இந்தியா

“எதிர்க்கட்சிகள் மீது பொய் புகார் சொல்வதை நிறுத்துங்கள்” - மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை!

காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து விவசாயிகளுக்கு ஆதரவாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

“எதிர்க்கட்சிகள் மீது பொய் புகார் சொல்வதை நிறுத்துங்கள்” - மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“வேளாண் சட்டங்கள், விவசாயிகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும்” என எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

காங்கிரஸ், தி.மு.க, தேசியவாத காங்கிரஸ், குப்கார் கூட்டமைப்பு, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் (எம்.எல்), பார்வர்டு பிளாக், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இணைந்து விவசாயிகளுக்கு ஆதரவாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

எதிர்க்கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் கூறுவதை பிரதமர் மோடி நிறுத்திக்கொண்டு, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். அரசியல் லாபத்துக்காக புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக பொய் பிரச்சாரம் தொடர்ந்து செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு எங்களின் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து கொள்கிறோம். பிரதமரின் குற்றச்சாட்டு உண்மையை முழுமையாக கேலிக்கூத்தாக்குவதாகும்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக எங்களின் எதிர்ப்பையும், போராடும் விவசாயிகளுக்கு எங்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் அளிக்கிறோம். சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள 500க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் வரலாற்று ரீதியான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

முறையான விவாதம், ஆலோசனை இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை விவசாயிகள் சங்கங்கள் எதிர்க்கின்றன. வேளாண் மசோதாவுக்கு வாக்களிக்கும் எம்.பி.க்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்.

ஆதாரமில்லாத பல குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி கூறியுள்ளார். அதில் முக்கியமானது, தேர்தல் வாக்குறுதியில் வேளாண் சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசியவர்கள் இப்போது எதிர்க்கிறார்கள் எனப் பிரமதர் மோடி பேசியுள்ளார்.

ஆமாம், நாங்கள் சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசினோம். ஆனால், என்னவகையான சீர்திருத்தத்தை பேசினோம். இந்திய வேளாண்மையை வலுப்படுத்தும் சீர்திருத்தத்தைக் கோரினோம். விவசாயிகளின் வாழ்க்கையைச் செழுமையாக்கும் சீர்திருத்தத்தைக் கோரினோம். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு தொடர்ந்து உறுதி செய்யும் சீர்திருத்தத்தைப் பேசினோம். ஆனால், தற்போதுள்ள வேளாண் சட்டங்கள், இந்த நோக்கங்களைக் குறைத்து மதிப்பிட்டுள்ளன.

இதில் மிகப்பெரிய பொய்யாக குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பரப்புகிறார்கள் என்று பிரதமர் கூறியுள்ளார். சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கையை அமல்படுத்தியதாக பிரதமர் மோடி கூறுகிறார்.

ஆனால், சுவாமிநாதன் அறிக்கையில், குறைந்தபட்ச ஆதார விலை C2+50 சதவீதம் வழங்கப் பரிந்துரை செய்தது. ஆனால், மத்திய அரசு A2+50 சதவீதம் மட்டுமே வழங்கியது. எங்களால் C2+50 சதவீதத்தை நடைமுறைப்படுத்த இயலாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது. அப்படியென்றால் யார் பொய்களைப் பரப்புகிறார்கள்?

அரசியல் பிடிமானத்தை இழந்து விவசாயிகளின் தோள்களில் அமர்ந்து சுடுகிறார்கள் எனும் பிரதமரின் குற்றச்சாட்டை நாங்கள் மறுக்கிறோம். குறைந்தபட்ச ஆதார விலையை அதிகப்படுத்த வேண்டும், கடன் இருப்பதால் விவசாயிகள் துன்பம் அதிகரித்து வருகிறது, விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையாக இருந்துள்ளது.

தற்போதுள்ள வேளாண் சட்டங்களை, மின்சாரத் திருத்தச் சட்டத்தோடு சேர்த்து திரும்பப் பெற வேண்டும். வேளாண் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதம், ஆலோசனை விவசாயிகளுடனும், அது தொடர்பானவர்களுடன் சேர்ந்து நடைபெற வேண்டும். இந்த விவாதங்கள் அடிப்படையில் புதிய சட்டங்கள் இயற்றுவது குறித்து நாடாளுமன்றம் பரிசீலிக்கும். தேவைப்பட்டால் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories