18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்னும் மூன்று கட்ட தேர்தல் உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மக்களவை தேர்தல் தொடங்குவதற்கு முன்பாகவே 10 ஆண்டு பாசிச பா.ஜ.க ஆட்சியை விழ்த்த வேண்டும் என்ற ஒரே கோரிக்கையுடன் தங்களது அனைத்து வித கருத்து வேறுபாடுகளை தள்ளிவைத்துவிட்டு 26 கட்சிகள் இணைந்து ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.
இந்த கூட்டணி அமைந்ததில் இருந்தே பா.ஜ.கவின் தோல்வி உறுதியாகிவிட்டது. இதனால் தான் இக்கூட்டணியில் இருந்து நிதிஷ்குமாரை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டது. கூட்டணியை எப்படியாவது சிதைத்துவிட வேண்டும் என பா.ஜ.க பார்த்தது.
ஆனால் நிதிஷ்குமார் சென்றாலும் கவலையில்லை என இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் உறுதியுடன் தெரிவித்து தேர்தளில் களமாடி வருகிறார்கள். அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என அனைத்து விதத்திலும் எதிர்க்கட்சிகளை மோடி அரசு மிரட்டிப்பார்த்தது. ஆனால் இதை எல்லாம் ஒரு பொருட்டாகவே எதிர்க்கட்சிகள் கண்டுக்கொள்ளவில்லை.
இந்த தேர்தலில் தங்களுக்கு சாதகமான சூழல் இல்லாததால் மாற்றுக்கட்சியில் இருந்து பா.ஜ.கவில் இணைந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் பா.ஜ.க 435 தொகுதிகளில் 106 தொகுதிகளில் மற்ற கட்சிகளில் இருந்து பா.ஜ.கவில் இணைந்தவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் போட்டியிடும் 6 பா.ஜ.க வேட்பாளர்களில் 5 பேர் மாற்று கட்சியில் இருந்து இணைந்தவர்கள். தெலங்கானாவில் 17 பேரில் 11 வேட்பாளர்கள் பிற கட்சிகளில் இருந்து பா.ஜ.கவுக்கு தாவியவர்கள். பா.ஜ.கவுக்கு பலம் வாய்ந்த இடமாக கருதப்படும் உத்தர பிரதேசத்தில் கூட பிற கட்சிகளில் இருந்து வந்த 23 வேட்பாளர்களை நம்பி களம் காண்கிறது.
அதேபோல் ஹரியானாவில் 7 பேர், பஞ்சாபில் 7 பேர், ஜார்கண்ட் 7 பேர், மேற்குவங்கத்தில் 10 பேர், மகாராஷ்டிராவில் 7 பேர் மாற்று கட்சியில் இருந்து இணைந்தவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இது பா.ஜ.கவின் தோல்வி பயத்தையே காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.