இந்தியா

“புலம்பெயர் தொழிலாளர்களை மீட்க ஒடிசா அரசு செய்ததை எடப்பாடி அரசு செய்யாதது ஏன்” : முத்தரசன் சாடல்!

கடந்த 40 நாட்களுக்கும் மேலாக வேலையிழந்து, வருமானம் இல்லாமல், சாப்பாட்டிற்கே கை ஏந்தி நிற்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பது இரக்கமற்ற செயல் என முத்தரசன் விமர்சித்துள்ளார்.

“புலம்பெயர் தொழிலாளர்களை மீட்க ஒடிசா அரசு செய்ததை எடப்பாடி அரசு செய்யாதது ஏன்” : முத்தரசன் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அகதி நிலைக்கு தள்ளப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் ஊர் திரும்ப ரயில் மற்றும் பேருந்துக் கட்டணங்களை மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரானா வைரஸ் பெருந்தொற்று பரவல் காரணமாக மார்ச் 24 முதல் நாடு முழுவதும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த 40 நாட்களாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும்பாடு வார்த்தையில் வடிக்க முடியாத துயரமாகும்.

மும்பை மாநகரில் உள்ள தாராவி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரிதவித்து நிற்கும் ஆயிரக்கணக்கான தமிழகத் தொழிலாளர்கள் ஊர் திரும்ப மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்து உதவ வேண்டும் என கண்ணீர் விட்டு கதறி வருகிறார்கள்.

திருப்பூர் மாநகரில் உள்ள ஒடிஷா மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களுக்கு உதவிட, ஒடிஷா மாநில அரசு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை சிறப்பு அலுவலராக அனுப்பி வைத்துள்ளது. தமிழ்நாடு அரசு இப்படி ஏற்பாடு எதுவும் செய்திருப்பதாக தெரியவில்லை.

“புலம்பெயர் தொழிலாளர்களை மீட்க ஒடிசா அரசு செய்ததை எடப்பாடி அரசு செய்யாதது ஏன்” : முத்தரசன் சாடல்!

மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம், நாட்டுக்கு வெளியே பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் ஊர் திரும்ப வேண்டும் என்ற உணர்வோடு காத்துக்கிடக்கிறார்கள். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் ஊர் திரும்ப சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் அனுமதிக்கப்படும் மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.

சிறப்பு ரயில் பயணத்திற்கு அதிவிரைவு தொடர் வண்டிக் கட்டணத்துடன் கூடுதலாக 50 ரூபாய் செலுத்த வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக வேலையிழந்து, வருமானம் இல்லாமல், சாப்பாட்டிற்கே கை ஏந்தி நிற்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பது இரக்கமற்ற செயலாகும்.

அமெரிக்கா அரசின் தலைவர் டொனால்டு ட்டிரம் குஜராத்தில் வரவேற்க ரூபாய் 100 கோடி செலவிட்ட மத்திய அரசு, கோவிட் 19 நோய் பெருந்தொற்று கால உதவிக்காக பி.எம் கேர்ஸ் என்ற பெயரில் பிரதமர் திரட்டும் நிதிக்கு இந்திய ரயில்வே நிர்வாகம் ரூபாய் 150 கோடி பங்களிப்பு செலுத்தியுள்ள நிலையில், அகதி நிலைக்கு தள்ளப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் ஊர் திரும்ப ரயில் மற்றும் பேருந்துக் கட்டணங்களை மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories