தி.மு.க

“நோய் தடுப்பில் தடுமாறும் அரசு, வீட்டிலிருப்பவர்களின் பசியை எப்படி போக்கும்?” - உதயநிதி ஸ்டாலின் விளாசல்!

கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை பசியைப் போக்கும் பணியை, தொடர்ந்து செய்ய வேண்டும் என்று தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.  

“நோய் தடுப்பில் தடுமாறும் அரசு, வீட்டிலிருப்பவர்களின் பசியை எப்படி போக்கும்?” - உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை பசியைப் போக்கும் பணியை, தொடர்ந்து செய்ய வேண்டும் என்று தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

தொடரட்டும் இந்த உன்னதப் பணி!

கொரோனா வைரஸ். உலகம் இதுவரை கேட்டிராத, கண்டிராத தொற்று நோய். அதன் பரவலைக் குறைக்க, ஊரடங்கு அறிவித்து வீட்டிலேயே முடங்கியுள்ளோம். ஆனால், தொற்று பரவாமல் தடுப்பது, பரவியிருக்கிறதா என்று சோதனை செய்வது உள்ளிட்ட அடிப்படைப் பணிகளில்கூட தமிழக அரசு தடுமாறுகிறது. இப்படிப்பட்ட அரசு, வீட்டிலிருப்பவர்களின் பசியைப் போக்கும் என்று எப்படி நம்புவது?

அதனால்தான் நம் தலைவர் அவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கச் சொன்னார். அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் பெரும் பங்கை கொரோனா வைரஸுக்கு எதிரான சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைகளின் மேம்பாட்டுக்கு ஒதுக்கச் சொன்னார். கழகத்தின் சார்பில் கோடி ரூபாய் நிதியை அரசுக்கு வழங்கினார். ‘இணைந்து பணியாற்றுவோம்’ என்று அரசுக்கும் தன் நிலையைத் தெளிவுபடுத்தினார்.

“நோய் தடுப்பில் தடுமாறும் அரசு, வீட்டிலிருப்பவர்களின் பசியை எப்படி போக்கும்?” - உதயநிதி ஸ்டாலின் விளாசல்!

அனைத்துக்கும் மேலாக, ‘ஏழை எளிய, நடுத்தர மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் உன்னதமான பணியில் கழகத்தார் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்திய தலைவர் அவர்கள், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நானும், சென்னையின் கிழக்கு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நல திட்ட உதவிகளை வழங்கினேன், முன்னதாக இளைஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் அனைவரின் அலைபேசி எண்களை சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து, ‘உதவி தேவைப்படுவோர் எங்கள் அமைப்பாளர்களைத் தொடர்புகொள்ளலாம்’ என அறிவித்தேன்.

உதவி கோரும் மக்களின் அழைப்பின் பேரில், அரிசி&மளிகை&காய்கறி உள்ளிட்ட சமையலுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது, கையுறை, முகக் கவசம், கைகளைச் சுத்தம் செய்யும் கிருமி நாசினியை விநியோகிப்பது, சிகிச்சையில் இருப்போருக்கு மருந்து மாத்திரைகளை வாங்கித் தருவது, ஊரடங்கு காலத்தில் அவசர, அவசிய பயணத்துக்கு அனுமதி பெற்றுத் தருவது... என்று உதவி கேட்டு அழைத்தவர்கள் வியந்துபோற்றும் வகையில் இளைஞரணியினர் களப்பணியாற்றி வருகிறீர்கள் என்பதை அறிவேன். உங்களின் உதவிப் பணிகளை என் ஃபேஸ்புக் பக்கத்திலும் தொடர்ந்து பகிர்ந்து வருகிறேன்.

“நோய் தடுப்பில் தடுமாறும் அரசு, வீட்டிலிருப்பவர்களின் பசியை எப்படி போக்கும்?” - உதயநிதி ஸ்டாலின் விளாசல்!

இந்த நிலையில், ‘தன்னார்வலர்கள் எவரும் நேரடியாக உதவிப் பொருட்களைப் பயனாளிகளுக்கு வழங்கக்கூடாது. அரசிடம் மட்டுமே தரவேண்டும்’ என்று அரசாணை வெளியிட்டு தன் கொடூர குணத்தை வெளிப்படுத்தியது அடிமை அரசு.

அசாதாரணமான இந்த சூழலில், ‘சேர்ந்து நல்லது செய்வோம்’ என்று அனைவரையும் அரவணைக்கவேண்டிய அரசோ, ‘நாங்களும் செய்யமாட்டோம்; நீங்களும் செய்யக்கூடாது’ என்ற எண்ணம் கொண்டோர் போல் செயல்படுவது வேதனையளிக்கக்கூடியது.

‘அரசு செய்யவில்லை என்பதால்தான் நாமே மக்களுக்கு நேரடியாக உதவி செய்கிறோம். அப்படியிருக்கையில் பொருட்களை அரசிடம் ஒப்படைத்தால் அது மக்களுக்குப் போகும் என்பது என்ன நிச்சயம்’ என்பதால் அரசின் உத்தரவுக்கு எதிராக நம் தலைவர் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதோ நீதி வென்றுள்ளது. மக்கள் வென்றுள்ளார்கள். ‘தி.மு.க உள்ளிட்ட தன்னார்வலர்கள் செய்யும் உதவியைத் தடுக்கக்கூடாது’ என்று எடப்பாடி அரசுக்கு எதிராக நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. அதேநேரம், ‘உதவி செய்யச் செல்லும் தன்னார்வலர்கள் மூவருக்கு மேல் செல்லக்கூடாது, அவர்கள் முகக் கவசம், கையுறை அணிந்திருப்பது அவசியம்.

கிருமி நாசினியை அடிக்கடி பயன்படுத்தவும், உதவி செய்யச் செல்வதற்கு 48 மணி நேரத்துக்கு முன் சம்பந்தப்பட்ட அரசு அலுவலருக்குத் தகவல் தரவேண்டும்’ என்று நீதிமன்றம் தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ள வரைமுறைகளையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஒருபக்கம் வைரஸ் தொற்று, மறுபக்கம் அடிமை அரசின் அராஜகங்கள். இந்தச் சூழலிலும் ஆர்வமாக வெளியில் வந்து உதவும் உங்களின் மக்கள் பணிக்கு நான் தலைவணங்குகிறேன். அதேநேரம், உங்கள் குடும்பத்தாருக்கு நீங்கள் எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவு எனக்கும், கழகத்துக்கும் முக்கியம். இதை மனதில்கொண்டு களத்தில் கவனமுடன் செயல்படவேண்டும்.

வீட்டில் பாதுகாப்பாக இருப்பவர்களின் பசியைப் போக்க நாம் வெளியே வருகிறோம். இந்த உன்னதமான, உணர்வுப்பூர்வமான உதவிகள், மக்கள் தங்கள் இயல்புநிலைக்குத் திரும்பும்வரை தொடரவேண்டும் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

தனித்திருப்போம், உள்ளத்தால் இணைந்திருப்போம்!

banner

Related Stories

Related Stories