இந்தியா

பா.ஜ.க அரசு கருதும் இந்திய கலாச்சாரம் எது? - ஆய்வுக் குழு உறுப்பினர்களின் பின்னணி என்ன?

12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்போதிருக்கும் இந்தியாவே இல்லை. அதில் என்ன இந்தியக் கலாச்சாரம் இருந்திருக்கும்?

பா.ஜ.க அரசு கருதும் இந்திய கலாச்சாரம் எது? - ஆய்வுக் குழு உறுப்பினர்களின் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியக் கலாச்சாரத்தின் ஆரம்பம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை மத்திய பா.ஜ.க அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவில், பெண்கள் இல்லை, சிறுபான்மையினர் இல்லை, தலித்துகள் இல்லை, வடகிழக்கு மாநிலப் பிரதிநிதிகள் இல்லை என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். இந்தக் குழுவில் தமிழர்கள் இல்லையே என்று எடப்பாடிக்கே ரோஷம் வரக்கூடிய அளவிற்கு நிலைமை போய்விட்டது.

இந்தியக் கலாச்சாரம் பற்றி ஆய்வு செய்யப் போகிறோம் என்று சொல்கிறீர்கள்? மேற்கண்ட இந்தப் பிரதிநிதிகள் எல்லாம் இல்லாமல் எப்படி இந்தியக் கலாச்சாரத்தை ஆய்வு செய்வது? என்று ஏகப்பட்ட கேள்விகள்...

அந்தக் குழுவில் இல்லாதவர்களை விடுங்கள். இருப்பவர்கள் யார் என்று பார்ப்பதுதான் முக்கியம். அதைப் பார்ப்பதற்கு முன்பு இவர்கள் ஆராய்ச்சி செய்ய இருக்கும் இந்தியக் கலாச்சாரம் பற்றி கொஞ்சம் பேசி விடுவது நல்லது.

இந்தியாவில் தமிழ்நாட்டிற்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது. ஆந்திராவிற்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது. கேரளாவிற்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களுக்கென்று, காஷ்மீருக்கென்று, உ.பிக்கென்று இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு கலாச்சாரம் என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டது.

இந்தியாவில் ஏராளமான மொழிகள் உள்ளன. 8வது அட்டவணையில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை மட்டுமே 22. அசாம், வங்கம், போடோ, டோக்ரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மராத்தி, மணிப்பூரி, மைதிலி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சாந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது என 22 மொழிகள் அந்த அட்டவணையில் இருக்கின்றன. இதில் சமஸ்கிருதத்தைத் தவிர பிற 21 மொழிகளையும் ஏராளமான மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மொழிக்காரர்களுக்கும் ஒவ்வொரு விதமான பண்பாடு இருக்கிறது. இந்தப் பண்பாடுகளில் எதை இந்தியப் பண்பாடு என்று சொல்வது? இது தவிர இந்தியாவில் பல்வேறு மதங்கள் உள்ளன. ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு விதமான பழக்க வழக்கம் கலாச்சாரம் இருக்கிறது. அதில் எதை இந்தியக் கலாச்சாரம் என்பது?

முதலில் இந்தியக் கலாச்சாரம் என்று ஆய்வு செய்யப் போகிறோம் என்று சொல்வதே அபத்தம். இல்லாத ஒன்றை எப்படி ஆய்வு செய்ய முடியும்? இந்தியா என்பது ஒரு நிலப்பரப்பு அவ்வளவுதான். இந்த நிலப்பரப்புக்குள் பல்வேறு விதமான பண்பாடுகள் உள்ளன. ஒரு பண்பாட்டுக்கும் மற்றொரு பண்பாட்டுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இத்தனை விதமான பண்பாடுகள் இருந்தாலும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக ஒருவர் பண்பாட்டை ஒருவர் மதித்து நடப்பது என்ற பண்பாடு வேண்டும் என்று சொல்கிறோமல்லவா? அதை வேண்டுமானால் இந்தியப் பண்பாடு என்று சொல்லாம்.

பிறகு எதற்குத்தான் இந்த ஆராய்ச்சி?

அவர்கள் ஏற்கனவே ஒரே நாடு ஒரே ரேஷன், ஒரே மொழி, ஒரே கல்வி என்ற ஒரே ஒரே என்று பல ஒரே சொல்லிவிட்டார்கள். இப்போது ஒரே கலாச்சாரம் என்று சொல்ல வருகிறார்கள். அதற்குத்தான் இவ்வளவு ஏற்பாடுகளும். அவர்கள் சொல்ல வரும் அந்த ஒரே கலாச்சாரம் என்பது என்ன? அதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவர்கள் குழுவில் போட்டிருக்கும் ஆட்களைப் பார்த்தால் போதும். அந்தக் குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் மொத்தம் 16 பேர்.

பா.ஜ.க அரசு கருதும் இந்திய கலாச்சாரம் எது? - ஆய்வுக் குழு உறுப்பினர்களின் பின்னணி என்ன?

அதில் தொல்பொருள் ஆய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் மூன்று பேர்

1.கே.என்.தீட்ஷித், தலைவர், இந்திய தொல்பொருள் ஆய்வு அமைப்பு, புதுடெல்லி

2.ஆர்.எஸ்.பிஷ்ட், முன்னாள் இணை பொது இயக்குனர், இந்திய தொல்பொருள் ஆய்வு அமைப்பு

3.பி.ஆர்.மணி, பொது இயக்குனர், தேசிய அருங்காட்சியகம், புதுடெல்லி; முன்னாள் கூடுதல் பொது இயக்குனர், இந்திய தொல்பொருள் ஆய்வு அமைப்பு

ஹெரிடேஜ் எனப்படும் பாரம்பரியம் தொடர்பானவர் ஒருவர்

1.பேராசிரியர் மக்கன்லால், இயக்குனர், டெல்லி பாரம்பரிய மேலாண்மை பயிலகம், விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளை, புதுடெல்லி

புவியியல் துறையைச் சேர்ந்தவர் ஒருவர்

டாக்டர் ஜி.என்.ஸ்ரீவத்ஸவா, முன்னாள் கூடுதல் இயக்குனர், இந்தியப் புவியியல் ஆய்வு மையம்

மொழியியல் துறையைச் சேர்ந்த ஒருவர்

பேராசிரியர் ஆர்.சி.ஷர்மா, தலைவர், மொழியியல் துறை, டெல்லிப் பல்கலைக்கழகம்

மானுடவியலாளர் ஒருவர்

பேராசிரியர் கே.கே.மிஸ்ரா, டீன், மானுடவியலாளர், ஹைதராபாத் பல்கலைக்கழகம், இந்திய மானுடவியல் ஆய்வு மையம்

கலாச்சாரத்துறை அமைச்சகத்தில் இருந்து ஒரு பிரதிநிதி

இந்திய தொல்பொருள் துறை ஆய்வு மையத்தில் இருந்து ஒரு பிரதிநிதி

கனடாவில் இருந்து ஒரு விஞ்ஞானி

பேராசிரியர் அஸாத் கவுஷிக், விஞ்ஞானி, சர்வதேச சிந்தனையாளர், கனடா

சமஸ்கிருத வல்லுனர்கள் 5 பேர்

1.டாக்டர் ரமேஷ்குமார் பாண்டே, துணைவேந்தர், ஸ்ரீலால் பகதூர் சாஸ்த்திரி ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யாபீடம், புதுடெல்லி

2.நீதிபதி டாக்டர் முகுந்த்கம் ஷர்மா, வேந்தர், லால்பகதூர் சாஸ்த்ரி சமஸ்கிருத வித்யாபீடம், டெல்லி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி

3.பேராசிரியர் பி.என். சாஸ்த்ரி, துணைவேந்தர், ராஷ்ட்ரிய சமஸ்கிருத ஷன்ஸ்தன், புதுடெல்லி

4.டாக்டர் பல்ராம் சுக்லா, சமஸ்கிருதத் துறை, டெல்லி பல்கலைக்கழகம்

5.பேராசிரியர் சந்தோஷ் சுக்லா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி

இந்த ஐந்து பேரில் மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கடைசியாக உள்ள சந்தோஷ் சுக்லாவை வெறும் பேராசிரியர் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவரும் எந்தப் பேராசிரியர் என்று பார்த்தால், சமஸ்கிருதப் பேராசிரியர்தான். ஐந்து பேர் சமஸ்கிருத ஆட்கள் என்று போட்டால் கொஞ்சம் ஓவராகத் தெரியும் என்று ஒருவரை வெறும் பேராசிரியர் என்று மறைத்திருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோரையும் விட இந்தக் குழுவில் இன்னொரு மிக முக்கியமான நபர் இடம் பெற்றிருக்கிறார். இவர்கள் சொல்ல வரும் இந்தியக் கலாச்சாரம் என்றால் என்ன என்று மிகத் துல்லியமாக ஆய்வு செய்து சொல்வதற்குரிய அத்தனை தகுதியும் ஒருங்கே படைத்தவர் அவர்தான்.

எம்.ஆர்.ஷர்மா, தலைவர், சங்மார்க், உலக பிராமண கூட்டமைப்பு, இந்தியா, புதுடெல்லி

இவரையும் சமஸ்கிருதக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். மொத்தம் 16 பேரில் 6 பேர் சமஸ்கிருத ஆட்கள். மீதமுள்ள பத்துப் பேரில் இரண்டு பேர் அரசுப் பிரதிநிதிகள். மீதமுள்ள எட்டுப் பேரில் ஒருவர் வெளிநாட்டுக்காரர். மீதமுள்ள 7 பேரில் புவியியல், தொல்பொருள், மானுடவியல் ஆய்வாளர்கள் இருப்பதால் அவர்கள் ஓரளவுக்கு ஆராய்ச்சி செய்ய முடியும் என்று நம்பலாம். ஆனால் அவர்களும் என்ன ஆராய்ச்சியைச் செய்வார்கள்? 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா எப்படி இருந்தது என்று ஆராய்ச்சி செய்தால் என்ன மிஞ்சும்? 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்போதிருக்கும் இந்தியாவே இல்லை. அதில் என்ன இந்தியக் கலாச்சாரம் இருந்திருக்கும்?

என்ன இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? அவர்கள் எதை இந்தியக் கலாச்சாரம் என்று சொல்லப்போகிறார்கள் என்று அவர்கள் அமைத்திருக்கும் குழுவில் உள்ள ஷர்மாக்களையும் சாஸ்திரிகளையும் சமஸ்கிருதப் பண்டிதர்களையும் பார்த்த உடனேயே தெரிந்துவிட்டதே. இதற்கு எதற்குக் குழு ஆராய்ச்சி எல்லாம்?!

banner

Related Stories

Related Stories