இந்தியா

“இந்த மனிதாபிமானமற்ற; அசாதாரணச் சூழலுக்கு தீர்வு எங்கே?” : பிரதமருக்கு பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி!

9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு விளக்குகளை ஏந்த வேண்டும் என்பதற்கு என்ன அறிவியல் அடிப்படை? என பிரதமருக்கு கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

“இந்த மனிதாபிமானமற்ற; அசாதாரணச் சூழலுக்கு தீர்வு எங்கே?” : பிரதமருக்கு பிரின்ஸ்  கஜேந்திரபாபு கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிரித்துள்ளது. உயிர்பலிகளும் அதிகரித்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உத்தரவைக் கொண்டுவந்துள்ளது. பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

ஆனாலும், அரசு கொரோனாவை தடுக்கும் நடவடிக்கையில் இன்னும் தீவிரமாக இயக்கவில்லை என பலரும் விமர்சிக்கின்றனர். மாநிலங்களுக்கு முறையாக கொரோனா நிதி ஒதுக்கவில்லை என குற்றச்சாடும் எழுந்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் அறிவிப்பு கட்சி தலைவர்கள், ஜனநாயக அமைப்பினர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வியாளர்கள் பலரும் மோடி அரசின் செயல்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்துவருகின்றனர்.

அதன்படி, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அந்த உடல் ஹைதராபாத் காந்தி மருத்துவமனை பிணவறைக்கு மாற்றப்பட்டது. உடற்கூறு ஆய்வுக்கு பிறகு ஒரு ஆம்புலன்ஸ் மூலம் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டது. அந்த உடல் தமிழக இளைஞர் லோகேஷ் எனும் வாலிபருடையது!

“இந்த மனிதாபிமானமற்ற; அசாதாரணச் சூழலுக்கு தீர்வு எங்கே?” : பிரதமருக்கு பிரின்ஸ்  கஜேந்திரபாபு கேள்வி!

லோகேஷ் கடும் உடல் சோர்வு காரணமாகவும் உடலின் நீர்ச் சத்து முற்றிலும் வற்றிய காரணத்தாலும் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என தெலுங்கானா காவல்துறை நம்புகிறது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு லோகேஷ் மற்றும் ஏனைய இளைஞர்கள் தமது இருப்பிடத்திலிருந்து செல்லுமாறு பணிக்கப்படிருக்கலாம் எனவும் லோகேஷ் எவ்வளவு தூரம் நடந்து வந்தார் என்பதும் தெரியவில்லை எனவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

லோகேஷின் உடல் வெள்ளி காலை பள்ளிப்பாளையத்தில் உள்ள அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என நாமக்கல் ஆட்சியர் கூறினர். லோகேஷின் தந்தை ஒரு பஞ்சாலையில் காவலாளியாகப் பணியாற்றுகிறார். அவரது தாய் உள்ளூரில் உள்ள ஒரு துணிக்கடையில் பணியாற்றுகிறார்.”

இது 22 வயதுடைய லோகேஷ் எனும் வாலிபரின் மரணம் பற்றி ஒரு பத்திரிக்கையின் செய்தி! லோகேஷ் டிப்ளமா படித்தவர். தமிழ் நாடு நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிபாளையத்திலிருந்து மகாராஷ்ட்ராவில் உள்ள வார்தாவிற்குப் பணியாற்றச் சென்ற இடம் பெயர் உழைப்பாளி.

ஊரடங்கிற்குப் பிறகு லோகேஷ் ஊர்திரும்பி தமது பெற்றொருடன் இருக்க போக்குவரத்து ஏற்பாடு செய்ய இயலாத அரசாங்கம் அவரது உயிரற்ற உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கும் அளவிற்காவது இரக்கம் காட்டியது!

“இந்த மனிதாபிமானமற்ற; அசாதாரணச் சூழலுக்கு தீர்வு எங்கே?” : பிரதமருக்கு பிரின்ஸ்  கஜேந்திரபாபு கேள்வி!

நாம் லோகேஷின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக இருந்தால், ஆங்கில மாதத்தின் 4வது மாதத்தில் 5ம் தேதியன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு விளக்குகளை ஏற்றுங்கள் என நம்மிடம் கூறினால் நமது உணர்வு என்னவாக இருக்கும்?

மரணம் என்பது பல கனவுகளையும் இலட்சியங்களையும் சுமந்து கொண்டிருந்த இந்த இளைஞருக்கு மட்டும் நிகழவில்லை. கடும் வெயிலில் உணவு தண்ணீர் இல்லாமல் நடக்க வேண்டிய கொடுமை என்பது இந்த இளைஞருக்கு மட்டும் அல்ல;

இடம் பெயர் உழைப்பாளிகளாக உள்ள பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் பச்சிளம் குழந்தைகளும் இப்படி தமது சொந்த ஊர்களுக்கு நடந்து சென்ற கொடுமைகள் அரங்கேறின.

உத்தரபிரதேசத்தில் இப்படி நடந்து வந்த சில உழைப்பாளிகள் மீது வாகனங்களில் பீச்சப்படும் கிருமி நாசினியைச் சுமத்தப்பட்டதும் அதன் விளைவாகச் சிலருக்குப் பல பக்க விளைவுகள் உருவானதும் பத்திரிக்கைகளில் செய்தியாக வந்தது.

கோவிட் 19 வைரஸ் இதுவரை சுமார் 90 உயிர்களைப் பறித்துள்ளது. அதே சமயம் ஊரடங்கு 22க்கும் அதிகமான உயிர்களை பலிவாங்கியுள்ளது. இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகுமோ எனும் அச்சம் உள்ளது.

“இந்த மனிதாபிமானமற்ற; அசாதாரணச் சூழலுக்கு தீர்வு எங்கே?” : பிரதமருக்கு பிரின்ஸ்  கஜேந்திரபாபு கேள்வி!

ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பு? ஊரடங்கு ஒரு திட்டமிடப்படாத அசாதாரண அறிவிப்பு. பொது போக்குவரத்து உட்பட அனைத்தும் நிறுத்தப்பட்டது. 21 நாட்கள் ஊரடங்கிற்கு வெறும் 4 மணி நேரம் மட்டுமே கால அவகாசம் தரப்பட்டது.

முறைசாராத் தொழில்களில் பணியாற்றும் லட்சக்கணக்கான இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் கதி என்ன? இவர்கள் கடுமையாக உழைத்துச் சிறிது பணத்தைச் சேமித்து வீடுகளுக்குக் கொண்டு செல்லலாம் என திட்டமிட்டு இருப்பர். ஆனால் இவர்கள் திடீரென வேலை இழந்துள்ளனர். பலருக்கு அவர்களின் ஊதியம் கிடைக்கவில்லை.

அவர்களது குடும்பங்கள் வெகு தூரத்தில் கிராமத்தில் இருக்கும். அவர்களது வருமானத்தையும் தாங்கள் நேசிக்கும் குடும்ப உறுப்பினர்களையும் எதிர்பார்த்து அந்த குடும்பங்கள் காத்திருக்குமே! ஒவ்வொரு கிராமத்திலும் வங்கிகளின் ஏ.டி.எம். உள்ளதா? இந்த ஏழைகளிடம் கிரெடிட் அல்லது ஏ.டி.எம். அட்டைகள் உள்ளதா?

சமூகத்தின் அடித் தட்டில் உள்ள இந்த முறைசாரா மற்றும் இடம் பெயரும் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டிய தொழிலாளர் நலப் பிரிவு, சமூக நலப் பிரிவு அல்லது வேறு பல பிரிவுகள் ஏன் இந்த ஊரடங்கு ஏற்படுத்தக்கூடிய பின்விளைவுகள் குறித்து அரசிடம் சொல்லவில்லை? அல்லது அவர்களைக் கலந்து ஆலோசிக்காமலேயே ஊரடங்கு அறிவிக்கப்பட்டதா?

“இந்த மனிதாபிமானமற்ற; அசாதாரணச் சூழலுக்கு தீர்வு எங்கே?” : பிரதமருக்கு பிரின்ஸ்  கஜேந்திரபாபு கேள்வி!

தேசம் விடுதலை பெற்று 72 ஆண்டுகள் ஆகியும் இந்த மனிதாபிமானமற்ற சூழல் உருவாகத்தான் பகத்சிங் போன்றோர் தமது உயிரைத் தியாகம் செய்தனரா? மனித உரிமைகளுக்கு எதிராக சாதாரண மக்களை மிருகத்தனமாகத் தாக்கவும் மோசமான தண்டனைகளை வழங்கவும் காவல் துறைக்கு எந்த சட்டம் அதிகாரம் கொடுக்கிறது?

எந்த ஒரு ஜனநாயக நாகரிக சமூகத்திலும் இது நடக்குமா? அத்தகைய மனித விரோத செயல்கள் அனைவர் கண் முன்னே நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அரசியல் சட்டம் 14 மற்றும் 21 பிரிவுகளுக்கு இது எதிரானது இல்லையா?

ஊரடங்கின் பொழுது அடிப்படை உரிமைகள் செயல் இழந்துவிடுமா? இத்தகைய பல கேள்விகளுக்கு எங்கு பதில் கிடைக்கும்? அசாதாரணச் சூழல்களுக்கு அசாதாரண நடவடிக்கைகள் தேவை எனக் கூறப்படுகிறது. ஆனால் அசாதாரண நடவடிக்கைகளுக்கு அசாதாரணத் தயாரிப்புகளும் மனிதாபிமான அணுகுமுறையும் தேவை என ஏன் உணரப்படவில்லை?

“கருணை என்பது செங்கோலுக்கும் மேலானது. அது மன்னனின் இதயத்தில் உச்சியில் இடம் பெற்றிருக்க வேண்டும். அது கடவுளின் குணம். பூமியை ஆள்வோர்கள் நீதியைக் கருணையுடன் அணுகும் பொழுது, கடவுளையே வெளிப்படுத்துவதாக அமையும்” இது மகத்தான படைப்பாளி ஷேக்ஸ்பியரின் வார்த்தைகள்.

“இந்த மனிதாபிமானமற்ற; அசாதாரணச் சூழலுக்கு தீர்வு எங்கே?” : பிரதமருக்கு பிரின்ஸ்  கஜேந்திரபாபு கேள்வி!

ஆனால் இங்கு என்ன நடக்கிறது? ஆயிரக்கணக்கான தெரு வணிகர்கள், லட்சக்கணக்கான முறைசாரா தொழிலாளர்கள், இடம் பெயர் உழைப்பாளிகள் ஆகியோரின் வாழ்க்கை ஒரே அறிவிப்பில், திட்டமிடப்படாத அறிவிப்பில் நிலைகுலைந்து போயுள்ளது.

அவர்கள் கருணையை எதிர்பார்த்துக் கதறுகிறார்கள். எங்கே அந்த கருணை? கண்ணுக்குத் தெரியவில்லை! எப்படி உயிர் வாழ்வது? மனித தன்மானத்தை எப்படிக் காத்துக் கொள்வது? ஊரடங்கிற்குப் பிறகு என்ன நடக்கும்? வாழ்வின் கதி என்ன? யார் பாதையைக் காட்டுவார்கள்? யார் உத்தரவாதம் தருவார்கள்? தேசத்தின் எதிர்காலத்துக்கு எவரிடம் திட்டம் உள்ளது?

அரசியல் சட்டத்தின் அடிப்படையில் ஆளும் அரசாங்கத்திடம் கேட்பதா? அல்லது மேலே உள்ளதாக கருதப்படும் கண்ணுக்குத் தெரியாத சக்திகளிடம் பதிலைக் கேட்பதா?

நமது அரசியல் சட்டத்தின் 51ஏ (எச்) பிரிவு என்ன சொல்கிறது? இந்திய மக்கள் அறிவியல் பூர்வமான அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் ஆய்வு செய்யும் வழக்கத்தையும் மனிதாபிமானத்தையும் சீர்திருத்தங்களுக்கான மனோபாவத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் இந்த பிரிவு கூறுகிறது.

“இந்த மனிதாபிமானமற்ற; அசாதாரணச் சூழலுக்கு தீர்வு எங்கே?” : பிரதமருக்கு பிரின்ஸ்  கஜேந்திரபாபு கேள்வி!

9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு விளக்குகளை ஏந்த வேண்டும் என்பதற்கு என்ன அறிவியல் அடிப்படை? நமது ஒற்றுமையை வெளிப்படுத்த நாம் நமது கரங்களில் தேசியக் கொடியை ஏந்துகிறோம். நாம் அனைவரும் ஒன்றுதான் என நிலைநாட்ட “இந்திய மக்களாகிய நாம்...” எனும் பொன்னான வாசகங்களுடன் தொடங்கும் அரசியல் சட்டத்தை உயர்த்திப் பிடிக்கிறோம்.

இந்தியாவின் தேசிய கீதத்தை ஒரே குரலில் பாட வேன்டும் என்றுதான் நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம். இப்பொழுது திடீரென நமது ஒற்றுமையைக் காட்ட 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு விளக்குகளை ஏந்துமாறு அறிவுறுத்தப்படுகிறோம்.

கோவிட் 19 வைரசுக்கு இது வரை மருந்தோ அல்லது தடுப்பூசியோ இல்லை என கூறப்படுகிறது. மருத்துவ ஆராய்ச்சியின் படி இந்த வைரசுக்கு எதிராக மிக முக்கியமாக உடலில் எதிர்ப்பு சக்தி தேவை என நிலை நாட்டப்பட்டுள்ளது. எதிர்ப்பு சக்தி செறிவூட்டப்பட்ட சத்தான உணவு மூலம்தான் உருவாகும். இத்தகைய சத்தான உணவு நாம் அனைவருக்கும் உத்தரவாதப்படுத்தி விட்டோமா?

“இந்த மனிதாபிமானமற்ற; அசாதாரணச் சூழலுக்கு தீர்வு எங்கே?” : பிரதமருக்கு பிரின்ஸ்  கஜேந்திரபாபு கேள்வி!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள லோகேஷ் குடும்பத்துக்கு லோகேஷ்தான் வெளிச்சம் தரும் விளக்கு. ஆனால் எவ்விதத் திட்டமிடலும் இல்லாத ஊரடங்கு மூலம் அந்த விளக்கு அணைக்கப்பட்டு விட்டது.

எங்கும் யாரும் இதற்கு மன்னிப்போ அல்லது வருத்தமோ தெரிவிக்கவில்லை. லோகேஷ் போன்ற உழைப்பாளிகளின் துன்பங்களை அகற்ற எவ்வித அறிவிப்புகளும் இல்லை. எனினும் ஆங்கில 4 வது மாதத்தில் 5ம் தேதி அன்று 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு விளக்கு ஏற்ற அறிவுறுத்தப்படுகிறோம்.

நமது இதயங்களில் எதிர்காலம் குறித்து பயம் தோன்றியுள்ளது. நமது சக உழைப்பாளிகளின் நிலைமை மனதில் கடும் வேதனையை உருவாக்கியுள்ளது. கைகள் நடுங்குகின்றன. இந்த நடுங்கும் கைகள் மூலம் எப்படி 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு விளக்குகளை ஏந்துவது?

இந்திய அரசியல் சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நமது அரசாங்கத்திடம் எங்களது கேள்விகளைச் சமர்ப்பிக்கிறோம். அசாதாரண வைரஸ் உருவாக்கியுள்ள அசாதாரணச் சூழலில் பதில்களை எதிர்பார்க்கிறோம்.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை உறுப்பினர்களான நாங்கள் எங்களது கோரிக்கைகளை எங்களது அரசாங்கத்திடம் தான் வைக்க முடியும். மேலுலகத்திற்கு அல்ல!

ஒரு கையில் கொடியையும் இன்னொரு கையில் இந்திய அரசியல் சட்டத்தையும் ஏந்தி மட்டுமே நாங்கள் எங்களது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவோம்! எங்களது நிலைப்பாட்டை சக இந்தியர்கள் புரிந்து கொள்வார்கள் என நாங்கள் நம்புகிறோம். இந்தியா நீடுழி வாழ்க! இந்தியர்களின் ஒற்றுமை நீடூழி வாழ்க! பன்முகக் கலாச்சாரம், பன்முக மொழிகள், பன்முகத் தேசிய இனங்கள் அனைத்தும் நீடூழி வாழ்க!” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories