தி.மு.க

கழகத்தின் வேர்களுக்கு சிறப்பு செய்த ‘தலைமைத் தொண்டன்’ : முதல்வருக்கு புகழாரம் சூட்டிய முரசொலி செல்வம் !

“கடைக்கோடித் தொண்டர்கள் வரை அவர்களது தேவைகளை உணர்ந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திடவேண்டும்.” இது தலைவர் தளபதியின் உள்ளத்து உணர்வில் எழுந்தவேண்டுகோள்.

கழகத்தின் வேர்களுக்கு சிறப்பு செய்த ‘தலைமைத் தொண்டன்’ : முதல்வருக்கு புகழாரம் சூட்டிய முரசொலி செல்வம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“வேர்கள் செழித்தால்தான் மரம் வளரும்; தழைக்கும்!” - இது நாமெல்லாம் அறிந்த ஒன்று! ஒரு இயக்கத்தின் வேர்கள் அதன் தொண்டர்கள்! கழகத் தலைமைக்கும் அதன் தொண்டர்களுக்கும் இடையே உள்ள உறவு, தலைவர் - தொண்டர் என்ற ‘ஆண்டான் - அடிமை’ப்போக்கில் அமைந்து விடக்கூடாது - அது பந்தத்தால் பிணைக்கப்பட வேண்டும் என்று கருதிய அண்ணா, அவர்களைத் ‘தம்பி’ என்று அழைத்தார்! தொண்டர்களும் அவரை ‘அண்ணா’ என உரிமையோடு அழைத்து பெருமிதம் கொண்டனர்! குடும்பப் பாச உணர்வு மிளிரத் தொடங்கியது.

அண்ணாவுக்குப் பிறகு கழகத் தலைமைப் பொறுப்பேற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர், தனது தொண்டர்களை உடன் பிறப்புகளாக மதித்தார். “என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புக்களே!” - என்று அவர் விளிக்கும் போது ஒட்டு மொத்த கூட்டமுமே ஆர்ப்பரிக்கும்! பாசப்பிணைப்பால் கட்டுண்டு போகும்!

நமது இன்றைய தலைவர், தளபதியோ தன்னைத் தலைவராகப் பாவிக்காது, தொண்டர்களில் தானும் ஒருவர் என்பதைக் காட்டிடும் வகையில் “உங்களில் ஒருவன்” எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்! சமத்துவம் அதிலே அரசோச்சுகிறது!

தலைமைப் பொறுப்பேற்றுள்ள கழகத்தின் அந்தத் ‘தலைமைத் தொண்டன்’ கடந்த மே 30 அன்று நடைபெற்ற கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆற்றிய உரை - கழகத்தின் பொறுப்பிலும், கழகச் சார்பில் முக்கியப் பொறுப்புகளிலும் இருப்பவர்களுக்கு விடுத்த வேண்டுகோள், முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல; தனிக்கவனம் செலுத்தப் படவேண்டிய ஒன்றாகும்!

கழகத்தின் வேர்களுக்கு சிறப்பு செய்த ‘தலைமைத் தொண்டன்’ : முதல்வருக்கு புகழாரம் சூட்டிய முரசொலி செல்வம் !

இந்த இயக்கம் கண்ட எதிர்ப்புகளையும், எதிர் கொண்ட அடக்குமுறைகளையும், சந்தித்த தேர்தல் தோல்விகளையும் போல, வேறு எந்த இயக்கமும் சந்தித்திருக்க முடியாது! அத்தனையையும் சமாளித்து இன்று இமயமாய் உயர்ந்து, சிலிர்த்து நிற்கிறது என்றால், அதற்கு முழு முதற்காரணம், கொள்கை மாறா குணக்குன்றுகளாக விளங்கிடும் தொண்டர்கள்தான் என்பதை நாம் மறந்திடக்கூடாது!

நம் உயிர்த்தலைவர் கலைஞர், 1982 ஆம் ஆண்டில் தனது பிறந்த நாள் செய்தியாக தனது உடன்பிறப்புகளுக்கு விடுத்த கடிதத்தில், “நீ வாழ்த்துவது; கிரீடத்தையன்று!

கிரீடம் இருந்தாலும் இல்லா விட்டாலும் வாழ்த்தும் பண்பு கொண்ட உடன்பிறப்பு நீ!

உனக்காக உழைக்கின்ற இந்தக் காலணியை வாழ்த்துகின்றாய்!” தலைவர் மட்டுமல்ல; இந்த நாட்டின் தலை எழுத்தை பல நேரங்களில் எழுதிய மாபெரும் ஆளுமை அவர்! அவர் தன்னை தனது உடன் பிறப்புகளின் காலணியோடு ஒப்பிட்டுக் கொண்டு எழுதிய அந்தப் பிறந்த நாள் செய்தி படித்து கலங்காத கண்கள் இல்லை எனலாம்!

தலைவர் கலைஞர் கொண்ட உணர்வு - இன்றைய கழகத் தலைவர் தளபதியை ஆட்கொண்டுள்ளது என்பதின் எதிரொலி தான் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை!

இந்த இயக்கத்தின் தொண்டர்கள் பெரும்பாலானோர், தலைவர் கலைஞர் அடிக்கடி கூறி வந்தது போல, இந்த இயக்கத்தால் தனக்கு என்ன லாபம் என்று கருதி தங்களை ஒப்படைத்துக் கொண்டவர்கள் அல்ல; தன்னால் இந்த இயக்கத்துக்கு என்ன லாபம் என்று எண்ணி செயல்படும் இரத்த நாளங்கள்! அவர்கள் சுயமரியாதை உணர்வால் வார்த்தெடுக்கப்பட்டவர்கள்! இலட்சிய வேட்கை தவிர வேறெதுவும் அறியாதவர்கள்! வறுமை வாட்டினாலும் காட்டிக் கொள்ளாது, “தன் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று, கிடைக்கும் நேரமெல்லாம் கழகப் பணி ஆற்றிக் கொண்டிருப்பவர்கள்!

கழகத்தின் வேர்களுக்கு சிறப்பு செய்த ‘தலைமைத் தொண்டன்’ : முதல்வருக்கு புகழாரம் சூட்டிய முரசொலி செல்வம் !

சமீபகாலங்களில் சமூக ஊடகங்கள் அத்தகைய கொள்கைத் தங்கங்களைப் படம் பிடித்துக் காட்டிவருகின்றன. சமீபத்தில் ஒரு ‘வீடியோ’ காட்சி வலைதளங்களில் வலம் வந்தது. ஒரு முதியவர் கோலூன்றி நடக்க இயலும் வயது, மழை வரலாம் என்ற எதிர்நோக்கோடு கையில் குடை; ஆம் ஒரு கையில் கோல், மறு கையில் குடை, தோளிலே மடிப்பு கலையா கருப்பு - சிகப்பு துண்டு, காலிலே இப்போது அறுந்து போகுமோ அல்லது எப்போது அறுந்து போகுமோ என்ற நிலையில் செருப்பு, பின்னணியில் கருப்பு சிகப்பு கொடிகள் இத்யாதி காட்சியுடன் சீறு நடைபோட்டு மிடுக்குடன் சிங்கம் போல செல்லும் காட்சி! வீடியோவில் அந்த முதியவர் நடக்கும்போது பின்னணியில் கலைஞர் கவியரங்கம் ஒன்றில் பாடிய கவிதை கலைஞரின் கணீர் குரலில் - இந்தக் காட்சியைக் கண்டபோது பலரின் மெய் சிலிர்த்தது. இதுதான், ஆம்!

இந்த முதியவர் போன்றவர்கள்தான், அவர்களைக் காணும் இளைஞர்களுக்கு ஏற்படும் ஈர்ப்புதான் இந்த இயக்கத்தின் பெரும்பலம்! இந்த முதியவர் மட்டுமல்ல; இதுபோன்று எதனையும் எதிர்நோக்காது இந்த இயக்கத்தில் தங்களை ஒப்படைத்தவர்கள் ஏராளம்! அவர்கள் எல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாத அடிமட்ட வேர்கள்! எத்தனை பெரிய சோதனைப் புயல்கள், அடக்குமுறை பூகம்பங்கள் தாக்கிய போதும் இந்த இயக்கம் ஆடாது அசையாது நிற்கிறது என்றால், இவர்களைப் போன்றவர்கள் நமது அடித்தளங்களாக தாங்கி நிற்பதுதான்!

கழகத் தலைவர் தளபதி அதனை நன்கறிந்தவர்; அவர்களைப் போன்றோர் இல்லை எனில் இந்த இயக்கம் இல்லை என்பதை உள்ளார்ந்து உணர்ந்தவர் - அதனை என்றும் மறந்தவர் அல்ல என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. கழகத்தின் மூத்த தொண்டர் ஓசூர் நாராயணப்பா, குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கழகக் கூட்டணி நடத்திய கண்டன ஊர்வலத்தில் கலந்து கொள்ள தன்னந்தனியாக ஓசூரிலிருந்து வந்து கொடி பிடித்துச் சென்ற காட்சியை ஊடகங்களில் பார்த்து அவரை அறிவாலயத்துக்கு அழைத்து அவரோடு மற்ற கழக முன்னணியினரைச் சந்திக்க வைத்து அவருக்கு சிறப்பு செய்தது, மூத்த முன்னோடித் தோழர்களிடம் அவர் வைத்திருக்கும் மரியாதைக்கு சாட்சி!

கழகத்தின் வேர்களுக்கு சிறப்பு செய்த ‘தலைமைத் தொண்டன்’ : முதல்வருக்கு புகழாரம் சூட்டிய முரசொலி செல்வம் !

சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது கழகத்தின் மூத்த முன்னோடிகள் இல்லம் சென்று, (சமீபத்தில் திருச்சி. செல்வேந்திரன்) அவர்களுக்கு மரியாதை தெரிவிப்பதை பல நேரங்களில் பார்க்கிறோம். பத்தமடை பரமசிவம் போன்ற மூத்தவர்கள் உரிமையுடன் அவர் கையைப்பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் செல்லும் காட்சிகளையும் கண்டிருக்கக்கூடும்!

இவற்றையெல்லாம் குறிப்பிடக் காரணம், கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் தளபதி ஆற்றிய உரையை அனைத்துத் தரப்பினரும், பொறுப்புகளைப் பெற்றுள்ள அனைவரும் மனதில் கொள்ளவேண்டும். “கடைக்கோடித் தொண்டர்கள் வரை அவர்களது தேவைகளை உணர்ந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திடவேண்டும்.” இது தலைவர் தளபதியின் உள்ளத்து உணர்வில் எழுந்தவேண்டுகோள்.

ஏற்கனவே குறிப்பிட்ட படி சுயமரியாதை உணர்வில் வளர்ந்த பல உடன்பிறப்புகள் யாரையும் நாடி வர மாட்டர்கள்; நாம் அவர்களைத் தேடி உதவிட வேண்டும்! நம்மைச் சுற்றி வருபவர்களில் பலருக்கு மட்டும் உதவுவது மட்டும் போதாது... பலர் எதையும் எதிர்பாராது இந்த இயக்கத்தின் ஏற்றத்துக்கு உழைத்தவர்கள்! எட்டி நின்று உங்களைப் பார்த்துப் பெருமிதம் கொண்டிருப்பவர்கள்! அவர்களின் தேவைகளை உணர்ந்து செயல்படுங்கள். வேர்களின் பலம்தான் விருட்சத்தின் வளர்ச்சி!

- முரசொலி செல்வம்

நன்றி : முரசொலி (01.06.2022)

banner

Related Stories

Related Stories