இந்தியா

“நிலைநாட்டப்பட்ட சமூகநீதி; பா.ஜ.க அரசுக்கு பாடம்” - உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவக் கல்வியில் கழக ஆட்சியில் வழங்கப்பட்ட சலுகையும், சமூகநீதியும் நிலைநாட்டப்பட்டுள்ளது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“நிலைநாட்டப்பட்ட சமூகநீதி; பா.ஜ.க அரசுக்கு பாடம்” - உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் இடஒதுக்கீடு தரலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கிராமப் புறங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநில அரசுகள் இடஒதுக்கீடு தருவதை தடுக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், "முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பா.ஜ.க அரசுக்கு மிகச்சிறந்த பாடம்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கலாம்” என்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன். ஏழை - எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு அங்கீகாரம் வழங்கவும், கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணியாற்றுவதை ஊக்குவிக்கவும் கொண்டு வந்த சலுகையிலும் இந்திய மருத்துவக் கவுன்சில் அநியாயமாகக் குறுக்கிட்டு - அந்தச் சலுகைகளை ரத்து செய்து - அரசு மருத்துவர்களுக்கு மட்டுமின்றி, கிராமப்புற சுகாதாரத்திற்கும் பேரிடரை ஏற்படுத்தியது.

“நிலைநாட்டப்பட்ட சமூகநீதி; பா.ஜ.க அரசுக்கு பாடம்” - உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்ததிலிருந்து மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதன் மற்றோர் அங்கமாகவே முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளைப் பறித்து - கடந்த இரு ஆண்டுகாலமாக பல்வேறு போராட்டங்களையும் - சட்டப் போராட்டத்தையும் நடத்திட வேண்டிய நிலை ஏற்பட்டது. உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு உயிர்காக்கும் அரசு மருத்துவர்களுக்கு மட்டுமின்றி - நோய் நொடியின்றி கிராமப்புற மக்களைப் பாதுகாத்திட வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு.

மாநில உரிமைகளில் கண்மூடித்தனமாகக் குறுக்கிடக் கூடாது என்று இந்த விவகாரத்தில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலையில் உச்சநீதிமன்றம் வைத்துள்ள குட்டு - கூட்டாட்சித் தத்துவத்தையும் - மாநில உரிமைகளையும் மத்தியில் உள்ள பா.ஜ.க அரசுக்கு நினைவுபடுத்தும் மிகச்சிறந்த பாடம் என்றே நான் கருதுகிறேன்.

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவக் கல்வியில் கழக ஆட்சியில் வழங்கப்பட்ட சலுகையும், சமூகநீதியும் நிலைநாட்டப்பட்டுள்ளது. மாநில உரிமைக்கும் - சமூகநீதிக்குமான இந்தத் தீர்ப்பை அளித்த மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா அவர்கள் தலைமையிலான அமர்விற்கு எனது இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories