இந்தியா

“மத வன்முறைகள் மேலும் பொருளாதாரத்தை சீர்குலைக்கும்” - மோடி ஆட்சியால் எரிச்சலடையும் உலக முதலீட்டாளர்கள்!

ட்ரம்ப்பின் வருகையின் போது டெல்லியில் நடந்த வன்முறைகள் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் என முதலீட்டு நிறுவனங்களின் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

“மத வன்முறைகள் மேலும் பொருளாதாரத்தை சீர்குலைக்கும்” - மோடி ஆட்சியால் எரிச்சலடையும் உலக முதலீட்டாளர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருந்தார். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது இந்துத்வா கும்பல் நடத்திய கலவரம் மிகப் பெரிய வன்முறையாக வெடித்தது.

இந்த வன்முறையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது இந்தியா மட்டுமல்லாது உலக நாட்டு மக்களையும் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வன்முறை குறித்து உலகத் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் இந்த வன்முறை நடந்ததால் உலக முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டை இந்தியாவில் இருந்து திரும்பப் பெறும் சூழல் உருவாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

“மத வன்முறைகள் மேலும் பொருளாதாரத்தை சீர்குலைக்கும்” - மோடி ஆட்சியால் எரிச்சலடையும் உலக முதலீட்டாளர்கள்!

சுமார் ஒரு வருடம் முன்பு வரை இந்தியா உலகின் மிகவேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடாக இருந்தது. நுகர்வோர் தேவை குறைந்து வரும் நிலையில் மந்தநிலை ஏற்பட்டபோது, கிராமப் புறங்களில் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் வங்கி அமைப்பில் மோசமான கடன் உயர்வு ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தை மிகமோசமாக்கியது.

இந்தச் சூழல் நிலவிய போதும் கூட பிரதமராக மோடியை மீண்டும் மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஆனால் பொருளாதாரத்தை சீர்செய்யாமல், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, இந்து பெரும்பான்மை மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

அதன்விளைவாக உருவான பெரும் வன்முறை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே இந்தியாவின் பிம்பத்தை மாற்றியமைத்துள்ளது. குறிப்பாக கடந்த தேர்தலுக்குப் பின்னர் இந்தியா மீது முதலீட்டாளர்களிடையே ஏமாற்றமும் எச்சரிக்கை உணர்வும் அதிகரித்து வருகிறது.

ஜான் லாவ்
ஜான் லாவ்

இந்திய பொருளாதாரம் குறித்து உலக நாடுகளில் இயங்கி வரும் தலைசிறந்த முதலீட்டு நிறுவனத்தின் முக்கிய தலைவர்களின் கருத்துகளைப் பெற்று Bloomberg செய்தி நிறுவனம் கட்டுரையாக வெளியிட்டுள்ளது.

அந்த செய்தி நிறுவனத்திற்கு, ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்டு 352 பில்லியன் டாலர் நிர்வகித்து வரும் Asia Equities நிறுவனத்தின் தலைவர் ஜான் லாவ் பேட்டி அளித்துள்ளார். அதில், “இந்தியாவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய அரசியல் நகர்வுகள் மற்றும் சட்டங்கள் அரசாங்கத்தை பொருளாதார சீர்திருத்தங்களிலிருந்து திசை திருப்பியுள்ளன. இந்த இடையூறுகள் தெற்காசிய நாட்டிற்கான அளவுகோல்களை குறைக்க வழிவகுத்தது” என எச்சரித்துள்ளார்.

அதேபோல் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் WisdomTree Investments, Inc. என்ற முதலீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியாவில் அதிகரித்து வரும் அரசியல் மற்றும் சமூக பதட்டங்கள் நாட்டின் பொருளாதார மீட்சியை தாமதப்படுத்தும்” என்று கவலை தெரிவித்துள்ளது.

“மத வன்முறைகள் மேலும் பொருளாதாரத்தை சீர்குலைக்கும்” - மோடி ஆட்சியால் எரிச்சலடையும் உலக முதலீட்டாளர்கள்!

அதனையடுத்து 453 பில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கும் வெஸ்டர்ன் அசெட் மேனேஜ்மென்ட் கோ (Western Asset Management Co) என்ற நிறுவனம் கூறுகையில், “அதிக பொருளாதார சீர்திருத்தங்கள் அல்லது அன்னிய நேரடி முதலீட்டில் குறிப்பிட்ட திட்டங்கள் போன்றவை கொண்டுவரப்பட்டாலும் இந்த வன்முறை முதலீட்டாளர்களுக்கு இடையூறாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளது.

இதனிடையே வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்ட அரசியல் ஆலோசனை நிறுவனமாக யூரேசியா குழுமத்தின் ஆய்வாளர் அகில் பெரி கூறுகையில், “அடுத்த ஆண்டு அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் முக்கிய தேர்தல்கள் நடைபெறுவதால், மோடி அரசு அதன் சர்ச்சைக்குரிய சமூக நிகழ்ச்சி நிரலில் கவனம் செலுத்துவதோடு, மேலும் வன்முறையை ஏற்படுத்தும்” என எச்சரித்துள்ளார்.

அதேபோல், நெதர்லாந்து லைடன் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் சைமன் சார்சார்ட் கூறுகையில், “அதிகரித்துவரும் மத பதட்டங்கள் மற்றும் பொருளாதாரம் தடுமாறுவது முதலீட்டாளர்கள் இந்தியாவிலிருந்து பின்வாங்குவதை எளிதாக்கும்.

அமிதேண்டு பாலித்
அமிதேண்டு பாலித்

முதலீட்டாளர்கள் எப்போதும் பிற்போக்குத்தனமான அரசாங்கங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் தற்போதைய கலவரம் அந்த நிலைமையை மாற்றியுள்ளது. அதனால் இந்தியாவில் முதலீடு செய்வது கடினம்.

இந்தியாவில் பொருளாதாரம் மோசமாகச் செயல்படுகிறது என்ற மனநிலை மாற்றியுள்ளது. மோடி ஒரு சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி என்ற கதை அழிந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நிதி அமைச்சகத்திலும் பணியாற்றி, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டில் நிபுணத்துவம் பெற்ற பொருளாதார நிபுணர் அமிதேண்டு பாலித் தெரிவிக்கையில், “ட்ரம்ப் வருகையின்போது டெல்லியில் நடந்த வன்முறைகள் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும். சில முதலீடுகளை உண்மையில் திரும்பப் பெறாவிட்டால் மறு மதிப்பீடு இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்கள் மத அடிப்படையில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை எதிர்த்து வருகின்றனர். இந்தியாவின் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காண்பதற்கான மோடியின் இந்து தேசியவாத அரசாங்கம் இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் வெடிப்பால் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார மந்தநிலை, இப்போது இந்தியாவைப் பாதிக்கத் தொடங்குகிறது. ஆட்டோமொபைல் முதல் மருந்துப் பொருட்கள் வரை அனைத்தையும் வழங்குவதில் இடையூறு ஏற்படுவதால் பொருளாதாரம் மேலும் சிக்கலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories