இந்தியா

“இனி காஷ்மீர் பெண்களை திருமணம் செய்யலாம்” - ஹரியானா பா.ஜ.க முதல்வர் சர்ச்சை பேச்சு!

சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ரத்து செய்யப்பட்டதை அடுத்து காஷ்மீர் பெண்களை மணமுடிக்கலாம் என ஹரியானா முதலமைச்சர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

“இனி காஷ்மீர் பெண்களை திருமணம் செய்யலாம்” - ஹரியானா பா.ஜ.க முதல்வர் சர்ச்சை பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் கைது செய்யப்பட்டு, முக்கிய தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதோடு, அம்மாநில மக்கள் இராணுவத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.

சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்து வரும் சூழலில், இனி காஷ்மீர் பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என ஹரியானா மாநில பா.ஜ.க முதல்வர் மனோகர் லால் கட்டார் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவில் முதலமைச்சராக உள்ள பா.ஜ.கவின் மனோகர் லால் கட்டார், ஃபதேஹாபாத் பகுதியில் நடந்த நிகழ்ச்சியின் போது “சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ரத்து செய்யப்பட்டதால் இனி காஷ்மீர் பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம்” எனப் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும், “அமைச்சர் ஓ.பி.தன்கர் பீகாரில் இருந்து மருமகளை அழைத்து வருவேன் என அடிக்கடி கூறுவது வழக்கம். ஆனால், தற்போது காஷ்மீர் பெண்களை திருமணம் செய்வதற்கான தடை நீங்கியதால், காஷ்மீரிகளை மருமகளாகக் கொண்டு வருவோம்” என மனோகர் லால் பேசியுள்ளார்.

முன்னதாக, உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் பா.ஜ.க எம்.எல்.ஏவும் இது போன்ற சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார். அதாவது, சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால் அழகான காஷ்மீர் பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என அவர் பேசியிருந்தார்.

banner

Related Stories

Related Stories