இந்தியா

“ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தப்பி ஓடவேண்டிய அவசியம் எனக்கு இல்லை” - ப.சிதம்பரம் மேல்முறையீட்டு மனு!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தப்பி ஓட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய அமைச்சர்)
ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய அமைச்சர்)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் நிதியை பெறுவதற்கு அனுமதி வழங்கியதில் ரூ.305 கோடி நிதி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து ப.சிதம்பரம் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும், முறைகேடு நடந்தது தொடர்பாக சிபிஐ-யும் வழக்குப் பதிவு செய்தன.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். டெல்லி உயர்நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க மறுத்தது. இதனைத் தொடர்ந்து ப.சிதம்பரம் இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அவர் அங்கு இல்லாததைத் தொடர்ந்து சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் ஒட்டிவிட்டுச் சென்றனர்.

இந்நிலையில் ப.சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், ''ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை. முதல் தகவல் அறிக்கையில் என் பெயர் குறிப்பிடாத நிலையில் என் முன்ஜாமீன் எதற்காக நிராகரிக்கப்பட்டது? சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அழைத்தபோதெல்லாம் விசாரணைக்கு ஆஜராகியுள்ளேன். மாநிலங்களவை உறுப்பினராக உள்ள நான் சட்டத்தில் இருந்து தப்பித்து ஓட வேண்டிய அவசியம் இல்லை. எம்.பியாக உள்ள என் மீது கடந்த காலங்களில் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா அடங்கிய அமர்வு மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா அமர்வில் மீண்டும் ப.சிதம்பரம் தரப்பு முறையிட்டது.

ஆனால், பட்டியலிடாத வழக்கை விசாரிக்க முடியாது எனக்கூறிய நீதிபதி ரமணா, தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மீண்டும் மாலை 4 மணிக்கு முறையிட ப.சிதம்பரம் தரப்பு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories