
முரசொலி தலையங்கம்
14.02.2026
சதியை முறியடித்த முதலமைச்சர்!
ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு 5 ஆயிரம் ரூபாயை வழங்கி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்! ‘மாண்புமிகு’ என்பதையும் தாண்டி கூடுதலாக ‘கருணைமிகு’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று சொல்வதே பொருத்தமானது! மக்கள் சூட்டிய மகுடம் ‘மாண்புமிகு’. அத்தோடு சேர்த்து இனி மக்கள் சொல்லப் போவது ‘கருணைமிகு”.
1.31 கோடி மகளிர் இப்போது ஆயிரம் ரூபாயை மாதம் தோறும் உரிமைத் தொகையாகப் பெற்று வருகிறார்கள். ‘’திராவிட மாடல் 2.0 – ஆட்சியில் உரிமைத்தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்” என்று அறிவித்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர். வாக்குறுதி கொடுத்தால் செய்துவிடுவார் என்று பெயர் எடுத்தவர் முதலமைச்சர். அதனால் மக்கள் அவரை மனப்பூர்வமாக நம்புகிறார்கள்.
‘’இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி! வெல்வோம் ஒன்றாக!” என்று உறுதி அளித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இன்னொரு முக்கியமான கருணைமிகு செயலையும் முதலமைச்சர் அவர்கள் செய்துள்ளார்கள். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் 3,000 ரூபாயைக் கொடுக்கச் சொல்லிவிட்டார் முதலமைச்சர். அத்தோடு கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2,000 ரூபாயும் கொடுக்கச் சொல்லி விட்டார். இதன்படி 1.31 கோடி மகளிருக்கு 5 ஆயிரம் ரூபாய் நேற்று காலையிலேயே (பிப்ரவரி 13) போய்ச் சேர்ந்துவிட்டது.
5 ஆயிரம் ரூபாய் கொடுத்தார் என்பதல்ல முக்கியம். இத்திட்டத்தை முடக்க நினைத்தவரின் சதியை முறியடித்து விட்டார் முதலமைச்சர். அதுதான் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது ஆகும்.
கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் திடீரென்று ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாயா என்பவர் தலைமை நீதிபதி அமர்வு முன்பாக வந்து, ‘இலவசங்களை வாக்குறுதிகளாகத் தரும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று சொன்னார். திடீரென்று ஒருவர் இப்படி முளைக்க என்ன பின்னணி என்பதை அறிவதில் எந்தச் சிரமமும் இல்லை. பீகார் தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளி விடும்போது உபாத்யாயாக்கள் எங்கே போனார்கள்? இப்போது மட்டும் ஏன் முளைக்கிறார்கள்?
‘ஐந்து மாநிலத் தேர்தல் வரப்போகிறது’ என்று சொல்லித்தான் இந்த வழக்கைத் தாக்கல் செய்வதாக உபாத்தியாயா உபதேசம் செய்தார்.
‘இந்த வழக்கை மார்ச் மாதம் விசாரிக்கிறோம்’ என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் கொண்ட அமர்வு அறிவித்துள்ளது. இது எல்லாம் எதில் போய் முடியும் என்பதை முன்கூட்டியே கணித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

‘’தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத் தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்” என்பதை நெஞ்சுரத்தோடு மெய்ப்பித்து விட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ‘மாநில அரசாங்கம் கொடுப்பதைத் தடுக்க இவர்கள் யார்?’ என்பதை தனது செயலால் கேட்டுள்ளார் முதலமைச்சர்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத் தொகையை முடக்கப் பார்த்தார்கள் சிலர். முந்திக்கொண்டு தடுத்து விட்டார் நமது திராவிட நாயகன்.
மக்களிடம் பொய் சொல்லி ஏமாற்றி வாக்குகளை வாங்கிவிட்டார் முதலமைச்சர் என்று குற்றம் சாட்டினார் பொய்யால் ஆன பழனிசாமி. ஆனால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 1.31 கோடி மகளிருக்கு வழங்கி வருகிறார் முதலமைச்சர்.
தமிழ்நாட்டைப் பார்த்து மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் 10 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் கிரகலட்சுமி என்ற பெயரிலும் மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் லட்லி பெஹ்னா யோஜனா என்ற பெயரிலும் மகாராஷ்டிராவில் முதல்வர் லாட்கி பாஹின் யோஜனா எனவும் ஒடிசாவில் சுபத்ரா யோஜனா என்ற பெயரிலும் ஜார்க்கண்டில் மைய சம்மன் யோஜனா என்ற பெயரிலும் இமாசலப் பிரதேசத்தில் இந்திரா காந்தி பியாரி பெஹ்னா சுக் சம்மன் நிதி யோஜனா என்ற பெயரிலும் சத்தீஷ்கரில் மஹ்தாரி வந்தன் யோஜனா என்ற பெயரிலும் மேற்கு வங்காளத்தில் லட்சுமி பந்தர் என்ற பெயரிலும் சிக்கிமில் சிக்கிம் ஆமா யோஜனா என்ற பெயரிலும் புதுச்சேரியில் மகளிர் உதவித் தொகை என்ற பெயரிலும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் 10 மாநிலங்களில் இன்றைக்குச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 15 லட்சம் பேரை இத்திட்டத்தில் இருந்து நீக்கினார்கள். அதுபோல தமிழ்நாடு யாரையும் நீக்காமல், விடுபட்டவர் களையும் சேர்த்தது. இதுதான் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பு ஆகும். யாருக்கெல்லாம் தேவை என்பதை மனுக்கேட்டு வாங்கி தகுதி இருப்பின் வழங்கிய முதலமைச்சரை தமிழ்நாடு பெற்றுள்ளது.
• 5 ஆயிரம் வரவு வைத்தது
• 2 ஆயிரம் என வாக்குறுதி அளித்தது
• திட்டத்தை முடக்கும் சதியை முறியடித்தது.
– மூன்று ஆகப்பெரும் செயல்களைச் செய்துவிட்டார் கருணைமிகு முதலமைச்சர் அவர்கள்.
வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு மாண்புமிகு முதலமைச்சர் மீண்டும் வெல்வார். அவர் கைப்பற்றிய அரியணை அவரிடமே பாதுகாப்பாக இருக்கும். நாடும், மக்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்.






