தி.மு.க

“கேட்கத் தயங்கும் கேள்விகள்.. முகம் சுளிக்காத கலைஞர் ” : பிரபஞ்சனின் கேள்விகளுக்கு கலைஞரின் பதில்கள் !

தலைவர் கலைஞர் அவர்களின் நேர்காணலால் மட்டும் தொகுக்கப்பட்டிருக்கிற ‘நானும் இலக்கியமும்’ என்கிற புத்தகம் குறித்து இந்த வாரம் நாம் பார்க்க உள்ளோம்.

“கேட்கத் தயங்கும் கேள்விகள்.. முகம் சுளிக்காத கலைஞர் ” : பிரபஞ்சனின் கேள்விகளுக்கு கலைஞரின் பதில்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விடை சொல்வதில் வித்தகர் கலைஞர்!

நக்கீரன் கோபால் அவர்கள் நடத்திக்கொண்டிருக்கிற `சிறுகதைக் கதிர்’ என்னும் ஏட்டுக்காக இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. கலைஞரிடத்திலே ஒரு பேட்டி வேண்டும் என்று கேட்கிறபோதே கோபால் அவர்கள் ஒரு செய்தியைச் சேர்த்துச் சொல்கிறார்.

``பொதுவாக, உங்களிடம் யாரும் கேட்கத் தயங்குகிற, கேட்பதற்குக் கொஞ்சம் சங்கடத்தை ஏற்படுத்துகிற, கேள்விகளையும் கேட்கலாமா?’’ என்று கேட்கிறார். கலைஞர் சிரித்துக்கொண்டே ``கேளுங்கள்’’ என்கிறார். ``நானில்லை... எழுத்தாளர் பிரபஞ்சன் உங்களைச் சந்தித்து அந்த நேர்காணலை எடுப்பார்’’ என்று சொன்னபோது அதற்கும் ``சரி’’, என்கிறார் கலைஞர்.

“கேட்கத் தயங்கும் கேள்விகள்.. முகம் சுளிக்காத கலைஞர் ” : பிரபஞ்சனின் கேள்விகளுக்கு கலைஞரின் பதில்கள் !

துணிச்சல் கேள்விகள்... பெருந்தன்மை பதில்கள்.!.

அந்த `நானும் இலக்கியமும்’ என்கிற நூலில் இருக்கிற பல கேள்விகள் சாதாரணமான ஒரு மனிதனிடம் கேட்டால்கூட, கோபத்தை உருவாக்குகிற கேள்விகள். `பிரபஞ்சனின் துணிச்சலைப் பாருங்கள். கலைஞரிடத்திலேயே போய் இப்படியெல்லாம் கேட்டு இருக்கிறார்’ என்று பலரும் சொல்ல நான் அறிவேன். என்ன வியப்பென்றால், பிரபஞ்சன் கேள்வி கேட்டது பாராட்டுதற்குரியதுதான். முதலமைச்சராக அன்றைக்கு இருந்த தலைவர் கலைஞரிடம் 2007- வது ஆண்டு அந்த நேர்காணல் எடுக்கப்பட்டது.

முதலமைச்சராக இருந்த கலைஞரிடம் அப்படிக் கேட்பதற்குத் துணிச்சல் வேண்டும்தான். ஆனால் முதலமைச்சராக இருக்கிறபோதே, அப்படிப்பட்ட கேள்விகளை அனுமதிப்பதற்கு எவ்வளவு பெரிய பெருந்தன்மை வேண்டும் என்பதை நம்முடைய இலக்கியவாதிகள் சொல்லவில்லை. எடுத்துக்காட்டுக்கு சில கேள்வி களையும், அதற்கு அவர் சொன்ன விடைகளையும் நாம் பார்க்கலாம்.

“கேட்கத் தயங்கும் கேள்விகள்.. முகம் சுளிக்காத கலைஞர் ” : பிரபஞ்சனின் கேள்விகளுக்கு கலைஞரின் பதில்கள் !

பழைய புகழும் சொல் விளையாட்டும்..

பிரபஞ்சன் கேட்கிறார். ``ராஜராஜசோழன் விருதை நீங்களே பெற்றுக் கொண்டிருக்கிறீர்களே. நீங்கள்தான் அறிவித்தீர்கள். முதலமைச்சராக இருக்கிற போது, அந்த விருது உங்களுக்கே வந்திருக்கிறது. அதை நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இதனால் உங்களுக்குப் புதிய புகழ் என்ன வந்து விடப் போகிறது?’

முதலமைச்சரிடம் இப்படி ஒரு கேள்வி முன் வைக்கப்படுகிறது. தலைவர் கலைஞர் என்ன விடை சொல்கிறார் தெரியுமா?

`இதனால் உங்களுக்கு என்ன புதிய புகழ் வந்துவிடப் போகிறது’ என்று பிரபஞ்சன் கேட்டதும், ”நல்லது... எனக்குப் பழைய புகழ் இருப்பதையாவது ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களே... நன்றி!” என்று சொல்கிறார். அது சாதுரியமான விடை. அதற்குள் இருக்கிற ஆழமான செய்தி “நானொன்றும் அந்தப் பரிசை போய்த் தட்டிப்பறித்து வாங்கிக் கொள்ளவில்லை. கட்டாயப்படுத்தித்தான் எனக்குக் கொடுத்தார்கள். இருந்தாலும், உங்கள் கேள்விக்கு இப்படிப் பதில் சொல்கிறேன்’’ என்று கலைஞர் சொல்கிறார்.

“கேட்கத் தயங்கும் கேள்விகள்.. முகம் சுளிக்காத கலைஞர் ” : பிரபஞ்சனின் கேள்விகளுக்கு கலைஞரின் பதில்கள் !

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களைப் பற்றி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. பிரபஞ்சன் கேட்கிறார், ”திராவிட இயக்கம் என்பது பார்ப்பனியத்தை எதிர்த்து எழுந்த இயக்கம். இப்பொழுது அந்த இயக்கத்திற்கே ஒரு பார்ப்பனிய அம்மையார் தலைமை தாங்கி, அவரே நாட்டுக்கு முதலமைச்சராகவும் ஆகியிருக்கிறார் என்றால், இது திராவிட இயக்கத் தத்துவத்தின் பின்னடைவுதானே?”

அந்தக் கேள்வியை நாம் கவனிக்க வேண்டும். இதனை நாம் இன்னொரு இடத்திலும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். 1885 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி பிற்காலத்தில் எந்த நோக்கத்தோடு நிலைத்து நின்றது? ஆங்கிலேயர்களை வெளியேறச் சொல்லித்தான், `வெள்ளையனே வெளியேறு’ என்பதுதானே அதனு டைய இறுதிக்கட்டப் போராட்டம்! அப்படி எழுந்த கட்சிக்கு, பிறகு ஆங்கிலேயர் ஒருவரே தலைமை தாங்குகிற நிலையும் வந்தது இல்லையா? அதுவும் இதுவும் வேறு வேறானது.

இதற்கு கலைஞர் சொல்லியிருக்கிற விடை மிக நயமானது.

``இல்லை… இல்லை… இது தத்துவத்தின் பின்னடைவு இல்லை (அந்த அம்மையாரைத்) தத்தியவர்களால் ஏற்பட்ட பின்னடைவு’’, என்று சொல்லுகிறார். தத்துவம் வேறு, தத்திக்கொள்ளுதல் வேறு என்கிற அந்தச் சொல்விளையாட்டு! எப்போதுமே தலைவர் கலைஞர் அவர்களைப் போல, அப்படிச் சொல்விளையாட்டை ஆள்வதற்கு இன்னொருவர் இனி பிறந்துதான் வரவேண்டும் என்று தோன்றுகிறது.

“கேட்கத் தயங்கும் கேள்விகள்.. முகம் சுளிக்காத கலைஞர் ” : பிரபஞ்சனின் கேள்விகளுக்கு கலைஞரின் பதில்கள் !

மொழியை ஆண்ட `டிக்டேட்டர்!’

ஔவை நடராசன் அவர்கள் ஒரு முறை சொன்னார். ``தலைவர் கலைஞர் அவர்கள் தன் கைப்படத்தான் எழுதிக்கொண்டிருப்பார். இறுதியாகச் சில ஆண்டுகள்தான், அவர் சொல்லச்சொல்ல எழுதினார்கள்” என்று. தோள் வலி வந்ததற்குப் பிறகு ஒருமுறை ஔவை நடராசன் அவர்கள் தலைவரிடத்திலே கேட்கிறார்.

``அண்ணன் நீங்களே கைவலியோடு எழுதிக்கொண்டிருக்கிறீர்களே, டிக்டேட் பண்ணக்கூடாதா?’’ என்று கேட்கிறார்.

அதற்கு உடனடியாகக் கலைஞர் பதில் சொல்கிறார். ``நான் டிக்டேக்டரில்லயேப்பா’’ என்று சொல்கிறார். அந்த `டிக்டேட்’ என்கிற சொல்லுக்கு இருக்கிற இன்னொரு பொருளையும் பயன்படுத்திக்கொண்டு கலைஞர் சொன்ன அழகே அழகு! இப்படிப் பல கேள்வி பதில்கள், அதிலிருக்கிற நயமான விடைகள், சின்னச்சின்ன கேள்விகள், சின்னச்சின்ன விடைகள், சில விரிவான விடைகள்....

“கேட்கத் தயங்கும் கேள்விகள்.. முகம் சுளிக்காத கலைஞர் ” : பிரபஞ்சனின் கேள்விகளுக்கு கலைஞரின் பதில்கள் !

ஒரு மணி நேரத்தில் வாசிக்கலாம்

நீங்கள் அந்தப் புத்தகத்தைப் புரட்டினால், ஒரு மணி நேரத்துக்குள் படித்து முடித்துவிடலாம். கலைஞரினுடைய சிந்தனை ஆற்றலை, சொல் ஆற்றலை அறிந்துகொள்வதற்கு இந்த நூல் உதவும். உங்கள் எழுத்துக்களுக்கு முன்மாதிரி யார்? எப்படி இருந்தால் அது கலை? உலக இலக்கியங்களில் உங்களுக்குப் பிடித்தது எது? உங்கள் மகள் கனிமொழியின் படைப்புகளைப் படிப்பதுண்டா?

சில நேரங்களில் உங்களிடம் ஏன் சகிப்புத்தன்மை இருப்பதில்லை? ஜெயகாந்தன், `இந்தி படியுங்கள்’ என்கிறாரே? `குங்குமம்’ இதழுக்கு ஏன் ஒரு பிராமணர் ஆசிரியர்? ‘திராவிட வாரியார்’ என்று உங்களைச் சொல்லலாமா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள். வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் பற்றியும் கூட ஒரு வினா இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் சலிக்காமலும், முகம் சுளிக்காமலும் விடை சொல்கிறார் கலைஞர். அம்புகள் பாறைகளை அசைத்து விடுவதில்லை!

- வாசிப்போம்

banner

Related Stories

Related Stories