இந்தியா

“மோடி அரசால் நிறுத்திவைக்கப்பட்ட கல்வி உதவித்தொகை” : ரோகித் வெமுலாவை தொடர்ந்து மாணவி ஐஸ்வர்யா தற்கொலை!

கல்வி உதவித்தொகை நிறுத்திவைக்கப்பட்டதால், டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

“மோடி அரசால் நிறுத்திவைக்கப்பட்ட கல்வி உதவித்தொகை” : ரோகித் வெமுலாவை தொடர்ந்து 
மாணவி ஐஸ்வர்யா தற்கொலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா ஊரடங்கில் மத்திய அரசு ஆய்வு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை தராமல் நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் இரண்டாமாண்டு கணிதவியல் ஹானர்ஸ் பயின்று வரும் மாணவி ஐஸ்வர்யா நவம்பர் 2 தேதி தனது வீட்டு அறையில் தற்கொலை செய்துகொண்டார்.

அவரது தற்கொலை குறிப்பில் “எனது குடும்பத்தினர் எனக்கு நிறைய பணம் செலவழித்து வருகின்றனர். நான் அவர்களுக்கு ஒரு சுமை. எனது படிப்பு ஒரு சுமை. ஆனால் எனது படிப்பு இல்லாமல் என்னால் வாழ முடியாது. இதை நான் பல நாட்களாக சிந்தித்து வருகிறேன். தற்கொலைதான் எனக்கு இருக்கும் ஒரே தேர்வு என்று நான் நினைக்கிறேன். ” என்று எழுதியிருக்கிறார்.

இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் மைமூனா முல்ல மற்றும் பொதுச் செயலாளர் ஆஷா ஷர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், “தெலங்கானா ரங்காரெட்டி மாவட்டத்திலிருந்து வந்துள்ள ஐஸ்வர்யா ரெட்டி, +2 தேர்வில் மாநிலத்திலேயே முதலாவதாக வந்தார். தொழிலாளர் வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த, ஏழை மாணவியான அவர், உயர் கல்வி கற்பிப்பது மிகுந்த சிரமமான ஒன்றாகவே இருந்தது. எனினும் அவர்தம் குடும்பத்தினர் தங்கள் பூர்வீக வீட்டை அடகு வைத்து, தன் மகளைத் டெல்லிக்கு உயர்கல்வி கற்பதற்காக அனுப்பி வைத்தனர். அவர் தான் ஓர் ஐ.ஏ.எஸ். அலுவலராக வேண்டும் என்ற கனவை நெஞ்சில் ஏந்தி இருந்தார்.

“மோடி அரசால் நிறுத்திவைக்கப்பட்ட கல்வி உதவித்தொகை” : ரோகித் வெமுலாவை தொடர்ந்து 
மாணவி ஐஸ்வர்யா தற்கொலை!

அவருக்கு, அவருடைய திறமை மற்றும் அதிக மதிப்பெண் பெற்றிருந்ததன் அடிப்படையில் அவருக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சத்தின் ‘இன்ஸ்பைர்’ கல்வி உதவித்தொகை (INSPIRE scholarship) பெறத் தேர்வு செய்யப்பட்டார். ஆனாலும் கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக அதன் மூலம் கிடைக்கவேண்டிய பணப்பயன் எதுவும் அவருக்கு அளிக்கப்படவில்லை.

மார்ச் 20இலிருந்து அது நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கு நிர்வாகத்தரப்பில் சமூக முடக்கம் காரணமாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனாலும் அதே சமயத்தில் மாணவர்கள் கல்லூரிக்குக் கட்ட வேண்டிய கட்டணங்கள் மற்றும் தாங்கள் ஜீவித்திருப்பதற்குத் தேவையான உணவுக்கட்டணம் (mess bills) போன்றவற்றில் தளர்வேதும் செய்யப்படவில்லை.

ஐஸ்வர்யாவின் நிலை குறித்து லேடி ஸ்ரீராம் கல்லூரி மாணவர் சங்கம் மீண்டும் மீண்டும் நிர்வாகத்தின் பார்வைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. ஆனாலும் அவர்கள் எதுவும் கூறாது மவுனம் கடைபிடித்திருக்கிறார்கள். இதேபோன்றுதான் ரோகித் வெமுலாவிற்கு தரப்பட வேண்டிய கல்லூரி உதவிப் பணம் கொடுக்கப்படாது அவர் தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுக்கத்தள்ளப்பட்டார். இப்போது அதேபோன்ற நிலைக்கு ஐஸ்வர்யாவும் தள்ளப்பட்டிருக்கிறார்.

இவர்கள் போன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் – ஏழைகள் – உயர்கல்வி பயில வந்துவிட்டு, அரசாங்கத்திடமிருந்து கல்வி உதவிப் பணம் வராது தங்கள் படிப்பையும் வாழ்வையுரம் தொடர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அரசாங்கமோ, கல்லூரி நிர்வாகமோ அதைப்பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.

மாறாக, மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கல்வி உதவிக் கட்டணங்களைக் காலத்தே செலுத்தாமலும், அவர்கள் கல்லூரிகளுக்குக் கட்ட வேண்டிய கட்டணங்களை உயர்த்தியும், விடுதிகளை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தியும், உணவு உண்டு வந்த உணவுக்கூடங்களை (mess) மூடியும், எல்லாவற்றிற்கும் மேலாக, நாடு முழுதும் தங்களுடைய புதிய தேசியக் கல்விக் கொள்கையால் அவர்களை அறைந்து கொண்டும் இருக்கின்றன.

பெண்கள் கல்லூரிக்கு வந்து உயர்கல்வி பயில்வது என்பது இந்தியா போன்ற ஒரு நாட்டில் மிகவும் சிரமம். ஐஸ்வர்யா சிரமங்களையெல்லாம் தாங்கிக்கொண்டு, டெல்லி வந்து ஆயிரக்கணக்கான கனவுகளுடன் படிப்பைத் தொடர்ந்தார். எனினும் அவர் நிர்வாகத்தின் அலட்சியப்போக்கால் கொல்லப்பட்டுவிட்டார். 2020 புதிய கல்விக் கொள்கையானது, பணம் இல்லாதவர்கள், கல்வியைத் தொடர உரிமையற்றவர்கள் என்று கூறுகிறது.

“மோடி அரசால் நிறுத்திவைக்கப்பட்ட கல்வி உதவித்தொகை” : ரோகித் வெமுலாவை தொடர்ந்து 
மாணவி ஐஸ்வர்யா தற்கொலை!
Kamal Kishore

மத்திய பா.ஜ.க அரசு இந்திய மாணவர்களுக்கும், குடிமக்களுக்கும் தன்னுடைய செயல்கள் மூலமாக கிரிமினல்தனமாக நடந்து கொண்டிருக்கிறது என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கருதுகிறது. அரசமைப்புச்சட்டத்தின் கீழான நீதி மற்றும் சமத்துவக் கொள்கை அனைத்தையும் அரித்து வீழ்த்திக்கொண்டிருக்கிறது.

அம்மாணவிக்கும் அவர்தம் குடும்பத்திற்கும் நீதி வழங்க வேண்டும். அவருக்கு அளிக்கப்பட வேண்டிய கல்வி உதவிப்பணத்தை முழுமையாக அவர்தம் குடும்பத்தினருக்கு அளித்திட வேண்டும். அரசாங்கத்திடமிருந்து மேலும் கூடுதலாக இழப்பீட்டுத் தொகையும் பெற்று அளித்திட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories