தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் 6-ம் தேதி சிதம்பரத்தை அடுத்த லால்புரத்தில் விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன், மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதா ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இதையொட்டி அந்த இடத்தில் பிரமாண்ட மேடை, மற்றும் தொண்டர்கள் அமருமிடம் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகளை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மேடை அமைக்கும் இடம், வாகனங்கள் வரும் இடம் உள்ளிட்டவற்றை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் திருமாவளவன் ஆகியோர் பார்வையிட்டு கட்சியினருடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது, “வரும் 6 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். அதற்காக மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதனை பார்வையிடுவதற்காக நானும் அமைச்சரோடு வந்திருந்தேன். தமிழக முதல்வர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அகில இந்திய அளவில் தேர்தல் வியூகம் அமைத்து பாஜக அரசை தூக்கி எறிய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு கடுமையாக பணியாற்றி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பாரதிய ஜனதா கட்சி பூஜ்ஜியம் என்று ஏற்கனவே முதல்வர் சொல்லி இருக்கிறார். அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட இந்த தேர்தலில் அது ஒரு பொருட்டு இல்லை. தேசிய அளவிலே அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணி என்ற ஒரு அணியை உருவாக்கி, பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் ஆட்சியை தூக்கி எறிய அண்ணன் ஸ்டாலின் உத்திகளை வகுத்து செயலாற்றி வருகிறார். அந்த வகையில் தமிழ்நாட்டில் 40-க்கு 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.
அகில இந்திய அளவிலும் கணிசமான அளவில் வெற்றியைப் பெறும். எனவே இந்த தேர்தல் பாரதிய ஜனதாவை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றும் தேர்தலாக அமையும். சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகளும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிச்சயம் வெற்றி பெறும். திமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது” என்றார்.