தி.மு.க

“தி.மு.கழகத்தின் சாதனைகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உரிமை கொண்டாட முனைவதா?” - மு.க.ஸ்டாலின் சாடல்!

தி.மு.கழகத்தின் சாதனைகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உரிமை கொண்டாட முனைந்திருப்பது, வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் இருக்கிறது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தி.மு.கழகத்தின் சாதனைகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உரிமை கொண்டாட முனைவதா?” - மு.க.ஸ்டாலின் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1989-ம் ஆண்டு முதலமைச்சரான போதே முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கி, பின்னர் அவர் ஆட்சிக்கு வந்த போதெல்லாம் அதனை உறுதிப்படுத்தப் பாடுபட்டார்; தி.மு.கழகத்தின் சாதனைகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உரிமை கொண்டாட முனைந்திருப்பது, வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் இருக்கிறது" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதுநிலை மருத்துவப் படிப்பில் மாநிலத்திற்கான 50 சதவீத இடங்களில் உள்ஒதுக்கீடாக 50 சதவீத இடங்களுக்கான தமிழ்நாடு அரசில் பணிபுரியும் மருத்துவர்களின் உரிமையை உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் மூலம் நிலை நிறுத்தியதாக” முதலமைச்சர் பழனிசாமி ஓர் அறிக்கையை நேற்றைய தினம் (1.9.2020) வெளியிட்டு - திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகளுக்கு உரிமை கொண்டாட முனைந்திருப்பது நல்ல வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் இருக்கிறது.

ஒருவேளை முதலமைச்சருக்கு இந்த உள்ஒதுக்கீட்டின் வரலாறு தெரியவில்லை போலிருக்கிறது.

அறிக்கை எழுதிக் கொடுத்த அதிகாரிகளாவது அதை ஆரம்பம் முதல் விளக்கியிருக்க வேண்டும். அவர்களுக்கும் தெரிவிக்க மனமில்லையா எனத் தெரியவில்லை. அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு இந்த 50 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்கியதே தி.மு.கழக ஆட்சிதான். அதனால்தான் இந்தத் தீர்ப்பு வெளிவந்த உடனேயே, “அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவக் கல்வியில் கழக ஆட்சியில் வழங்கப்பட்ட சலுகையும், சமூகநீதியும் நிலைநாட்டப்பட்டுள்ளது” என்று எனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.

அதன் பிறகு கூட இதற்கு முழுக்க முழுக்க அ.தி.மு.க. அரசுதான் காரணம் - அதுவும் தன் தலைமையிலான அரசுதான் காரணம் என்று ஓர் அறிக்கையை முதலமைச்சர் வெளியிட்டிருப்பதால் - அரசு மருத்துவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது யார் - எந்த ஆட்சி என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

“தி.மு.கழகத்தின் சாதனைகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உரிமை கொண்டாட முனைவதா?” - மு.க.ஸ்டாலின் சாடல்!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மூன்றாவது முறையாக முதலமைச்சரான போது - முதன்முதலில் 1989-ல் அரசு மருத்துவர்களுக்கு இந்த 50 சதவீத உள் ஒதுக்கீடை வழங்கினார். நான்காவது முறையாக முதலமைச்சரான தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில் இந்த உள் ஒதுக்கீட்டில் சேர்ந்து படிக்கும் அரசு மருத்துவர்களுக்கான வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டார்.

“தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்படும் மருத்துவர்கள் - மாநிலப் பொதுச் சுகாதார இயக்குநரகத்தின் கீழ் பணிபுரியும் மருத்துவர்கள், உள்ளாட்சி - நகராட்சிகளில் பணிபுரியும் மருத்துவர்கள்; தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள்” அனைவரும் இந்த சலுகையை அனுபவிக்கும் வகையிலான மிகச்சிறந்த அரசு ஆணை அது.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வெளியிடப்பட்ட அந்த அரசாணை எண்: 55 தேதி: 9.2.1999.

முத்தமிழறிஞர் கலைஞர் வெளியிட்ட இந்த அரசாணை மற்றும் உள் இடஒதுக்கீட்டை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான அரசு முனைப்புடன் வாதிட்டு, உயர்நீதிமன்றத்தின் முழு அமர்வில் அரசு மருத்துவர்களின் உள் இடஒதுக்கீட்டு உரிமையை நிலை நாட்டியது. பிறகு இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கிலும், உச்சநீதிமன்றம் முன்பு வலுவான வாதங்களை, ஆதாரங்களை, மாநில அரசின் அதிகாரத்தினை எடுத்து வைத்து - “கே. துரைசாமி vs தமிழக அரசு” என்ற வழக்கில் 23.1.2001 அன்றே இந்த உரிமையை நிலைநாட்டி; அப்போதே இந்த உள் ஒதுக்கீட்டை உறுதி செய்தது கழக அரசு. அது மட்டுமின்றி; இந்த உள் இடஒதுக்கீட்டில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை உறுதி செய்து மாண்புமிகு நீதியரசர் ஆர்.சி.லகோத்தி, நீதியரசர் துரைசாமி ராஜூ ஆகியோர் அடங்கிய அமர்வு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பளித்துள்ளதை அரசு மருத்துவர்களும் அறிவர்; இதுவரை பயன்பெற்று, படித்துப் பணியில் இருப்போரும், ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்களும் நன்கு அறிவர்.

ஐந்தாவது முறையாக முதலமைச்சரான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், “கிராமங்கள், மலைப் பகுதிகள், மிகுந்த சிரமமான பகுதிகள்” ஆகியவற்றில் மக்களுக்குச் சேவையாற்றும் அரசு மருத்துவர்களுக்கு “வெயிட்டேஜ் மதிப்பெண்கள்” அளித்து ஓர் அரசாணை பிறப்பித்தார். தனது ஆட்சிக் காலம் முழுவதும் கிராமப்புறங்களில் மட்டுமின்றி - தமிழக அரசின் மருத்துவமனைகளில் பணி புரியும் மருத்துவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும், அவர்களின் நலனுக்காகவும் பாடுபட்டவர் தலைவர் கலைஞர் அவர்கள் - அவர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

“தி.மு.கழகத்தின் சாதனைகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உரிமை கொண்டாட முனைவதா?” - மு.க.ஸ்டாலின் சாடல்!

தற்போது உச்சநீதிமன்றம் 31.8.2020 அன்று அளித்துள்ள 242 பக்கம் அடங்கிய தீர்ப்பில்; திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டுள்ள உள்ஒதுக்கீடு - சலுகைகள் - வெயிட்டேஜ் மதிப்பெண்கள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி; உச்சநீதிமன்றத்தில் கழக அரசு திறமையாக நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாக வெளிவந்த வந்த 'கே.துரைசாமி' வழக்குத் தீர்ப்பையும் விரிவாக மேற்கோள் காட்டி மாண்புமிகு நீதிபதி திரு. அருண் மிஸ்ரா அவர்கள் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது என்பதை ஏனோ முதலமைச்சர் தெரிந்து கொள்ளக் கவனம் செலுத்தவில்லை என்றே கருதுகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கிராமப்புற சுகாதாரத்தை மேம்படுத்திட, மலைவாழ் மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவர்களுக்கு அங்கீகாரம் வழங்கிட, ஒட்டுமொத்தமாகத் தமிழக அரசு மருத்துவமனைகளில் மிகச்சிறந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக; அரசு மருத்துவர்களுக்கு வழங்கிய கல்வியுரிமையை அன்றும் 'கே.துரைசாமி' வழக்கில் உச்சநீதிமன்றம் நிலைநாட்டியது; இன்றும் அதே அடிப்படையில் நிலைநாட்டியிருக்கிறது. “அரசு மருத்துவர்கள் திறமையானவர்கள் அல்ல” என்ற சொத்தையான வாதத்தை, அனைவரும் அதிர்ச்சியளிக்கும் வகையில், மத்திய பா.ஜ.க. அரசு எடுத்து வைத்து - அரசு மருத்துவர்களுக்கான இந்த உள் ஒதுக்கீட்டைத் தடுக்க முனைந்ததை அடியோடு நிராகரித்து - இதுபோன்ற உள் ஒதுக்கீடுகளில் தலையிட இந்திய மருத்துவக் கழகத்திற்கு அதிகாரம் இல்லை என்ற தெளிவான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கே உள்ஒதுக்கீடு வழங்கிட அதிகாரம் உள்ளது என்றும் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பொருத்தமான அங்கீகாரம் என்று மகிழ்ச்சியடையும் அதே வேளையில்; இந்தத் தீர்ப்புக்கு அடித்தளம் அமைத்தது - அரசு மருத்துவர்களின் உரிமை பாதிக்கப்படாமல், மிகுந்த கவனத்துடன் பாதுகாத்து வந்தது, திராவிட முன்னேற்றக் கழக அரசு என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories