெறுவதே விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒரே தீர்வு என தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories