இந்தியா

மீண்டும் தலைதூக்கும் கும்பல் வன்முறை : பசுவைக் கொன்றதாக ஒருவர் அடித்துக் கொலை !

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பசுவை கொன்றதாக ஒருவரை அப்பகுதியைச் சேர்ந்த பசு பாதுகாப்பு கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளது. இதுஅப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இந்துத்துவா கும்பல்கள், பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த கும்பல்களின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இதில் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் மீது தான் அதிக அளவில் தாக்குதல் அரங்கேறுகிறது. இதை தடுக்கவேண்டிய மத்திய பா.ஜ.க அரசோ கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் 18-ம் தேதியன்று தப்ரிஸ் அன்சாரி என்ற முஸ்லிம் இளைஞர் அடித்து படுகொலை செய்யப்பட்டார்.

அதனையடுத்து பீகாரில் ஜூலை 2-ம் தேதி திருட வந்ததாக கூறி இளைஞர் ஒருவரை ஜெய் ஸ்ரீராம் என்று கூறச் சொல்லி அடித்துக் கொன்றனர். மேலும் அதே பீகாரில் ஜூலை 19-ம் தேதி கன்றுகுட்டிகளை திருடவந்ததாக கூறி 3 பேரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது.

ஜார்க்கண்ட் மாநிலம் ஜலதங்கா
ஜார்க்கண்ட் மாநிலம் ஜலதங்கா

இதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலம் ஜலதங்கா கிராமத்தில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இங்கு 3 பேர், இறந்துபோன பசுவின் உடலுடன் இருக்கிறார்கள் என்று கூறி, பசு குண்டர்கள், ஒட்டுமொத்த கிராமத்தினரையும் திரட்டிச் சென்று தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில், சம்பந்தப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில், அவர்களை போலிஸார் மீட்டு ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். எனினும் கோபால்பூர் கிராமத்தைச் சேர்ந்த கலாந்தஸ் பர்லா என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்து போயுள்ளார். பாகு கச்சாப் மற்றும் பிலிப் கோரோ ஆகிய 2 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். பா.ஜ.க தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து மீண்டும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தலைதூக்கியுள்ளன என பலர் குற்றம் சாட்டிவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories