இந்தியா

புதிய வேளாண் மசோதா இடைத்தரகர்களுக்கும், பெரு முதலாளிகளுக்குமே ஆதரவாக உள்ளது - நாராயணசாமி குற்றசாட்டு!

தமிழகத்தில் 13 மாணவர்கள் நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்திருக்கிறார்கள். இதற்கு மத்திய பா.ஜ.க. அரசுதான் பொறுப்பு என முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதிய வேளாண் மசோதா இடைத்தரகர்களுக்கும், பெரு முதலாளிகளுக்குமே ஆதரவாக உள்ளது -  நாராயணசாமி குற்றசாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விவசாயிகளுக்கு பயன்தராத வேளாண் சட்டங்களை இயற்றுவதை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்ததன் விவரம் பின்வருமாறு:-

“மத்திய அரசு வேளாண் துறையை பாதுகாப்பதாக கூறி 2 சட்ட மசோதாக்களை கொண்டு வந்து உள்ளது. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் அளிக்க கூடிய வகையில் இல்லை. இடைத்தரகர்கள், பெரிய முதலாளிகள், பெரிய வியாபாரிகளுக்கு மட்டுமே இந்த சட்டங்கள் பாதுகாப்பாக இருக்கிறது.

சட்டத்தை பார்க்கும் போது எல்லாமே வியாபார மையமாக உள்ளது. விவசாயிகளை பாதுகாப்பதற்காக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. விலையை விவசாயிகள்தான் நிர்ணயிக்க வேண்டும். இடைத்தரகர்களோ வியாபாரிகளோ நிர்ணயிக்க முடியாது. இதை மாற்றி அமைக்கதான் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

மத்திய உணவு பதனிடுதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல்  
மத்திய உணவு பதனிடுதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல்  

ஆனால் பெரிய அளவில் மார்க்கெட்டிங், பெரிய முதலாளிகளுக்கு பாதுகாப்பாக சட்டம் உள்ளதால்தான் எதிர்கட்சிகள் எதிர்க்கின்றன. இந்த சட்டத்தை எதிர்த்து பா.ஜ.க கூட்டணியில் உள்ள அகாலிதளம் கட்சியைச் சேர்ந்தவர் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருப்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும். பஞ்சாப், அரியானா மாநிலங்களில் சிறப்பாக விவசாயம் செய்யக்கூடிய பகுதிகள். இதனால்தான் காங்கிரஸ், அகாலிதளம் எதிர்க்கிறது. வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் பாடத்திட்டத்தில் தேர்வு நடக்கிறது. ஆனால் மாநிலங்களில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் படிக்கின்றனர். தமிழகத்தில் 13 மாணவர்கள் நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்திருக்கிறார்கள். இதற்கு மத்திய பா.ஜ.க. அரசுதான் பொறுப்பு. இதை புரிந்துக் கொள்ளாமல் நீதிமன்றத்தை காட்டுகின்றனர். நீதிமன்றத்தில் மத்திய அரசு சொல்வதைதான் சொல்வதால் அதை காரணம் காட்டுவது அர்த்தம் அற்றது. நீட் தேர்வை எந்த மாநிலம் விரும்புகிறதோ அங்கு தேர்வு நடத்தலாம். எந்த மாநிலம் விரும்பவில்லையோ அங்கு விட்டு விடலாம்.

புதுச்சேரி மாநிலத்தில் நீட் தேர்வு இல்லாமல் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டனர். இதனால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட என அனைத்து தரப்பினருக்கும் இடம் கிடைத்தது. நகரப்புறம் மட்டுமின்றி கிராமப்புற மாணவர்களுக்கும் இடம் கிடைத்தது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்கு இடம் கிடைக்காததால் தான் எதிர்க்கிறோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

banner

Related Stories

Related Stories