தேர்தல்2021

“அ.தி.மு.க தான் கெஞ்சுகிறது; நாங்கள் இல்லை” - ஒரே போடாகப் போட்ட சுதீஷ் - உடைகிறது கூட்டணி!

அ.தி.மு.க கூட்டணியில் அ.தி.மு.க - தே.மு.தி.க இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்து இன்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

“அ.தி.மு.க தான் கெஞ்சுகிறது; நாங்கள் இல்லை” - ஒரே போடாகப் போட்ட சுதீஷ் - உடைகிறது கூட்டணி!
DIGI TEAM 1
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் நாளுக்கு நாள் முட்டல் மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

உடன்படிக்கைகளின்படி பா.ம.கவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், பா.ஜ.க, தே.மு.தி.க, த.மா.க உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.

அ.தி.மு.க அமைச்சர்கள் தே.மு.தி.க நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை. பேச்சுவார்த்தையில் மாநிலங்களவை எம்.பி சீட் தர வேண்டும், 20 தொகுதிகளுக்கு குறையாமல் ஒதுக்க வேண்டும் என தே.மு.தி.க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க தரப்போ, பழைய கணக்கை இப்போதும் எதிர்பார்க்க வேண்டாம் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, தே.மு.தி.க துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் ‘நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ என ஃபேஸ்புக்கில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் அ.தி.மு.க - தே.மு.தி.க இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்து சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் தே.மு.தி.க தலைமை அ.தி.மு.க கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை எனும் தகவல் அ.தி.மு.க தலைமைக்கு எட்டியதே காரணம் எனக் கூறப்படுகிறது. சுதீஷின் ஆவேச பேச்சு இதை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

இன்று திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள ஆர்.குன்னத்தூர் கிராமத்தில் தே.மு.தி.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய தே.மு.தி.க துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், “சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக்காக அ.தி.மு.கதான் எங்களைக் கெஞ்சுகிறது; தே.மு.தி.க அவர்களைக் கெஞ்சவில்லை.

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க அ.தி.மு.க கூட்டணியில் இல்லை என்றால் அ.தி.மு.க என்ற ஒரு கட்சியே தெரிந்திருக்காது. மாநிலங்களவை எம்.பி. சீட் தருவதாக கூறுகிறார்கள்; ஆனால் அதற்காக நாங்கள் என்றுமே அதற்காக ஆசைப்பட்டதில்லை.” எனப் பேசியுள்ளார்.

இதன்மூலம் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து தே.மு.தி.க விலகுவது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே, கூட்டணியில் அ.ம.மு.க-வை சேர்க்குமாறு பா.ஜ.க நெருக்கடி கொடுத்துவரும் நிலையில் கூட்டணியில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்கள் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் பெரும் தலைவலியாக மாறியுள்ளன.

banner

Related Stories

Related Stories