இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் 9 ஆயிரத்தை கடந்து வருகிறது. இப்படியான இக்கட்டான சூழல் நிலவும் வேளையில், மத்திய மோடி அரசோ, ஊரடங்கில் தளர்வுகளை கொண்டு வந்து மக்களை வைரஸ் பாதிப்புக்குள் தள்ளி வருகிறது.
அறிகுறியற்ற தொற்று பாதிப்பாக இருப்பதால், மக்களும் ஏதும் அறியாமல் தொழில் ஈட்டுவதற்காக வெளி வரவேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கெனவே பல்வேறு ஆய்வறிக்கைகள் இந்தியாவில் ஜூலை , ஆகஸ்ட் மாதத்திற்குள் கொரோனா பாதிப்பு 10 லட்சத்துக்கு அதிகமாக பதிவாகும் என தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டு ஊரடங்கு தளர்வையும், இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வையும் ஒப்பிடப்பட்ட வரைபடத்தை குறிப்பிட்டு, தோல்வி அடைந்த ஊரடங்குக்கு இதுவே சாட்சி என மோடி அரசை கடுமையாக சாடியுள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
ஏற்கெனவே, நான்கு கட்ட ஊரடங்கு என்பது மிகப்பெரிய தோல்வி. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மோடி அரசாங்கத்திடம் Plan B ஆக என்ன திட்டம் உள்ளது? எப்படி சமாளிக்க இருக்கிறீர்கள் என்று கேள்விகணைகளை தொடுத்திருந்தார் ராகுல் காந்தி.
அதேபோல, ஊரடங்கை தளர்த்திய பின்பு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது இந்தியாவில் மட்டும்தான் எனவும் ராகுல் காந்தி சாடியிருந்தார். தற்போது அதனை மெய்ப்பிக்கும் வகையில், ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மனி என நான்கு நாடுகளில் ஊரடங்கின் போதும், தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்புக்கும், இந்தியாவின் நிலையையும் ஒப்பிட்டு ட்விட்டரில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
இது முழுக்க முழுக்க கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மோடி அரசின் தோல்வியடைந்த செயல்பாட்டுக்கு உதாரணம் என்று கடுமையாக ராகுல்காந்தி சாடியுள்ளார்.