இந்தியா

“டெல்லி போலிஸாரே உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” : மாணவர்களை சுற்றி வளைத்து தாக்கும் அதிர்ச்சி வீடியோ!

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது மாணவர்கள் மீது போலிஸார் தடியடி நடத்திய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

“டெல்லி போலிஸாரே உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” : மாணவர்களை சுற்றி வளைத்து தாக்கும் அதிர்ச்சி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்தாண்டு டிசம்பர் 15ம் தேதி, டெல்லியில் ஜாமியா மில்லியா பல்கலைக்கழத்தின் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

அந்த வன்முறையில் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களுக்கு காவல்துறையினர் தீவைத்தனர். அதுமட்டுமின்றி போலிஸார் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து, கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி, மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.

அப்போது நூலகத்தில் புத்தகங்களை படித்துக் கொண்டிருந்த பல மாணவர்களை, போலிஸார் லத்தியால் தாக்குதல் நடத்தினர். போலிஸார் முகமூடி அணிந்திருந்ததால் அவர்கள் முக அடையாளங்கள் தெரியவில்லை. மாணவர்கள் மீது போலிஸார் தாக்குதல் நடத்தியதற்கு, நாடு முழுவதும் கடும் பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், நேற்றையதினம் போலிஸார் மாணவர்களை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகின.

இந்த வீடியோவை, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களைக் கொண்ட ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மற்றொரு புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் போலிஸார் மாணவர்களை சுற்றி வளைத்து கொடூரமாகத் தாக்குதல் நடத்துகின்றனர்.

மாணவர்கள் அலறியடித்து ஓடும்போது கதவுகளை பூட்டிக்கொண்டு மாணவர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர். போலிஸார் தாக்குதலுக்கு பயந்து மாணவர்கள் கைகூப்பி தங்களை விட்டுவிடும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனாலும் போலிஸார் தங்களின் தாக்குதலை நிறுத்தக்கொள்ளவில்லை.

ஒருகட்டத்தில் அங்கிருந்த சிசிடிவியில் இந்த சம்பவங்கள் பதிவானதைக் கண்ட போலிஸார் சிசிடிவி கேமராவை குறிவைத்து தாக்கி உடைத்துள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் பதிவான இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலிஸாரின் மிருகத்தனமான தாக்குதலை பலரும் கண்டித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியான பின்னர், “மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய டெல்லி போலிஸாரே உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” எனக்கேட்டு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பல்வேறு கட்சி தலைவர்களும் போலிஸாருக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories