இந்தியா

புதிய கல்விக் கொள்கையில் 'இந்தி கட்டாயம்' என்கிற வார்த்தை நீக்கம்:அடிபணிந்தது மத்திய அரசு!

புதிய கல்வி கொள்கையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கற்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, புதிய கல்வி கொள்கையில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

புதிய கல்விக் கொள்கையில் 'இந்தி கட்டாயம்' என்கிற வார்த்தை நீக்கம்:அடிபணிந்தது மத்திய அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

கடந்த வெள்ளிக் கிழமையன்று கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு மத்திய அரசிடம் புதிய கல்விக் கொள்கை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் நாடு முழுவதும் கல்வியை மேம்படுத்துவதற்கான பல புதிய திட்டங்களுக்கான யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதில், மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மும்மொழி கல்வி திட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை படிக்க வேண்டும். இந்தி இல்லாத மற்ற மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் 3வது மொழியாக இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அந்தப் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

6ம் வகுப்பு முதல் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தி கற்றுத்தரப்பட வேண்டும். மேல்நிலை வகுப்புக்கு செல்வதற்கு முன்பு ஒவ்வொரு மாணவனும் தலா 3 மொழிகளில் நன்றாகத் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பரிந்துரையை கஸ்தூரிரங்கன் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த மும்மொழிக் கொள்கைக்குத் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. மத்திய அரசு தனது பரிந்துரையை மாற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் பல்வேறு கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன. அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் மக்கள் இந்தி திணிப்புக்கு எதிரான தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.இதனால் உலகம் முழுவதும், #stopHindiImposition #tnagainstHindiImposition ஆகிய ஹேஷ்டாக்கள் ட்ரெண்டிங்கில் வந்தன.

இதையடுத்து கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையை மத்திய அரசு இன்னும் ஏற்கவில்லை. பரிந்துரை மட்டும்தான் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது. மேலும் புதிய கல்விக் கொள்கைப் பற்றி பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை மத்திய அரசுக்கு தெரிவிக்கலாம் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்தது.

இருப்பினும் தமிழ்நாட்டில் எதிர்ப்பு அலைகள் ஓயவில்லை. இதனால், கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைகளில் சில முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி புதிய கல்வி கொள்கையில் முக்கியத் திருத்தங்கள் செய்யப்பட்டன. இணையதளத்தில் கடந்த 31ம் தேதி வெளியிட்ட வரைவு அறிக்கையில் மும்மொழிக் கொள்கையை எப்படி அமல்படுதுவது என்பது தொடர்பான விபரங்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.

அதாவது இந்தி தாய்மொழியாக இல்லாத மாநிலங்களில் மூன்றாம் மொழியாக பள்ளிகளில் இந்தியை சேர்க்க வேண்டும் என்றும், இந்தி பேசும் மாநிலங்களில் மூன்றாம் மொழியாக வேறு ஏதேனும் ஒரு இந்திய மொழியை மாணவர்கள் அவர்கள் விருப்பப்படி எடுத்துக்கொள்ளலாம் என்ற பகுதி தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஆனால், வரைவு அறிக்கை திருத்தி வெளியிடப்பட்டிருப்பதாக அறிக்கையில் எங்கும் கூறப்படவில்லை.

திருத்தப்பட்ட புதிய வரைவுத் திட்டத்தின்படி தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தி கட்டாயம் என்கிற பரிந்துரை நீக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது மொழியை மாணவர்களே தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மாணவர்கள் இந்தியைதான் படிக்க வேண்டும் என்ற கட்டாய நிலையில் இருந்து தாங்கள் விரும்பும் மொழியை படிக்க முடியும். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த வரைவு திட்ட திருத்தங்களை மேற்கொண்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கஸ்தூரி ரங்கன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள மும்மொழி கல்வி திட்டத்துக்கு மத்திய அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. மூன்று மொழிகளை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மாணவர்கள் மூன்றாவது மொழியாக தங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில் இரு மொழி கல்வி திட்டமே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட முக்கிய கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.

banner

Related Stories

Related Stories