
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரை
இன்றைக்கு இந்த அரசு நலத்திட்ட உதவிகள், வழங்குகின்ற நிகழ்ச்சியில் உங்களை எல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பை நான் பெற்றிருக்கின்றேன். அதற்கு முதலில் என்னுடைய வணக்கத்தையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
முதலில் இந்த நிகழ்ச்சியை, இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய நம்முடைய மாவட்டத்தினுடைய பொறுப்பு அமைச்சர் அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முதலில் என்னுடைய, நன்றியையும், அன்பையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்றைக்கு இந்த விழாவில் மகளிர் தான் ஆண்களைவிட அதிகமாக கலந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்களுடைய முகத்தில் தெரிகின்ற இந்த மகிழ்ச்சி, இந்த சிரிப்புதான் நம்முடைய திராவிட மாடல் அரசினுடைய வெற்றிக்கு ஒரே சாட்சி.
இன்றைக்கு இந்தியாவுலேயே மகளிருடைய முன்னேற்றத்திற்காக பல முன்மாதிரியான திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்ற மாநிலம் என்றால், அது நம்முடைய தமிழ்நாடு தான், நம்முடைய முதலமைச்சர் அவர்கள்தான்.

ஆட்சிக்கு வந்ததுமே, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் போட்ட முதல் கையெழுத்து மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்கான கையெழுத்து. இன்றைக்கு தென்காசி மாவட்டத்தில் மட்டும் மகளிர் விடியல் பயணத்திட்டத்தில் 12 கோடி பயணங்களை மகளிர் நீங்கள் மேற்கொண்டுள்ளீர்கள்.
அதே மாதிரி, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மகளிர் காலையில் எழுந்து பிள்ளைகளுக்கு சமைத்து கொடுக்க சிரமப்படக் கூடாது என்று, பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் சீக்கிரம் பசியில்லாமல் செல்லவேண்டும் என்று முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்தை செயல்படுத்தினார்கள்.
இன்றைக்கு இந்த திட்டத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் 12 ஆயிரம் குழந்தைகள் முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள்.
அடுத்து அரசு பள்ளியில் படித்து, கல்லூரி படிக்க செல்கின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலமாக மாதம் 1,000 ரூபாய் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கல்வி ஊக்கத்தொகையாக வழங்குகின்றார். இந்த திட்டத்தின் மூலம், தென்காசி மாவட்டத்தில் மட்டும் சுமார் 18 ஆயிரம் மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள்.
இதே மாதிரி, தமிழ்நாடு முழுவதும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உயர்கல்வி படிக்கின்ற 10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப்யையும் வழங்கி இருக்கின்றார்கள். தென்காசி மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரம் மாணவ – மாணவிகள் இந்த இலவச லேப்டாப் திட்டத்தின் மூலம் பயன்பெற்று இருக்கிறார்கள்.
இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக ஒரு திட்டம். அது தான், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். கடந்த 3 வருடங்களாக ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கி இருக்கின்றார். இந்த திட்டத்தின் மூலம் இந்த தென்காசி மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு மாதமும் 3 லட்சத்து 30 ஆயிரம் மகளிர் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெற்று வருகின்றார்கள்.
தேர்தலை காரணம் காட்டி எப்படியாவது இந்த மகளிர் உரிமைத்தொகையை திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று சில பேர் முயற்சி செய்தார்கள். ஆனால் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அந்த முயற்சியை எல்லாம் முறியடித்து, ஒரு கோடியே 31 லட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபாயை கொடுத்திருக்கிறார்கள்.
அதுமட்டும் இல்லை, கோடை கால சிறப்பு நிதியாக விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய கைம்பெண்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு எல்லாம் கோடை கால சிறப்பு நிதியாக 2,000 ரூபாயை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் விளிம்பு நிலையில் இருக்கின்ற 38 லட்சம் பேருக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து இருக்கின்றார்கள்.
இந்த தென்காசி மாவட்டத்திற்கு மட்டும் ஏராளமான திட்டங்களை முதலமைச்சர்அவர்கள் செயல்படுத்தி இருக்கின்றார். 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆலங்குளம் – தென்காசி இடையேயான இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் 255 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது.
திருநெல்வேலி – ஆலங்குளம் இடையே நால்வழிச்சாலை அமைக்கும் திட்டம் 65 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. அதே போல, 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விளையாட்டு மைதானம் இங்கே அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி ஏராளமான திட்டங்களை இன்றைக்க இந்த தென்காசி மாவட்டத்திற்கு நம்முடைய திராவிட மாடல் அரசு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கி இருக்கின்றார்கள். இது மாதிரியான முற்போக்கான திட்டங்களால் தான், இன்றைக்கு இந்தியாவிலேயே நம்முடைய தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக 11.19 சதவீதம் வளர்ச்சியோடு நம்முடைய தமிழ்நாடு சிறப்பான இடத்தில் அமைந்திருக்கிறது.
இன்றைக்கு நம்முடைய மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த
சகோதரிகள் வந்து இருக்கின்றீர்கள். இந்தியாவிலேயே முதன் முதலாக மகளிர் சுய உதவிக்குழுக்களை ஆரம்பித்தது நம்முடைய திமுக அரசு, ஆரம்பித்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தான்.
ஆரம்பத்தில் குழுக்கள் மூலமாக கடன் இணைப்பு வாங்கி அதை உங்களுடைய செலவுக்கு பயன்படுத்தி வந்தீர்கள். இப்போது, கடன் இணைப்புகளைப் பெற்று தொழில் முனைவோராக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உங்களையெல்லாம் மாற்றி இருக்கிறார்.
அதனால் தான், ஐ.டி. கம்பெனியில கொடுக்கின்றது போல மகளிர் குழுக்களுக்கும் இன்றைக்கு உங்கள் பெயர், புகைப்படத்தோடு அடையாள அட்டைகளை நம்முடைய அரசு வழங்கி இருக்கின்றது. இந்த அடையாள அட்டை மூலம் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் இன்றைக்கு பல்வேறு பயன்களை அடைந்திருக்கின்றீர்கள்.
குழு சகோதரிகள் நீங்கள் தயாரிக்கின்ற உங்களுடைய தயாரிப்பு பொருட்களை 25 கிலோ வரை 100 கிலோமீட்டர் தூரத்துக்கு எந்தவித கட்டணம் இல்லாமல் எடுத்துச் செல்லலாம். இந்த 5 வருடத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி அளவிற்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதை எல்லாம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் குழு சகோதரிகளுக்கு வழங்கக்கூடிய கடன் தொகையாக நிச்சயம் அவர் பார்க்கவில்லை. உங்களுடைய உழைப்பின் மீது வைத்திருக்கக்கூடிய ஒரு நம்பிக்கையாக நம்முடைய அரசு பார்க்கின்றது. நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பார்க்கின்றார்.
அந்த வகையில் இன்றைக்கு இந்த மேடையில் ஆயிரக்கணக்கான மகளிருக்கு வங்கிக்கடன் இணைப்புகளை கொடுக்க இருக்கின்றோம். அதை சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் நல்லமுறையில் கடன் இணைப்புகளை பயன்படுத்தி, இன்றைக்கு கடன் இணைப்பு பெறும் நீங்கள். நாளைக்கு, பெரிய தொழில் முனைவோராக, நாலு பேருக்கு வேலை கொடுக்கின்ற அளவிற்கு உங்களை நீங்கள் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பது தான் இந்த அரசினுடைய ஒரே குறிக்கோள்.
இந்த விழாவில் வீட்டு மனைப்பட்டாக்களையும் நாம் வழங்க இருக்கின்றோம். அரசு அலுவலகங்களைத் தேடி சென்று பட்டாவிற்காக காத்திருந்த காலம் மாறி, இன்றைக்கு அரசே உங்களைத் தேடி வந்து பட்டாக்களை கொடுத்து கொண்டிருக்கிறது.
இனிமேல் உங்கள் வீட்டில் நீங்கள் மகிழ்ச்சியாக, நிம்மதியாக உறங்கலாம். ஏன் என்றால், பட்டா என்ற பல வருட கனவை நம்முடைய அரசு இன்றைக்கு நினைவாக்கி இருக்கின்றது. பட்டா பெற்றுள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதே மாதிரி இங்கு இருக்கக்கூடிய விவசாய பெருங்குடி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நாங்கள் கொடுத்திருக்கின்றோம். எவ்வளவோ துறைகள் இருந்தாலும், நாட்டினுடைய முதுகெலும்பாக இருப்பது விவசாயம் தான்.அதனால் தான், நம்முடைய முதலமைச்சர் அவர்கள், வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட்டை கொண்டு வந்தார்கள். இன்றைக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு என்றைக்கும், விவசாயிகளின் நலன் காக்கின்ற அரசாக செயல்பட்டு வருகின்றது.
அதே போல, இங்கே பல்வேறு மாற்றுத்திறனாளிகள் வந்திருக்கின்றார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களுக்கு தேவையான உபகரணங்களை நாம் கொடுத்திருக்கின்றோம். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அரசு உங்களுக்கு உபகரணங்களை மட்டும் வழங்கவில்லை. உங்களுடைய உரிமைகளையும் அது உறுதி செய்து வருகிறது.
குறிப்பாக, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுடைய குரல் எதிரொலிக்க வேண்டும் என்று, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக நியமன அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யும் முறையை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அறிமுகப்படுத்தி, அதை செயல்படுத்தி இருக்கின்றார்கள்.
ஆகவே, இந்த அரசை பொறுத்த வரைக்கும் எல்லாருக்கும் எல்லாம் சென்று சேர வேண்டும் என்று செயல்படுகின்ற ஒரு திராவிட மாடல் அரசு.
இன்றைக்கு இந்தியாவிலேயே மக்களோடு மக்களாக களத்தில் இருக்கின்ற ஒரே முதலமைச்சர், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மட்டும் தான் என்று நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை. மக்களுக்காக சுற்றிச் சுழன்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள், ஒவ்வொரு நாளும் அயராது உழைத்து கொண்டிருக்கிறார்கள்.
அடுத்து வரப் போகின்ற திராவிட மாடல் பார்ட்- 2விலும் உங்களுக்கு இன்னும் அதிகமான திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்துவார். ஆகவே, நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கு நீங்கள் உற்ற துணையாக, பக்கபலமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, தொடர்ந்து உங்களுடைய ஆதரவை நம்முடைய அரசிற்கு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, நலத்திட்டங்களைப் பெற்ற அத்தனைப் பேருக்கும் என்னுடைய அன்பையும், வாழ்த்தையும் கூறிக் கொண்டு விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.








