India

#LIVEUpdate | #NPR கணக்கெடுப்பை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என அறிவீப்பீர்களா? - மு.க.ஸ்டாலின் கேள்வி!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on
20 February 2020, 10:07 AM

தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு!

20 February 2020, 09:02 AM

நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க தி.மு.க உறுப்பினர்கள் தயார்! - மு.க.ஸ்டாலின்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “முதலமைச்சர் 10.02.2020 அன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியதாக தெரிவித்துள்ளார். அந்த கடிதத்திற்கான பதில் என்ன என்பதை அறிய விரும்புகிறேன்.

காவிரிப்படுகையில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு மாநில அரசு அனுமதி வழங்கலாம் என்பது இந்த சட்டத்தில் கொண்டு வந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்கள் பாதிக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் துறைமுகம் பைப் லைன், உள்ளிட்டவை இந்த சட்டத்தில் கட்டுப்படாது என்பதையும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் இந்த சட்டத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்கள் வராது என்பதில் என்ன நிச்சயம்?

இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மாவட்டங்கள் குறிப்பிட்டுள்ளது. அதில் திருச்சி, கரூர், அரியலூர் விடுபட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? அதேபோல விவசாய பிரதிநிதிகள் 3 பேர் நியமிக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டது. அவர்கள் யார் என்பது தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே விவசாய நிலங்களை விற்று விடுகிறார்கள். ஆனால் அந்த விவசாய நிலங்களை விற்பதற்கு தடை ஏதும் இந்த சட்ட முன்வடிவில் கூறப்பட்டு இருக்கிறதா?

நடைமுறையில் உள்ள பழைய ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். குஜராத் மாநிலத்தில் பெட்ரோல், காஸ் நிறுவனங்கள் அமைப்பது குறித்த வழக்கில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லப்பட்டது.

அதேபோல் தற்போது இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு சட்டரீதியாக, சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்ததாக தெரியவில்லை. விவசாயிகளுக்கு பாதுகாப்பான உண்மையான வேளாண் மண்டலமாக சட்ட முன் வடிவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும் என திமுக சார்பில் தெரிவிக்கிறோம்.” என பேசினார். என்றார்.

மேலும் பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க தி.மு.க உறுப்பினர்கள் தயாராக உள்ளார்கள் என்று நேற்றே அறிவித்தேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. இதை தேர்வுக் குழுவிற்கு அனுப்பினால் மட்டுமே பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்பதால் மீண்டும் அதை நான் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்தார்.

20 February 2020, 07:27 AM

NPR பிரச்சினைக்காக தொடர்பாக தி.மு.க வெளிநடப்பு!

#LIVEUpdate | #NPR கணக்கெடுப்பை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என அறிவீப்பீர்களா? - மு.க.ஸ்டாலின் கேள்வி!

#NPR குறித்து அரசு முறையாக விளக்கம் அளிக்காததைக் கண்டித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தி.மு.கவைத் தொடர்ந்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

20 February 2020, 07:19 AM

ஹிட்லர் போல அகதிகளாக நம்மையும் அடைப்பார்கள் - எச்சரிக்கும் துரைமுருகன்

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசுகையில், “என்.பி.ஆர் படிவத்தில் அப்பா, அம்மா, பாட்டி பெயர் கேட்கப்படுகிறது. அப்படி தெரியவில்லை என்றால் என்ன பண்டிகை கொண்டாடினீர்கள் என கேட்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் என்றால் விட்டுவிடுவார்கள். ஆனால் ரம்ஜான், பக்ரீத் என்றால் விடமாட்டார்கள்.

அசாம் மாநிலத்தில் 19 லட்சம் பேரை ஹிட்லர் போல அகதிகளாக அடைத்து வைத்திருக்கிறார்கள். இப்படி நம்மையும் கொண்டு போய் நாளை அங்கு அடைத்து விடுவார்கள். அன்றைக்கு நீங்கள் இருப்பீர்கள். அவர்களின் நிலை என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், “இந்தியாவில் பல்வேறு உயர் பதவிகளை வகித்த குடும்பத்தினருக்கே இந்த சட்டத்தினால் பிரச்சனை ஏற்படும் போது, சாதாரண மக்களின் நிலை என்னவாகும்.

அதுமட்டுமின்றி, அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று தெரியாமல் அந்த சமுதாய மக்கள் உயிரை கையில் பிடித்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில், போராடும் மக்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் வாக்கு வங்கிக்காக சிலர் தூண்டுதலின் பேரில் போராடுகிறார்கள் என அமைச்சர் தெரிவிப்பது நியாயமா?” என துரைமுருகன் கண்டனம் தெரிவித்தார்.

20 February 2020, 06:55 AM

NPR கணக்கெடுப்பை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என அறிவீப்பீர்களா? - மு.க.ஸ்டாலின் கேள்வி?

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “குடியுரிமை சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. இந்த சட்டத்தை திரும்பப் பெறவேண்டும். சிறுபான்மை மக்களும் ஈழத் தமிழர்களும் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிப்படைந்துள்ளனர்.

குறிப்பாக தற்போது என்.பி.ஆரின் புதிய படிவத்தில் பெற்றோர் ஊர், பிறந்த தேதி, சான்றிதழ் தர வேண்டும். அதன்பிறகு அவர்கள் கொண்டாடும் பண்டிகை குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தந்த மக்கள் கொண்டாடப்படும் பண்டிகைகளில் இஸ்லாமியர்கள் உடைய பண்டிகையை குறிப்பிடவில்லை. இதிலேயே மதத்தை பிரிவினை செய்யும் போக்கு இருக்கிறது. இந்த தகவல்களைத் தரவில்லை என்றால் அவர்கள் சந்தேகத்திற்குரியவர்களாக சொல்லப்படும்.

என்பிஆர் மூலம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படப்போகிறது. என்.பி.ஆர் கணக்கெடுப்பை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் அறிவிப்பாரா” என கேள்வி எழுப்பினார்.

20 February 2020, 07:19 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு!

20 February 2020, 06:49 AM

என்.பி.ஆர் கணக்கெடுப்பை என்பது தமிழகத்தில் அனுமதிக்கப்படாது என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்! - தி.மு.க தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின்

20 February 2020, 06:46 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கேள்வி?

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி பேசுகையில், “பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் 1927 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடத்தின் வாடகை.

14 கிராமங்கள் உள்ளடக்கிய சட்டமன்ற தொகுதி என்பதால் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அதிகப்படியான மக்கள் வருகிறார்கள். எனவே புதிய சார்பதிவாளர் கட்டிடம் கட்டித்தர அரசு முன் வருமா” என கேள்வி எழுப்பினர்

20 February 2020, 06:44 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கேள்வி?

துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் பேசுகையில், “துறையூர் தாலுகா மருத்துவமனை என்பதை மிகவும் பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. கர்ப்பிணி பெண்கள், விபத்தில் பாதிக்கப்படும் நோயாளிகள் உள்ளிட்டோர் துறையூர் தாலுகா மருத்துவமனையில் பரிந்துரைக்கப்படுகிறது.

மேல் சிகிச்சைக்கு 55 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதால் துறையூர் தாலுகா மருத்துவமனையை மேம்படுத்தப்பட்ட நவீன மருத்துவ மனையாக மாற்ற அரசு முன் வருமா?” என கேள்வி எழுப்பினர்.

20 February 2020, 06:43 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கேள்வி?

திருத்துறைப்பூண்டி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் பேசுகையில், “திருத்துறைப்பூண்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் போதுமான வசதிகள் இல்லாததால் அந்த சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தப்பட வேண்டும், அவசர சிகிச்சைக்கு அங்கு வசதிகள் செய்து தரப்பட வேண்டுமா” என்றும் கேள்வி எழுப்பினார்.

20 February 2020, 06:41 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கேள்வி?

ஒட்டபிடாரம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பேசுகையில், “ஒட்டப்பிடாரம் வட்டம் ஒட்டர நத்தம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படவேண்டும். அங்கு மருத்துவ உபகரணங்கள் எதுவும் இல்லை, சுகாதார நிலையத்தில் போதிய படுக்கை வசதிகளும் இல்லை.

ரத்த வங்கி உபகரணங்களை உடனடியாக உபகரணங்களும் அந்த மருத்துவர்களும் செவிலியர்களும் பணியில் அமர்த்தப்பட வேண்டும். அங்கு 108 அவசரகால ஊர்திகளுக்கு மணி நேரத்திற்கு பிறகு தான் வருகிறது” என கேள்வி எழுப்பினார்.

20 February 2020, 06:40 AM

கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு முன்வருமா?

திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் ஏ.வ.வேலு பேசுகையில், “உயர்கல்வித் துறையில் அரசு கலைக் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 15 ஆயிரம் ரூபாய் என்ற குறைந்த ஊதியத்தில் பணி புரிந்து வருகின்றனர்.

பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தில் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி 57 ஆயிரம் ரூபாய் தருகிறார்கள், பாண்டிச்சேரியில் ஐம்பதாயிரம் ரூபாய் தருகிறார்கள், தமிழகத்தில் சட்டக்கல்லூரியில் கூட 50 ஆயிரம் ரூபாய் தருகிறார்கள்.

ஆனால் அரசு கல்லூரியில் 15 ஆயிரம் ரூபாய் என்பது மிகவும் குறைவாக உள்ளது. ஆசிரியர்கள் நல்ல மனநிலையில் இருந்தால் தான் நல்ல கல்வி மாணவர்களுக்கு கிடைக்கும். கடந்த ஆண்டு நீங்கள் அறிவித்தது போல் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு அரசு முன்வருமா” என கேள்வி எழுப்பினார்..

20 February 2020, 06:37 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் பதில்!

கிருஷ்ணகிரி திமுக சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் பேசுகையில், “கிருஷ்ணகிரியில் அதிகமாக தொழிற்சாலைகள் இருக்கிறது. அங்கே தொழிலாளர் அதிகமாக இருப்பதால் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தொழிலாளர் நீதிமன்றம் அமைக்க வேண்டும்” என கேள்வி எழுப்பினார்

அதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தொழிலாளர் நீதிமன்றம் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

20 February 2020, 06:34 AM

தாலுகா நீதிமன்றம் அமைக்க வேண்டும்! - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், “திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி என்பது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியின் போது தாலுகாவாக அறிவிக்கப்பட்டது.

தாலுகாவாக அறிவிக்கப்பட்ட மருத்துவமனை உள்ளது. ஆனால் தாலுகா நீதிமன்றம் என்பது இன்னும் அமைக்கப்படவில்லை. அந்த மக்கள் பயன்பெறும் வகையில் தாலுகா நீதிமன்றம் அமைக்க அரசு முன் வருவாரா? என கேள்வி எழுப்பினர்.

20 February 2020, 06:32 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்!

எழும்பூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் பேசுகையில், “எழும்பூர் தொகுதியில் மின் மயானம் இருக்கிறது ஒரு வருட காலமாக அந்த மின் மயானம் பழுதடைந்துள்ளது. அங்கு உடல் எரிக்கப்படும் புகை மண்டலம் அதிகமாக இருப்பதால், அங்கு வசிக்கும் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய் ஏற்படுகிறது. இதனால் மின் மயானத்தை நவீனமயமாக்கப்பட்ட வேண்டும்” என கேள்வி எழுப்பினார்.

அதேப்போல், எழும்பூர் தொகுதியில் ஒட்டெரி மின் மயானம் மின் மயானத்தை நவீனமயமாக்கப்பட்ட வேண்டும் என எழும்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.

20 February 2020, 06:31 AM

ஸ்மார்ட் சிட்டி நகரில் குப்பை அல்லாப்படாமல் உள்ளது!

வேலூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் பேசுகையில், “வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை போடும்போது சாலைகள் பழுதடைந்து விடுகிறது பைபிளின் குறைந்து விடுகிறது.

ஸ்மார்ட் சிட்டி என்று சொல்லப்படுகின்ற வேலூர் மாநகராட்சி 80 லட்சம் பணியில் தனியார் நிறுவனத்திற்கு குப்பை அள்ளும் பணியில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு சாலைகளிலும் குப்பை அல்லாமல் இருப்பதால் நோய் தொற்று ஏற்படுகிறது. இதனால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” என கேள்வி எழுப்பினார்.

20 February 2020, 06:29 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கேள்வி?

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா பேசுகையில், “உள்ளாட்சித் துறையில் பயன்படுத்தப்படும் நிதிகளில் சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

குறிப்பாக பழுதடைந்த சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மக்களுக்கு பயன்படும். எங்கள் பகுதியில் நல்லூர் - குருவங்கோட்டை கிராம சாலைகள் கடந்த மூன்று ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்துள்ளது.

பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையை விரைவாக சரிசெய்ய பலமுறை கடிதம் கொடுத்தும் அந்தப் பணி தொடங்கப்படாமல் உள்ளது. எனவே பழுதடைந்த சாலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து உள்ளாட்சித்துறை நிதியை முறையாக பயன்படுத்த அரசு முன் வருமா” என கேள்வி எழுப்பினார்.

20 February 2020, 06:14 AM

மின் திட்ட நிதி மத்திய அரசுக்கு சென்றதா?

வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பா.ரங்கநாதன் பேசுகையில், “2019-ம் ஆண்டு முதல் மின் திட்டத்தில் நிறைய நிதி வந்ததாகவும் பணிகள் குறித்த நேரத்தில் முடிவடையாத காரணத்தால் அந்த நிதி மத்திய அரசுக்கு சென்று விட்டதாகவும் ஒரு தகவல் வந்துள்ளது. இதை அமைச்சர் தெளிவுபடுத்துவாரா” எனக் கேள்வி எழுப்பினார்.

20 February 2020, 06:13 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் பதில்!

செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசு பேசுகையில், “செய்யூர் தொகுதி சித்தாமூர் ஒன்றியம் சித்தார்காடு கிராமத்திற்கு புதிய மின் மாற்றி அமைக்கவேண்டும். அங்கு 50,000-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கிறது. அதனால் மின்னழுத்தம் அதிகமாக ஏற்படுவதால் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் .

ஜீ.வி. குப்பத்தில் இருளர்கள் பகுதி அதிகமாக உள்ளது. அங்கு மின் வினியோகம் இல்லை அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். செய்யூர் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் ஒரு காலை கல்லூரி தொழிற்சாலை எதுவும் இல்லாமல் இருக்கிறது.

செய்யூர் பகுதியில் 4,000 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் காகித வடிவில் தான் இருக்கிறது. அதை கொண்டு வருவதற்கு அரசு முன் வருமா” என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, 4,000 மெகாவாட் அனல் மின் நிலையம் விரைவில் அமைக்கப்படும் என்றும் இருளர் பகுதி இருக்கும் ஜி.வி.குப்பத்தில் மின் விநியோகம் தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

20 February 2020, 06:11 AM

நியாய விலைக் கடை எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

வேளச்சேரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வாகை.சந்திரசேகர் பேசுகையில், “வேளச்சேரி பகுதியில் சேவா நகர், இந்திரா நகரில் நியாய விலை கடை திறப்பு விழாவும் நடத்தப்பட்டது. ஆனால் இன்னும் அது பயன்பாட்டுக்கு வரவில்லை. அது எப்போது பயன்பாட்டுக்கு வரும்” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அந்த நியாய விலை கடை விரைவில் திறக்கப்படும் என்றார்.

20 February 2020, 06:09 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

வேப்பனபள்ளி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் முருகன் பேசுகையில், “கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி 1971-ம் ஆண்டு கட்டிய பழைய பள்ளி இன்றும் மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்படவில்லை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில் உள்ள மாணவர்கள் கூடுதலாக இருக்கும் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

20 February 2020, 06:07 AM

திரு.வி.க நகரில் நியாய விலை கடை அமைக்க அரசு முன்வர வேண்டும்!

திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி பேசுகையில், “திரு.வி.க நகர் தொகுதி 75 வது வார்டு எஸ்.எஸ் புரம் பகுதியில் நியாய விலை கடை அமைக்க அரசு முன் வருமா என கேள்வி எழுப்பினர்.

இந்தப் பகுதியில் 3 ஆயிரத்து 596 வாக்காளர்கள் உள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அதிகம் உள்ள காரணத்தால் தொலைதூரத்தில் உள்ள நியாய விலை கிடைக்கி செல்வதற்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தாலும் ஆட்டோவில் செல்ல கூடிய நிலை ஏற்படுகிறது.

எனவே அந்தப் பகுதி மக்களின் நலன் கருதி புதிதாக இந்த பகுதியில் நியாய விலை கடை அமைக்க அரசு முன்வர வேண்டும்” என தெரிவித்தார்.

19 February 2020, 06:33 AM

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு உரிமை மீறல் பிரச்னையை மீண்டும் கொண்டுவந்தார்.

சபாநாயகர் இந்த பிரச்னையில் ஏற்கனவே விவாதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. ஒவ்வொரு முறையும் உரிமைப் பிரச்னையை கொண்டுவரக்கூடாது. அதே அவைத் தலைவரின் பேச்சில் குறுக்கீடு செய்வதற்கு சமம். இந்த பிரச்சினை பற்றி பேச அனுமதியில்லை என அவர் தெரிவித்தார்.

சபாநாயகர் பேச அனுமதி மறுத்த நிலையில் தி.மு.க உறுப்பினர்கள் அடையாள வெளிநடப்பு செய்தனர்.

19 February 2020, 06:30 AM

கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!

“பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு : சட்டமன்ற கூட்டத்தில் சட்ட முன் வரைவு மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்” என சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசிய அவர், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டமன்ற கூட்டத்தில் சட்ட முன் வரைவு மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் அதை தி.மு.க வரவேற்கும்.

நாடாளுமன்றத்தில் திமு.கவினர் குரல் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் தொடர்ந்து பேசிவந்தார். நிச்சயமாக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள் என்பதை முதலமைச்சருக்கு தெரிவிக்கிறேன்.” எனப் பேசினார்.

19 February 2020, 06:28 AM

தவிட்டிலிருந்து எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும்!

காஞ்சிபுரம் பகுதியில் பட்டு மற்றும் ஜவுளி நிறுவனம் அதிகமாக உள்ளது. பட்டு மற்றும் ஜவுளித் துறைகள நவீனமயமாக்க அதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் .

அதே போல காஞ்சிபுரம் பகுதியில் அரசி ஆலைகள்‌ அதிகமாக உள்ளது. அதில் உள்ள கழிவுப்பொருளாக தவிடு அதிகமாக உள்ளது அதில் இருந்து எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் என காஞ்சிபுரம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கோரிக்கை வைத்தார்.

19 February 2020, 06:25 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு :

திருச்சி மாநகர ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சாலைகள் எதுவும் போடப்படவில்லை. பூங்காக்களை அமைத்து சாலையோரம் அழகுபடுத்துவது மட்டுமே நடைபெற்று உள்ளது. திருச்சி மேற்கு பகுதியில் எந்த சாலையும் போடப்படவில்லை. அதிகாரிகளிடம் கேட்கும்போது பாதாள சாக்கடை திட்டம் வரப்போகிறது. அதனால் தற்போது சாலைகள் போடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். திருச்சி மாநகரம் சாலைகள் இல்லாமல் கிராமங்களை விட மிகவும் மோசமாக உள்ள காரணத்தால் விரைந்து நடவடிக்கை எடுக்க இந்த அரசு முன் வருமா என கேள்வி எழுப்பினார்.

19 February 2020, 06:22 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் :

தூத்துக்குடி மாநகரத்தில் பாதாள சாக்கடை திட்டம் தி.மு.க ஆட்சியில் 2008ஆம் ஆண்டு நிதி ஒதுக்கி பணி தொடங்கியது. 2011ஆம் ஆண்டு 75 சதவிகிதம் பணி நிறைவடைந்த பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பணி நடைபெறாமல் உள்ளது. எனவே அந்தப் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு இந்த அரசு கொண்டுவருமா என கேள்வி எழுப்பினார்.

19 February 2020, 06:21 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு :

துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 33/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் இருக்கும் பகுதியை மாற்றி அமைத்திட கடந்த 2019ஆம் ஆண்டு இதே சட்டமன்றத்தில் முறையிட்டேன். அப்போது அமைச்சர் இந்த கூட்டத்தொடரிலேயே முடித்து தருவதாக அறிவித்தார். ஆனால் இதுவரை எந்தவிதமான மாற்று ஏற்பாடுகளும் செய்யவில்லை. அங்கு பொதுப்பணித்துறையின் இடம் காலியாக இருப்பதால் அங்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மின்சார தேவை என்பதை 110/11 கிலோ வாட் அளவுக்கு உயர்ந்துவிடும். இதேபோல் கொளத்தூர் பகுதியிலும் 2007 ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்ட 33/11 கிலோ வாட் துணை மின் நிலையம் இதுவரை தொடங்கப்படாமல் உள்ளது. வருங்காலங்களில் அந்தத் அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய மின் துறை அதிகாரிகளுடன் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி காலதாமதம் ஏற்படாமலிருக்க விரைந்து நடவடிக்கை எடுக்க அரசு முன் வருமா எனக் கேள்வி எழுப்பினார்.

19 February 2020, 06:11 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசும்போது, “தமிழகத்தில் இடைநிற்றல் தேர்தல் 2016ல்- 8% 2017- 11% என மத்திய அரசு ஒரு புள்ளிவிவரத்தை தந்திருக்கிறது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இடைநிற்றல் 2015 -3.7% 2016 3.7% 2017-3.7 % என்கிறார். இடைநிற்றல் குறித்து மத்திய அரசு கொடுத்த புள்ளி விவரங்கள் தவறு என்று சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழக அரசு சுகாதாரத்துறையில் பரிசு பெறும்போது அந்தப் புள்ளி விவரங்கள் சரியாக இருக்கிறது, ஆனால் இடைநிற்றல் புள்ளி விவரங்கள் தவறு என்று சொல்கிறீர்கள். இது என்ன மர்மம்” எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பள்ளிதுறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துப் பேசுகையில், “எங்களுடைய புள்ளிவிவரங்கள் சரியானது. ஆசிரியர்களை வைத்து இந்த இடைநிற்றல் புள்ளிவிவரங்களை நாங்கள் சேகரிப்பதிலை. தற்போது ஆன்லைன் மூலமாக தான் இந்த புள்ளிவிவரங்கள் நாங்கள் சேகரிக்கிறோம். மற்ற மாநிலங்களிலும் புள்ளிவிவரங்கள் வித்தியாசம் அதிகமாக சொல்வதால் எங்களுடைய புள்ளிவிவரங்கள் தான் சரியானது” எனத் தெரிவித்திருக்கிறார்.

19 February 2020, 06:09 AM

எம்.எல்.ஏ நிதியில் இருந்து பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர வழி செய்யவேண்டும்!

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா :

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அரசு உதவிபெறும் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் 75க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. அதிகப்படியான எண்ணிக்கையில் இந்த பள்ளிகளில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிகளுக்கு ஆய்வு செல்லும்போது நிறைய கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.

குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கழிப்பறை வசதி போன்றவை.. சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்க விதி இல்லை. எனவே அந்த விதியைத் தளர்த்தி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பள்ளிகளுக்கு போதுமான வசதிகளைச் செய்து தர அரசு ஆவன செய்யுமா என கேள்வி எழுப்பினார்.

19 February 2020, 06:06 AM

பள்ளி தரம் உயர்த்தப்படுமா?

குளித்தலை தொகுதி கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் போத்துராவுத்தன்பட்டியிலுள்ள நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அரசு ஆவன செய்யுமா என குளித்தலை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராமர் கேள்வி எழுப்பினார்.

தண்டலம் ஏரிப்போடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மேல்நிலை படிப்பிற்காக வாலாஜா, ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களுக்கு 12 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்று படிக்க வேண்டியுள்ளதால் இந்தப் பகுதியில் உள்ள பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தர அரசு ஆவன செய்யுமா என தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் காந்தி கேள்வி எழுப்பினார்.

18 February 2020, 09:41 AM

மக்கள் குடிக்கிறார்கள் அதற்காக என்ன செய்ய முடியும்! - அமைச்சர் தங்கமணி அலட்சிய பதில்!

மது விற்பனை மூலம் பல ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மனோதங்கராஜ் எழுப்பிய கேள்விக்கு, மக்கள் குடிக்கிறார்கள் அதற்காக என்ன செய்ய முடியும். படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அமைச்சர் தங்கமணி அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.

18 February 2020, 07:28 AM

மதுக்கடை வருவாயை நம்பி தான் இந்த அரசு உள்ளதா? - மனோ தங்கராஜ் கேள்வி

மதுவை படிப்படியாக ஒழிப்பேன் என்று தேர்தல் வாக்குறுதியை நீங்கள் கடைபிடித்தீர்களா. ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த அரசு மதுக்கடை வருவாயை நம்பி தான் உள்ளதா என மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பினார்.

18 February 2020, 06:52 AM

தி.மு.க கொறடா சக்கரபாணி கேள்வி?

அ.தி.மு.க அமைச்சர் பேசும் பொழுது தி.மு.க ஆட்சி காலத்தில் தான் பள்ளிகளை மத்திய பட்டியலில் கொண்டு சேர்ந்ததாக தவறான தகவலை தெரிவித்துள்ளார்.

எமர்ஜென்சி காலத்தில் தான் பள்ளிகள் மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்குச் சென்றது. மாணவர்கள் மீது இவ்வளவு அக்கறை உள்ளவர்கள் இரண்டு முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

தமிழக அரசு பல கோடி ரூபாய் செலவு செய்து நீட் பயிற்சிகளை மேற்கொண்டும் கூட தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற முடியவில்லை. இப்படி தமிழக மாணவர்களை வஞ்சித்த மத்திய அரசோடு இணக்கமாக இருக்கும் நீங்கள் அழுத்தம் கொடுக்காமல் அமைதியாக இருப்பது ஏன்? என தி.மு.க கொறடா சக்கரபாணி கேள்வி எழுப்பினார்.

18 February 2020, 06:38 AM

காங்கிரஸ் மற்றும் மனித நேய ஜனநாயக கட்சி வெளிநடப்பு!

இலங்கை தமிழர்கள் இரட்டைக் குடியுரிமை குறித்து முறையான பதிலை தெரிவிக்கவில்லை. சபாநாயகரும் அமைச்சர் சொல்வது தான் சரியானது என்று கூறியதால் காங்கிரஸ் மற்றும் மனித நேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு.

18 February 2020, 06:36 AM

நீலகிரியில் பசுமை வீடுகள் கட்டித் தரவேண்டும்!

நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு குடியிருப்பு இல்லாமல் தவித்து வருகிறார்கள், அதனால் 100 பசுமை வீடுகள் கட்டித் தரவேண்டும் என நீலகிரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் வலியுறுத்தினார்.

18 February 2020, 06:34 AM

“ஓ.பி.எஸ் ஜல்லிக்கட்டு நாயகனா? எத்தனை மாடுகளை அடக்கினார்?” - துரைமுருகன் கிண்டல்!

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொரு முறை கேள்வி எழுப்பும் போதும் ஜல்லிக்கட்டு நாயகன் என துணை முதலமைச்சரை அழைக்கிறார்கள்.

என்னுடைய கேள்வி என்னவென்றால், அவை முன்னவர் இதற்கு முன் மாடு பிடித்து வெற்றி பெற்று இந்த பெயர் அவருக்கு வந்ததா அல்லது பெயருக்கு ஏற்றபடி ஒரு மாடு பிடி விழாவினை ஏற்பாடு செய்து எங்களையும் அழைத்து பிடித்து காண்பிப்பாரா? என எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் நகைச்சுவையுடன் கேள்வி எழுப்பினார்.

18 February 2020, 06:33 AM

100 பசுமை வீடுகள் கட்டித் தரவேண்டும்!

நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு குடியிருப்பு இல்லாமல் தவித்து வருகிறார்கள், அதனால் 100 பசுமை வீடுகள் கட்டித் தரவேண்டும் என நீலகிரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் வலியுறுத்தினார்.

18 February 2020, 06:33 AM

தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு :

அமைச்சர் மாபா.பாண்டியராஜன் விவகாரத்தில் சபாநாயகர் தீர்ப்பை ஏற்க மறுத்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிடப்பு செய்தனர்.

18 February 2020, 06:18 AM

நகைக்கடன் சட்ட திருத்தம் மூலம் வேளாண்மை வங்கிகள் நலிவுற்று போகும் : சட்டமன்றத்தில் தி.மு.க கொறடா சக்கரபாணி ஆதங்கம்!

தி.மு.க கொறடா சக்கரபாணி பேசுகையில், “நகை கடன் 3 லட்சம் வரை தொடக்க வேளாண்மை வங்கியில் விவசாயிகளுக்கு தரப்படுகிறது. ஆனால் மத்திய அரசு தற்போது மார்ச் மாதம் முதல் நகைக்கடன் சட்ட திருத்தம் கொண்டுவந்துள்ளது. நிலம் பதிவு செய்தால் மட்டுமே நகை கடன் வழங்கப்படும் என்ற தெரிவித்துள்ளது.

குறிப்பாக தொடர் வேளாண்மை வங்கிகள் சிறப்பாக செயல்படும் மாவட்டங்களான திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட மாவட்டங்களில் 10 கோடிக்கு மேல் நகைக் கடன் விவசாயிகளுக்கு தரப்படுகிறது. ஆனால் இந்த திருத்த சட்டத்தினால் விவசாயிகள் பெரும் பாதிப்படைவார்கள் அதுமட்டுமல்ல சிறப்பாக செயல்படும் தொடர் வேளாண்மை வங்கிகள் நலிவுற்று போகும் என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு இந்த நகை கடன் மூலம் விவசாயிகள் எந்த பாதிப்பும் அடைய மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

18 February 2020, 04:57 AM

பேரவையில் தி.மு.க. வலியுறுத்தல்

கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட மணக்குடியில் உள்ள சதுப்பு நில காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.

18 February 2020, 04:54 AM

பட்ஜெட் மீதான விவாரம்: 2வது நாளாக தொடங்கியது

நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் கடந்த வெள்ளியன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்றதை அடுத்து, அதன் மீதான மானியக் கோரிக்கைகள், விவாதங்கள் இரண்டாவது நாளாக தொடங்கியது

17 February 2020, 09:39 AM

பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட புள்ளி விவரம் தான் சரியானது! - அமைச்சர் செங்கோட்டையன்

பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, சமீபத்தில் தமிழகத்தில் இடைநிற்றல் கல்வி என்பது நூறு சதவிகிதம் அதிகரித்திருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை புள்ளிவிவரங்களை வெளியிட்டிருப்பதாகவும், ஆனால் தமிழக அரசு சொல்லும் தகவல் வேறு விதமாக இருப்பதாகவும் இரண்டில் எவற்றை கணக்கில் எடுத்துக்கொள்வது என கேள்வி எழுப்பினார். மேலும் இவ்விவகாரத்தில் தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் எனவும் விஜயதரணி பேசினார்.

அதற்கு பதிலளித்து பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மத்திய அரசு எதன் அடிப்படையில் 2016-2017-10%,2017-2018 -16% அவ்வாறான புள்ளி விவரங்களை வெளியிட்டது என்பது தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருப்பதாகவும், அந்த கடிதத்திற்கு பதில் தற்போதுவரை வரவில்லை எனவும் பதிலளித்தார். மேலும் தமிழக அரசு வெளியிட்ட புள்ளி விவரம் தான் சரியானது எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

17 February 2020, 08:30 AM

வருவாய் எப்படி அதிகரிக்கும் - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி!

பட்ஜெட் மீதான விவாதம் குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “பொதுவாக கடனை முதலீடுக்காக செலவு செய்ய வேண்டும். ஆனால் தமிழக அரசு தவறாக பயன்படுத்தியுள்ளது.

தமிழக அரசு வாங்கிய கடனில் 58% மட்டுமே முதலீட்டு செய்துள்ளது. மிதம்‌ இதர செலவு செய்துள்ளது. தற்போது தமிழக அரசின் ஜி.டி.பி 11% குறைந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு 17% -லிருந்து 18 சதவீதமாக இருந்தது.

முதலீட்டு குறைந்துள்ளது. கடன் அதிகரித்துள்ளது. நிதி பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை. உற்பத்தி சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசிடம் வருமானம் இல்லாததே முக்கிய காரணம்.

அதுமட்டுமின்றி, கடந்த 4, 5 ஆண்டுகளாக வருவாய் சதவீதம் 5 - 8 சதவிதம் தான் உள்ளது. ஆனால் எதிர்கால இலக்கு பற்றி 2020 - 2021ஆண்டு 2021 - 2022ஆண்டு 16 சதவிதம் வருவாய் அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளது.

அது எப்படி ஒரே வருடத்தில் 5% இருந்து 16% சதவிதம் எட்டும் என்றே தெரியவில்லையே. ஆனால் அடுத்த ஆட்சி தி.மு.க தலைவர் தலைமையில் வர இருக்கிறது அதனால் அரசுக்கு வருமானம் வரும் என்பதை முன்பே தெரிவித்துள்ளீர்களா என தெரிவித்தார்.

17 February 2020, 08:17 AM

மீன்வளத்துறை அமைச்சர் ஒரு தவறான தகவலை சபையில் பதிவு செய்துள்ளார் : மு.க.ஸ்டாலின்

வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் போராட்டத்தை திண்டுக்கல் ஐ.லியோனி தூண்டிவிட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வண்ணாரப்பேட்டையில் உள்ள 16 அமைப்புகள் மற்றும் பள்ளிவாசல் சேர்ந்தவர்கள் டிசம்பர் முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டிசம்பர் முதல் ஒவ்வொரு வீட்டிலும் கருப்புக்கொடி கட்டியும், அமைச்சர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு கொடுத்துள்ளனர்.

அதேப்போல், வண்ணாரப்பேட்டை ரவுண்டானா அருகே ஏற்கனவே ஒருமுறை போராட்டம் நடத்தி அதை காவல்துறை வேறு இடம் தருவதாக அன்றைக்கு வாக்குறுதி கொடுத்தும் உள்ளார்கள்.

இந்நிலையில், வெளியில் இருக்கக்கூடிய ஒரு நபரை அவர் பெயர் சொல்லி குற்றச்சாட்டுகள் பதிவு செய்திருப்பது மரபல்ல எனவே அவர் கூறிய பெயரை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

17 February 2020, 07:13 AM

பட்ஜெட் மீதான விவாதம்: பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி!

பட்ஜெட் மீதான விவாதம் குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், தமிழக அரசு எப்போதெல்லாம் புதிய திட்டங்கள் அறிவிக்கிறதோ, அப்போதெல்லாம் உறுதியாக கடன் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

வருவாய் வந்தாலும் அரசுக்கு வட்டி கட்டுவதற்கே போய்க்கொண்டிருக்கிறது. மக்களுக்கு எந்த திட்டங்களும் முறையாக போய் சேருவதில்லை. கடன் சுமையைக் குறைப்பதற்கு என்ன செய்ய போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

17 February 2020, 07:09 AM

நாங்கள் ஒன்றும் மத்திய அரசிடம் ஒட்டி உறவாடவில்லை! - துரைமுருகன் வாதம்

நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை வைத்துள்ள தி.மு.க, வேளாண் மண்டக்லத்துக்கு மத்திய அரசிம் அனுமதி வாங்கி தர வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்ததை தி.மு.க வரவேற்பதாகவும், அதே நேரம் வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் டெல்டா மாவட்டங்களில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியப்பிறகு அறிவித்திருந்தால் வரவேற்றிருப்போம் என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், அ.தி.மு.க உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சீட்டை தேய்த்து கொண்டிருக்கிறார்கள் என தி.மு.க-வினர் கடந்த காலங்களில் விமர்சித்தனர். தற்போது தி.மு.க அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளது. அவர்கள் தான் மத்திய அரசிடம் வாதிட்டு, வேளாண் மண்டலத்துக்கு அனுமதி பெற்றுத்தர வேண்டும் என கூறினார்.

அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், நீங்கள் அறிவிப்பீர்கள், நாங்கள் அனுமதி பெற்று தர வேண்டுமா என கேள்வி எழுப்பினார். மேலும் அ.தி.மு.கவை போல நாங்கள் மத்திய அரசிடம் ஒட்டி உறவாட வில்லை, எதிரும் புதிருமாக இருக்கிறோம் என பதிலளித்தார்.

17 February 2020, 06:48 AM

பட்ஜெட் உரை மீதான விவாதம் தொடங்கியது !

தி.மு.க சார்பில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்,

மதுரை விமான நிலையத்தில் ரன்வே பகுதியில் போதுமான விளக்குகள் இல்லை என்றும் 400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி அதை விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும். அதை இந்த ஆண்டிலாவது முடித்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ளாட்சி உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினாலும் எந்த திட்டமும் இல்லாமல் செயல்பட்டு வருவதாக பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டினார்.

17 February 2020, 06:42 AM

தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் வெளிநடப்பு!

முதலமைச்சரின் விளக்கம் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என தி.மு.க வெளிநடப்பைத் தொடர்ந்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

17 February 2020, 06:32 AM

சட்டப்பேரவையிலிருந்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு!

முதலமைச்சரின் விளக்கத்தை எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்தை தீர்மானமாக கொண்டு வர வேண்டும் என கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் இல்லாததால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துவிட்டு வெளிநடப்பு செய்தார்.

17 February 2020, 06:20 AM

வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் தடியடி ஏன் நடைபெற்றது? - அபூபக்கர் கேள்வி

இதுவரை பேணிப் பாதுகாக்கப்பட்ட நல்லிணக்கம் இனிமேலும் பேணி பாதுகாக்க வேண்டும். இது முஸ்லிம்களுக்கு மட்டும் பாதிக்கப்படக்கூடிய சட்டமில்லை. ஒட்டுமொத்தமாக இந்திய இறையாண்மைக்கு பாதிக்கக்கூடிய சட்டம்.

அமைதியான வழியில் வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் இந்த தடியடி என்பது ஏன் நடைபெற்றது, அந்த சூழ்நிலையை ஏற்படுத்திய அதிகாரி யார்? - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் கேள்வி

17 February 2020, 06:11 AM

சிஏஏ-வுக்கு எதிராக பேச அனுமதி மறுப்பு!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவது தொடர்பாக பேசுவதற்கு வாய்ப்பில்லை. - சபாநாயகர்

17 February 2020, 06:08 AM

மக்களின் போராட்டத்தை சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம்! - கே.ஆர். ராமசாமி

காங்கிரஸ் சார்பில் பேசிய கே.ஆர். ராமசாமி, “ குடியுரிமை சட்டத்திருத்தத்தை தீர்மானமாக கொண்டு வர காலதாமதம் செய்கிறீர்கள். போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. மக்களின் போராட்டத்தை சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம். மத்திய - மாநில அரசுகள் மக்களின் எண்ணம் என்ன என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.

சென்னையில் நடந்த தடியடி போல் வேறு எந்த இடத்திலும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக தீர்மானமாக சட்டமன்றத்தில் கொண்டு வர வேண்டும்” என தெரிவித்தார்.

17 February 2020, 06:01 AM

சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! - மு.க.ஸ்டாலின்

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்..

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினர்.

டெல்லியை போல தமிழகத்திலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக அமைதியான வழியில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வந்த நிலையில் காவல்துறையை தூண்டிவிட்டு தடியடி நடத்தி விட்டு அதற்கு யார் காரணம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

17 February 2020, 05:59 AM

புதிய நியாய விலை கடை அமைக்க வேண்டும்!

கன்னியாகுமரி தொகுதி தடிக்காரன்கோணம் ஊராட்சி வீரபுளி கிராமத்தில் உள்ள மக்கள் நான்கு கிலோமீட்டர் நடந்துதான் பகுதிநேர நியாய விலை கடை செல்ல வேண்டும் என்ற நிலையில் உள்ளனர். இதனால் தமிழக அரசு தனது விதியை தளர்த்தி அங்கே புதிய நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என கன்னியாகுமரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் கேள்வி கேள்வி நேரத்தின் போது கேட்டுக்கொண்டார்.

17 February 2020, 05:47 AM

பள்ளிகளை தரம் உயர்த்த மக்களிடம் பணம் பெறக் கூடாது!

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசுகையில், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கு பொதுமக்களிடம் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் பெறுவதை விதிவிலக்கு செய்ய வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு மத்திய அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படுகிறது. அதிலிருந்து நிதியை ஒதுக்கவேண்டும் . தற்போது பள்ளிக்கல்வித் துறைக்கு 36 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களிடமிருந்து பணம் பெறாமல் அரசே அந்த தொகையை ஏற்க முன்வர வேண்டும் எனக் கோரினார்.

17 February 2020, 05:44 AM

உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக மாற்றவேண்டும்!

கீழ்பெண்ணாத்தூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி பேசுகையில், முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் ஓராண்டிலேயே 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக மாற்றினார். பல கிராமங்களில் டவுன்பஸ் அதிகமாக இல்லாததால் அதிகமானவர்கள் நெடுந்தூரம் செல்லவேண்டிய கட்டாயம் இருக்கிறது அதனால் உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக மாற்றுவதற்கு துரிதமாக செயல்பட வேண்டும் எனப் பேசினார்.

17 February 2020, 05:33 AM

காவல்துறை அத்துமீறலைக் கண்டித்து பதாகை!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் காவல்துறை அத்துமீறலைக் கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி பதாகை ஏந்தி நுழைந்தார்.

17 February 2020, 04:31 AM

பட்ஜெட் மீதான விவாதத்தில் தி.மு.க, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு!

பட்ஜெட் மீதான விவாதத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சார்பில் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாதவரம் சுதர்சனம் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் விஜயதாரணி உள்ளிட்டோர் பேச உள்ளனர்.

17 February 2020, 04:30 AM

தி.மு.க தலைவர் சட்டப்பேரவைக்கு வருகை!

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை வந்தார்.

14 February 2020, 09:26 AM

பேரவை மீண்டும் 17-ம் தேதி கூடும் - சபாநாயகர்

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை நிறைவு செய்தவுடன் பேரவை மீண்டும் 17-ம் தேதி காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

14 February 2020, 07:45 AM

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்காக 1,033 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

14 February 2020, 07:01 AM

தமிழக பட்ஜெட் 2020-2021 : துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

14 February 2020, 06:45 AM

தமிழக பட்ஜெட் 2020-2021 : மகப்பேறு உதவித்தொகை திட்டத்திற்கு ரூ.959.21 கோடி ஒதுக்கீடு!

டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை திட்டத்திற்கு ரூ.959.21 கோடி ஒதுக்கீடு

14 February 2020, 06:09 AM

தமிழக பட்ஜெட் 2020-2021 : துறை வாரியாக நிதி ஒதுக்கீடு

ஊரக வளர்ச்சித் துறை - 23,161 கோடி

நகராட்சி நிர்வாகம் - 18,540 கோடி

பள்ளிக்கல்வித்துறை - 34,181 கோடி

உயர்கல்வித்துறை - 5,502 கோடி

சுகாதாரத்துறை - 15,863 கோடி

உணவுத்துறை - 6,500 கோடி

வேளாண் துறை - 11,894 கோடி

மீன்வளத்துறை - 1,128 கோடி

காவல்துறை - 8,876 கோடி

தமிழ் வளர்ச்சித் துறை - 74 கோடி

14 February 2020, 05:57 AM

மடிக்கணினிக்காக 966.46 கோடி ஒதுக்கீடு!

பள்ளிகல்வி துறையில் மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் மடிக்கணினிக்காக 966.46 நிதி வழங்கப்படும்.

14 February 2020, 05:35 AM

மத்திய அரசு வழங்குமென நம்புகிறோம்!

“2017-18ம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு 4,073 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை உள்ளது. நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் மத்திய அரசு வழங்கும் என நம்புகிறோம்.”

- நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

14 February 2020, 05:35 AM

21 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய்ப் பற்றாக்குறை!

தற்போது சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய்ப் பற்றாக்குறை உள்ளது. 2021-2022 ஆம் நிதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.10,970 கோடியாக குறையும்.

தமிழக அரசு நிதி பற்றாக்குறை கடந்த 2018-2019ல் 47,134 கோடி ரூபாய் இருந்தது. தற்போது 2019 -2020 ஆம் நிதி ஆண்டில் பற்றாக்குறை 55,058 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. - நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

14 February 2020, 05:25 AM

அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா!

நிர்பயா நிதித்திட்டத்தின் கீழ் அனைத்து பேருந்துகளிலும் ரூ.75.02 கோடி செலவில் சி.சி.டி.வி கேமரா அமைக்கப்படும்.

- ஓ.பன்னீர்செல்வம்

14 February 2020, 05:12 AM

தமிழக பட்ஜெட் 2020 - 2021 : பள்ளிக்கல்வித்துறை

#LIVEUpdate | #NPR கணக்கெடுப்பை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என அறிவீப்பீர்களா? - மு.க.ஸ்டாலின் கேள்வி!
14 February 2020, 05:12 AM

தமிழக பட்ஜெட் 2020 - 2021 : உயர்கல்வித்துறை

#LIVEUpdate | #NPR கணக்கெடுப்பை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என அறிவீப்பீர்களா? - மு.க.ஸ்டாலின் கேள்வி!
14 February 2020, 05:12 AM

தமிழக பட்ஜெட் 2020 - 2021 : தமிழ்வளர்ச்சித் துறை

#LIVEUpdate | #NPR கணக்கெடுப்பை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என அறிவீப்பீர்களா? - மு.க.ஸ்டாலின் கேள்வி!
14 February 2020, 05:01 AM

தமிழக பட்ஜெட் 2020 - 2021 : பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

14 February 2020, 04:55 AM

தமிழக பட்ஜெட் 2020 - 2021 : தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடி!

தமிழக பட்ஜெட் 2020 - 2021 : 2020-21 ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும்!

- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

14 February 2020, 04:53 AM

தமிழக பட்ஜெட் 2020 - 2021 : தமிழ் வளர்ச்சித் துறைக்கு 74 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

14 February 2020, 04:51 AM

தமிழக பட்ஜெட் 2020 - 2021 : நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ. 15,850.54 கோடி ஒதுக்கீடு!

14 February 2020, 04:50 AM

எரிசக்தி துறைக்கு ரூ. 20,115.58 கோடி ஒதுக்கீடு!

14 February 2020, 04:49 AM

வேளாண் துறைக்கு ரூ.11,894 கோடி ஒதுக்கீடு!

14 February 2020, 04:46 AM

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு!

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

14 February 2020, 04:44 AM

உணவு மானியத்துக்கு ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கீடு

உணவு மானியத்துக்கு ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

14 February 2020, 04:34 AM

தமிழக பட்ஜெட் 2020 - 2021

14 February 2020, 04:32 AM

ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.

#LIVEUpdate | #NPR கணக்கெடுப்பை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என அறிவீப்பீர்களா? - மு.க.ஸ்டாலின் கேள்வி!
14 February 2020, 04:32 AM

சட்டபேரவை கூட்டம் தொடங்கியது.

14 February 2020, 04:32 AM

பல்வேறு பிரச்னைகளை எழுப்ப தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு!

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி நடைபெறும் கூட்டத்தொடரில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு, நீட் தேர்வு, டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு, குடியுரிமைச் சட்டம் போன்ற பல்வேறு பிரச்னைகளை எழுப்ப தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

14 February 2020, 04:30 AM

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை வருகை.

தமிழக சட்டப்பேரவை நடைபெறும் தலைமைச் செயலகத்துக்கு தி.மு.க தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தார்.

14 February 2020, 04:24 AM

தமிழக அரசின் பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்!

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இன்று காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல் வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

banner

Related Stories

Related Stories