இந்தியா

“நூறாண்டுகால பிரச்னைக்கு ஒரு தீர்வை கண்டிருக்கிறது உச்சநீதிமன்றம்” - அயோத்தி தீர்ப்புக்கு காங். வரவேற்பு!

அயோத்தி தீர்ப்பு குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“நூறாண்டுகால பிரச்னைக்கு ஒரு தீர்வை கண்டிருக்கிறது உச்சநீதிமன்றம்” - அயோத்தி தீர்ப்புக்கு காங். வரவேற்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக கருதப்படும் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அமர்வின் 5 நீதிபதிகளும் ஒருமித்த முடிவைக் கொண்ட தீர்ப்பை அறிவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் இந்துக்கள் கோயில் கட்டுவதற்காகத் தரப்படவேண்டும். மத்திய அரசு உருவாக்கும் அறக்கட்டளை கோவில் கட்டும் பணிகளை மேற்கொள்ளவேண்டும். சன்னி வஃக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் மாற்று இடத்தை அரசு அளிக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், அயோத்தி தீர்ப்பு குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அயோத்தி வழக்கினுடைய தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் தெளிவாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை நாம் மிக உயர்ந்த அமைப்பாக கருதுவது இந்திய அரசமைப்புச் சட்டமும், உச்சநீதிமன்றமும் தான். தற்போது உச்சநீதிமன்றம் நூறு ஆண்டுகால பிரச்சினைக்கு ஒரு தீர்வை கண்டிருக்கிறது. அந்த தீர்வை தமிழக காங்கிரஸ் கட்சி தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறது.

தேசியக் கொடிக்கு நாம் எவ்வாறு மரியாதை செலுத்துகிறோமோ, அதேபோல உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கும் மரியாதை செலுத்த வேண்டும். நாம் தோல்வி அடைந்திருக்கிறோம் என்று சிலரோ, நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று சிலரோ கருதுவதில் எந்த பலனும் இல்லை. உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வு எல்லாவிதமான சாதக, பாதக அம்சங்களையும் மனதில் கொண்டு, வரலாற்று நிகழ்வுகளையும் மனதில் கொண்டு, தொல்லியல் துறையின் முடிவுகளையும் மனதில் கொண்டு, இன்றைய நாட்டு நடப்பினையும் மனதில் கொண்டு மிகத் தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

அவரவர்கள் வணங்கும் கடவுளின் பெயரால் இந்த தீர்ப்பை முழுமையாக ஏற்றுக்கொண்டு, மிகவும் மகிழ்ச்சியான ஒரு சமுதாயமாக இந்திய சமுதாயம் திகழ வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories