தி.மு.க

“தண்டிக்கப்பட்ட குற்றவாளியை முன்னிறுத்தி ஆட்சி நடத்துவது அருவருப்பு கலந்த இழிவு” - கடுமையாக சாடிய ஆ.ராசா!

உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டுகிறீர்கள். அந்த நினைவிடத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் வரிகளை எழுத முன்வருவீர்களா?

“தண்டிக்கப்பட்ட குற்றவாளியை முன்னிறுத்தி ஆட்சி நடத்துவது அருவருப்பு கலந்த இழிவு” - கடுமையாக சாடிய ஆ.ராசா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக முதலமைச்சருக்கு, தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., இன்று (9.12.2020), செய்தியாளர் சந்திப்பின் மூலம் வெளியிட்ட திறந்த மடல்.

அதில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் தலைவர் கலைஞர் மீதும் - மத்திய அமைச்சராக பணியாற்றி 2ஜி வழக்கை எதிர்கொண்டு வெற்றி பெற்ற என்மீதும் கடந்த 03.12.2020 அன்று தொலைக்காட்சியில் தாங்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறும் விதமாக அதே தேதியில் நானும் ஊடகங்களை சந்தித்து யார் ஊழல்வாதி, எந்தக் கட்சி ஊழல் கட்சி என்பதை பகிரங்கமாகவும் பட்டவர்த்தனமாகவும் ஆதாரத்தோடு குறிப்பிட்டு தி.மு.கழகத்தின் மீது தாங்கள் தெரிவித்த வீராணம், சர்க்காரியா, 2ஜி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எவையும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லையென்றும், ஆனால் உங்களால் ‘அம்மா’ என்று சுயநலக் காரியங்களுக்காக அழைக்கப்படும் ஜெயலலிதா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு சிறை சென்றவர் என்றும், அவர் சிறை செல்ல காரணமாக இருந்த கீழமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் குன்ஹா அவர்களின், தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதென்றும், எனவே ‘அம்மா’ வழியில் தங்கள் ஆட்சி நடைபெறுவதாக கூறுவது ஊழல் செய்ய அனுமதியும் - அங்கீகாரமும் கேட்கும் வெட்கமற்ற செயல் என்றும் கூறியதோடு, இதுகுறித்து விவாதித்து உண்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த என்னை கோட்டைக்கு அழையுங்கள் என்று வேண்டியதோடு, அப்போது உங்கள் அமைச்சரவையையும் - உங்களின் எஜமான மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலையும் - மாநில அட்வகேட் ஜெனரலையும் அழையுங்கள் என்று பகிரங்க சவால் விட்டிருந்தேன்.

நாட்கள் பலவாகியும் தங்களுக்கு ஏனோ அந்த திராணியும் - தெம்பும் இல்லை என்பதை நடுநிலையாளர்கள் உணர்ந்துள்ளார்கள். ஏனெனில் உங்கள் தலைவியின் மீது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடர்த்தி அத்தகையது. தீர்ப்பின் அடர்த்தி தெரிந்து நீங்கள் தொடர்ந்து அமைதி காத்திருந்தால் உங்கள் அரசியல் பண்பு சற்றே உயர்ந்திருக்கக் கூடும். என்னுடைய நேர்காணலில், நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் பொறுப்பேற்கும் அதே வேளையில், அவை பொய்யென்று நிரூபிக்க நீங்கள் எடுத்த பொய்க்கால் குதிரை முயற்சிகள் பலன் தராது என்பதை உங்களுக்கு உணர்த்தி, உங்களை நாகரீகமான ஆரோக்கியமான அரசியலுக்கு நெறிப்படுத்தவே இக்கடிதத்தை நான் எழுதுகிறேன்.

வீராணம் பற்றிய புகார் குறித்தோ - சர்க்காரியா கமிஷன் குறித்தோ - 2ஜி வழக்கு குறித்தோ தங்களால் ஏதும் ஆதாரத்தோடு பேச முடியாது என்று தெரிந்திருந்தும் உங்கள் ஊழலை மறைக்க அவ்வப்போது நீங்களும் உங்கள் சகாக்களும் விடும் ‘உதாரு’க்கும் உளறலுக்கும் எப்போதும் நீங்கள் வெட்கப்பட்டதில்லை. “விஞ்ஞான ரீதியாக நடைபெற்ற ஊழல்” என்று எந்த இடத்திலும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இல்லையென்று உங்களுக்கும் உங்கள் சகாக்களுக்கும் நன்றாகவே தெரியும். 2ஜி வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு (choreographed charge sheet) என்று நீதியரசர் ஓ.பி.சைனி கூறியதையும் உங்கள் சட்ட அறிஞர்கள் உங்களுக்கு சொல்லாமல் இருந்திருக்க மாட்டார்கள். நீங்கள் என் சவாலை ஏற்காவிடினும், நாட்டு மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்த உங்கள் அம்மா மீதான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஆழமான கருத்துகளை, உங்களுக்கு கவனப்படுத்துகிறேன். பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலிருந்து இன்று வரை ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணையை எதிர்கொண்ட எந்த அரசியல்வாதியும், உங்கள் அம்மாவைப் போல் நீதிமன்ற தாக்குதலுக்கு ஆளானதில்லை என்பதை பின்வரும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் பகுதியிலிருந்து திறந்த மனநிலையில் உள்ள - சாதாரண அறிவுள்ள எவரும் அறியலாம். நீங்களும் அறிய வேண்டும் என விரும்புகிறேன்.

முதல் குற்றவாளி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, இரண்டாம் குற்றவாளியான சசிகலா, மூன்றாம் குற்றவாளியான சுதாகரன், நான்காம் குற்றவாளியான இளவரசி ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டில் உச்சநீதிமன்ற நீதியரசர்கள் பினாக்கி சந்திரகோஸ் மற்றும் அமித்தவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பின் முடிவுரை பகுதிகள் சிலவற்றை பட்டியிலிடுகிறேன், உங்களின் மேலான பார்வைக்கு :

“தண்டிக்கப்பட்ட குற்றவாளியை முன்னிறுத்தி ஆட்சி நடத்துவது அருவருப்பு கலந்த இழிவு” - கடுமையாக சாடிய ஆ.ராசா!

(அ) முதல் குற்றவாளி (ஜெயலலிதா) முதலமைச்சராக இருந்த போது (Public Servant) மற்ற மூன்று குற்றவாளிகளோடு கூட்டு சதியில் ஈடுபட்டு, பல்வேறு நிறுவனங்களை, வெளியில் தெரியாவண்ணம், வெவ்வேறு பெயர்களில் தொடங்கி; வருமானத்திற்கு அதிகமாக குவித்த சொத்துக்களை, மற்ற குற்றவாளிகளின் பேரில் பதுக்கி வைத்துள்ளார். சசிகலா உள்ளிட்ட பிற குற்றவாளிகளை பயன்படுத்தி குற்றச் செயலில் ஈடுபட்ட ஜெயலலிதாவின் குற்றம் நிரூபணமாகியுள்ளது என்ற முடிவுக்கு நாங்கள் வருகிறோம். (பக்கம் 535 : பத்தி 540)

(ஆ) முதல் குற்றவாளி ஜெயலலிதாவால் ஊழல் தடுப்பு சட்டம் 1988 பிரிவு 13(1)(e) கீழ் நடத்தப்பட்டுள்ள குற்றச்செயலினை இதர குற்றவாளிகளின் (சசிகலா, சுதாகரன், இளவரசி) குற்ற சதியும் தூண்டுதலும் போதுமான சாட்சியங்களுடன் கீழமை நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளன. அவை பின்வரும் சூழ்நிலைகளால் உறுதிப்படுத்தப்படுகின்றன. (பக்கம் 537)

(இ) ஜெயா பப்ளிகேஷன் குறித்து முதல் குற்றவாளி ஜெயலலிதா இரண்டாம் குற்றவாளி சசிகலாவிற்கு பொது அதிகாரப் பத்திரம் ஒன்றை (General Power of Attorney) எழுதி வைத்துள்ளார். தன்னை சட்ட சிக்கலிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு எழுதி வைக்கப்பட்ட இப்பத்திரத்தின் மூலம் பண வரவுகளை சசிகலா மூலமாக ஜெயலலிதா, தெரிந்தே, தன் கணக்கில் சேர்த்துக்கொண்டே வந்துள்ளார். (பக்கம் 537 : பத்தி 544)

(ஈ) தான் பதவியில் இருந்த காலத்தில் தொடங்கப்பட்டட பல்வேறு கம்பெனிகள் குற்றவாளிகளுக்கிடையே சதியை உறுதிப்படுத்தும் சூழ்நிலைகளை உறுதிப்படுத்துகின்றன. ஒரேநாளில் 10க்கும் மேற்பட்ட கம்பெனிகள் உருவாக்கப் பட்டுள்ளன. இது தவிர, சசிகலாவும் சுதாகரனும் தனிப்பட்ட முறையில் கம்பெனிகளை துவக்கி, சொத்துக்களை வாங்கியுள்ளனர். இக்கம்பெனிகளில் வேறு எந்த வர்த்தக நடவடிக்கைகளும் நடைபெறவில்லை. இக்கம்பெனிகள் நமது எம்ஜிஆர் மற்றும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனங்களின் நீட்சி என்பதும், அவை ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் வர்த்தக நலன்களுக்காக உருவாக்கப்பட்டதென்றும் அய்யமின்றி தெளிவாகிறது. (பக்கம் 538)

(உ) சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் எந்த இரத்த சம்பந்தமுமின்றி முதல் குற்றவாளி ஜெயலலிதாவின் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இக்கம்பெனிகள் அனைத்தும் ஜெயலலிதாவின் வீட்டிலிருந்தே பிற குற்றவாளிகளால் நடத்தப்பட்டு வந்துள்ளன. எனவே, இக்கம்பெனிகள் குறித்து ஜெயலலிதாவிற்கு ஏதும் தெரியாது என்றும் அவர் ஏதும் அறியாதவர் என்றும் வைக்கப்படும் வாதத்தை ஏற்க இயலாது. (பக்கம் 538).

(ஊ) குற்றவாளிகள் அனைவரும் ஒரு கூட்டமாக முதல் குற்றவாளி ஜெயலலிதா வீட்டில் வசித்து வந்துள்ளனர். சேர்ந்து வாழ்வதற்காகவோ (social living) அல்லது மனிதாபிமான அடிப்படையிலோ (Humanitarian ground) ஜெயலலிதா பிற குற்றவாளிகளை தன் வீட்டில் தங்க வைக்கவில்லை. மாறாக, ஜெயலலிதா சேர்த்துக் குவித்த சொத்துகளை அவர்கள் பெயரில் வைத்துக் கொள்ளவே சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஜெயலலிதாவால் அவர் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்று சாட்சியங்கள் அடிப்படையிலும் சூழ்நிலை அடிப்படையிலும் ஐயமின்றி நிருபிக்கப்பட்டுள்ளது (பக்கம் 539)

(எ) இவ்வாறு தொடங்கப்பட்டுள்ள கம்பெனிகளில், ஒரு கம்பெனியிலிருந்து மற்ற கம்பெனிகளுக்கு செலுத்தப்பட்டுள்ள அபரிதமான பண பரிவர்த்தனைகள், முதல் குற்றவாளி ஜெயலலிதாவால் குவிக்கப்பட்ட சட்டத்திற்கு புறம்பான சொத்துக்களை சட்டப்படியான தோற்றத்தில் அந்த கம்பெனிகளில் வாங்கிட பயன்படுத்தப்பட்டுள்ளன என்ற சதி நிரூபணமாகிறது. (பக்கம் 539)

(ஏ) எனவே, விசாரணை நீதிமன்றம் மிகச் சரியான முடிவையே உரிய காரணங்களோடு எட்டியுள்ளது என்று நாங்கள் கருதுகிறோம். அதன்படி, குற்றவாளிகளை விடுதலை செய்த உயர்நீதிமன்ற தீர்ப்புரையை இரத்து செய்தும் விசாரணை நீதிமன்ற தீர்ப்பை அப்படியே இதர குற்றவாளிகளுக்கு எதிராக உறுதி செய்தும் உத்திரவிடுகிறோம்.

(ஐ) இவ்வழக்கின் உண்மைகளை (facts) தேடி கண்டறிந்த போதும், உரிய சட்டப்பிரிவுகளை ஆய்வு செய்தபோதும் இவ்வழக்கின் இதர குற்றவாளிகளான சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருடனான முதல் குற்றவாளி ஜெயலலிதாவின் உறவும்; அவருக்கு எதிராக, ஒன்றுடன் ஒன்று இணைந்து, பிரிக்க முடியாதவாறு சாட்சியங்களின் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ள அவரின் குற்றச் செயலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், வழக்கு நடைபெறும் போது அவர் இறந்து விட்டதால், இந்த மேல்முறையீடு அவரைப் பொறுத்தவரை அற்றுப் போகிறது! (பக்கம் 540).

“தண்டிக்கப்பட்ட குற்றவாளியை முன்னிறுத்தி ஆட்சி நடத்துவது அருவருப்பு கலந்த இழிவு” - கடுமையாக சாடிய ஆ.ராசா!

பொது ஊழியரான ஜெயலலிதாவின் குற்றச் செயல்கள் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் பிரிக்க முடியாமல் பிரதானமாக இருந்ததால் மட்டுமே, அவரோடு சதியில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகள் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படவில்லை என்றால், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமான வரிச் சட்டத்தின் கீழ் மட்டுமே அபராதம் செலுத்த வேண்டிய தனிமனிதர்கள் ஆவார்கள். இந்தக் குறைந்தபட்ச சட்டப் புரிதல்கூட இல்லாமல் உங்கள் அம்மாவை புனிதவதி ஆக்கும் முயற்சியில் நீங்களும் உங்கள் சகாக்களும் ஈடுபடுவீர்கள் என்று தீர்க்கமாய் உணர்ந்த நீதிபதிகள் தீர்ப்போடு தங்கள் கண்டனத்தை நிறுத்தவில்லை.

இரு நீதிபதிகளும் கையெழுத்திட்டபின் நிறைவுறும் இத்தீர்ப்பில், மன நிறைவடையாத நீதியரசர் மாண்புமிகு அமித்தவராய் தீர்ப்பின் கூடுதல் இணைப்பாக ஐந்து பக்கங்களை தனிப்பட்ட முறையில் எழுதி தன் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ஜெயலலிதாவின் ஊழல், நீதியரசரை ஆச்சரியத்தில் மூர்ச்சையாக்குகிறது.

இதோ அந்த பதிவுகள்:

* சில கவலை தரும் சிந்தனைகளும் அவை ஏற்படுத்தும் வெறுப்பூட்டும் எண்ணங்களும் அமைதியை கெடுப்பதால் இத்தீர்ப்பின் கூடுதல் பகுதி சேர்க்கப்படுகிறது.

* இத்தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, சட்ட முறைகளை ஏமாற்றி போலி கம்பெனிகள் பலவற்றை உருவாக்கி அவைகள் மூலம் குற்ற உணர்ச்சியோ கூச்ச நாச்சமோ சிறிதுமின்றி சட்டத்திற்கு புறம்பாக, பெரும் சொத்துக்களை கொள்ளையடிக்க ஆழமான சதி வடிவமைக்கப்பட்டுள்ளதை இவ்வழக்கின் உண்மைகளும் சூழ்நிலையும் தெளிவுபடுத்துகின்றன. (பக்கம்-543)

* மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை மறந்து அவர்களின் நம்பிக்கையை சிதைக்கும் இத்தகைய சுயநலம் கொண்டவர்களின் நடத்தை அரசியல் சட்டத்தின்மீது அவர்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை மீறுவதாகவும், அரசமைப்பு சட்டத்தின் புனிதத்தை களங்கப்படுத்துவதாகவும் உள்ளது. இப்படிப்பட்டவர்களின் செய்கை இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் எண்ணத்தையும் வாழ்வையும் இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிற, நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவ கண்ணியம், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு என அரசியல் சட்டத்தின் முகப்புரையில் கூறப்படும் உயரிய கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான தன்மை கொண்டது மட்டுமல்ல; நமது மக்களாட்சி தத்துவத்திற்கு அடித்தளமாக உள்ள அரசமைப்பு சட்டத்தின் மீது நடத்தப்பட்ட மன்னிக்க முடியாத படுகொலையாகும். (பக்கம் 546).

மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே,

சசிகலாவோ, சுதாகரனோ, இளவரசியோ அரசியல் சட்டத்தின்பால் உறுதிமொழி எடுத்துக் கொண்டவர்கள் அல்ல. மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தவர்களும் அல்ல. அரசியல் சட்டத்தின் முகப்புரை பண்புகளுக்கு பொறுப்பாளிகளும் அல்ல. அவர்கள் அரசியல் சட்டத்தை படுகொலை செய்யுமிடத்திலும் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, உச்சநீதிமன்றத்தின் இந்த கண்டனக் கணைகள், ஜெயலலிதாவை மட்டுமே நோக்கித்தான் என்று பிறர் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை, உங்களுக்கு ஏற்பட வாய்ப்பில்லை.

இவ்வளவு தெளிவாக ஜெயலலிதாவின் கொள்ளையை, உச்சநீதிமன்றம் தோலுரித்த பிறகும், ஜெயலலிதா குற்றவாளி இல்லை என்று தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பதாக நீங்களோ - உங்களின் பிரதிநிதிகளோ கூறுவீர்களேயானால், உங்களின் நேர்மையை சமூகம் சந்தேகித்தே தீரும். இவ்வளவு மோசமாக உச்சநீதிமன்றத்தால் கொடூர தாக்குதலுக்கு உள்ளான ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் படத்தை, எங்கு சென்றாலும் முன்னிறுத்தி, அவர் வழியில்தான் ஆட்சி நடைபெறும் என்று கூறுவது எவ்வளவு அருவருப்பு கலந்த இழிவு என்பதை உங்களால் உணர முடிகிறதோ இல்லையோ, பொது வாழ்வில் குறைந்தபட்ச நேர்மையை எதிர்பார்க்கும் எவராலும் ஏற்றுக் கொள்ளமுடியாது.

உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டுகிறீர்கள். அந்த நினைவிடத்தில் உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பின் வரிகளை எழுத முன்வருவீர்களா? பீகார் மாநிலத்தில் தண்டிக்கப்பட்ட குற்றவாளியான தன் தந்தை லாலு பிரசாத் யாதவின் படத்தை போடாமலும் - அவர் பெயரை உச்சரிக்காமலும்தான் தேர்தல் களம் கண்டார் அவர் மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவ். தந்தையேயானாலும் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்ற அவரது தயக்கத்தில்தான் உண்மையும் நியாயமும் அவரிடத்தில் நிலைகொண்டன.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் ஆளாகி, உயர்நீதிமன்றத்தால் போதுமான ஆதாரம் உள்ளதென்றும்; நீங்கள் முதலமைச்சர் என்பதால் மத்திய புலனாய்வு அமைப்புதான் வழக்கை விசாரிக்க வேண்டுமென்றும், உயர்நீதிமன்ற தீர்ப்பு உங்களுக்கு எதிராக வந்த பிறகும் உங்கள் தலைவியைப் போலவே சட்டத்தின் சந்து பொந்துகளில் ஒளிந்து கொண்டு வரும் உங்களுக்கு, ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் பெயரையும், படத்தையும் முன்னிலைப்படுத்துவதில் தயக்கம் இருக்காது என்பதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. என்றாலும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்: எது உண்மையென்று தெரிந்த பிறகாவது உண்மையை மறைப்பதையும், தகுதியற்ற சிலரை அனுப்பி பேட்டி என்ற பெயரால் பொய்களுக்கு மகுடம் சூட்டுவதையும் எதிர்காலத்திலாவது நிறுத்திக் கொள்ளுங்கள்.

இந்த வேண்டுகோள், உங்களுக்காக அல்ல; நீங்கள் உட்கார்ந்திருக்கும் நாற்காலியின் மாண்பிற்காக!” இவ்வாறு ஆ.ராசா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories