தி.மு.க

“ஆட்சியின் சாதனையை சொல்ல முடியாமல் அநாகரிக அரசியல் செய்யும் எடப்பாடி” - துரைமுருகன் கடும் கண்டனம்!

உள்ளாட்சித் துறையைப் போல் காவல்துறையையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குட்டிச்சுவராக்கிவிடுவார் என தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்

“ஆட்சியின் சாதனையை சொல்ல முடியாமல் அநாகரிக அரசியல் செய்யும் எடப்பாடி” - துரைமுருகன் கடும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"தி.மு.கழகத் தலைவரைக் கொச்சைப்படுத்திப் பெயர் போடாமல் தரக்குறைவான சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது தி.மு.க.வினர் கொடுத்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்"

"பல இடங்களில் தரக்குறைவான சுவரொட்டிகளை காவல்துறையினரே கிழித்தபோதும், கோயம்புத்தூர் காவல்துறையினர் மட்டும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் எடுபிடிகளாக இருக்கிறார்கள். உள்ளாட்சித் துறையைப்போல் காவல் துறையையும் அவர் குட்டிச்சுவராக்கிவிடுவார் போலிருக்கிறது" என தி.மு.கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

“அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளைச் சொல்ல முடியாமல் திணறி - திண்டாடிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி, இன்றைக்கு எங்கள் கழகத் தலைவர் தளபதி குறித்துத் தரக்குறைவான சுவரொட்டிகளை ஒட்டி அநாகரிக அரசியல் செய்வதற்குத் தூபம் போடுவதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாகரிகமான - ஆக்கபூர்வமான - கண்ணியமான விமர்சனங்களை முன்வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற உயரிய அரசியல் பண்புகளை ஒவ்வொரு தொண்டனின் உள்ளத்திலும் பசுமரத்தாணி போல் பதிய வைத்து அரசியல் செய்தவர்கள் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும்! அவர்களின் வழிநின்று - அந்த வழியிலிருந்து ஒரு அங்குலம் கூட பிறழாமல் - அணுவளவும் தரக்குறைவான விமர்சனங்களுக்கு இடம் அளிக்காமல் இந்தப் பேரியக்கத்தை நடத்தி வருகிறார் எங்கள் கழகத் தலைவர் தளபதி.

ஆனால், ஆட்சியின் - பதவிக்காலத்தின் முடிவு நெருங்கி - தேர்தலைச் சந்திக்கும் நெருக்கடியில் இருக்கும் அ.தி.மு.க. “அச்சடித்தவர் யார்” என்ற பெயரே போடாமல் ஆங்காங்கே சுவரொட்டிகளை ஒட்டுவதும் - கழகத் தலைவர்கள் பேசாததைப் பேசியதாகத் திரித்து சமூகவலைதளங்களில் பரப்புவதும் தரங்கெட்ட அரசியலின் உச்சக்கட்டம். விஷமத்தனமான பிரச்சாரத்தைத் தமிழகம் எந்தக் காலத்திலும் ஏற்காது என்பதை முதலமைச்சர் பழனிசாமி நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

“ஆட்சியின் சாதனையை சொல்ல முடியாமல் அநாகரிக அரசியல் செய்யும் எடப்பாடி” - துரைமுருகன் கடும் கண்டனம்!

அ.தி.மு.க.வினரால் நேற்றைய தினம் ஒட்டப்பட்ட அனாமதேய சுவரொட்டிகளால் கோயம்புத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கழகத் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக “ஒட்டியவர்களே” சில இடங்களில் சுவரொட்டிகளைக் கிழித்துள்ளார்கள். பல இடங்களில் காவல்துறை நண்பர்கள் கிழித்துப் போட்டிருக்கிறார்கள். ஆனால் கோயம்புத்தூரில் உள்ள காவல்துறையினர் மட்டும் அமைச்சர் “எஸ்.பி. வேலுமணியின்” எடுபிடிகளாக இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது.

கோவை, குனியமுத்தூர் பகுதியில் மட்டும் இதுபோன்ற சுவரொட்டிகளை - அ.தி.மு.க.வினரும் கிழிக்காமல் போலீசாரும் கிழிக்காமல் வேடிக்கை பார்த்ததால் - கழகத் தொண்டர்களே ஆவேசப்பட்டுப் போராடியிருக்கிறார்கள். அப்படி “பெயர் போடாமல்” “அநாகரிகமாக” எங்கள் கழகத் தலைவர் குறித்து சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் புகார் கொடுத்த தி.மு.க.வினர் மீதே வழக்குப் போட்டு கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருக்கிறது அங்குள்ள காவல்துறை.

இந்த அபத்தமான நடவடிக்கையை - அராஜகமான நடவடிக்கையை குனியமுத்தூர் காவல் நிலைய அதிகாரி செய்திருக்கிறார்; அப்படிப் பொய் வழக்குப் போடுவதற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டிருக்கிறார் என்பது சட்டவிரோதமானது. எஞ்சியிருக்கின்ற ஆறு மாதங்களில் அந்த அமைச்சர் உள்ளாட்சித்துறையை மட்டுமல்ல; காவல் துறையையும் குட்டிச்சுவராக்கி விடுவார் போலிருக்கிறது.

முதலமைச்சர் பழனிசாமி அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ளும் அறிவுரை ஒன்றே ஒன்றுதான். திராவிட முன்னேற்றக் கழகம் இதுபோன்ற அநாகரிக அரசியலில் நம்பிக்கையில்லாத கட்சி. ஆகவே இதுபோன்ற சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது. நாங்கள் பனங்காட்டு நரிகள். எமெர்ஜென்சியைப் பார்த்தவர்கள். ஏன் உங்கள் அம்மாவின் அராஜகத்தையே சந்தித்து வெற்றி கண்டவர்கள். ஆகவே இது மாதிரியெல்லாம் “அநாகரிகமான சுவரொட்டி” களை ஒட்டி அரசியல் செய்வதை முதலில் கைவிட்டு - ஆக்கபூர்வமாக - உண்மைகளைப் பேசி மக்களிடம் வாக்கு கேளுங்கள். நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை.

ஜனநாயகத்தில் மக்கள்தான் இறுதி எஜமானர்கள். அவர்கள் உங்களின் வேதனை மிகுந்த ஆட்சிக்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள். அதை விடுத்து விட்டு - “கொச்சைப்படுத்தி சுவரொட்டி” ஒட்டும் வியூகம் சொல்லிக்கொடுப்போரின் “சொந்த ஆசையை” நிறைவேற்ற முற்பட்டு - பொறுப்புள்ள பதவியில் முதலமைச்சராக இருக்கும் நீங்கள் வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

எங்கள் கழகத் தலைவரைக் கொச்சைப்படுத்தி சுவரொட்டி ஒட்டுவதை - அதுவும் பெயர் போடாமல் சுவரொட்டி அடித்து ஒட்டுவதை எங்கள் கழகத் தொண்டர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆகவே இதுபோன்று தரக்குறைவான சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் மீது தி.மு.க.வினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் , கழகத்தினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு போஸ்டர் ஒட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாவிட்டால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories