தி.மு.க

“அமைச்சர் பாண்டியராஜன் போன்றோரைத்தான் ‘பதர்’ என்றார் வள்ளுவர்” : மு.க.ஸ்டாலின் சாடல்!

அமைச்சர் பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், என்ன புரிந்து கொண்டார் என்பதை, அவர் பயன்படுத்தும் சொற்களே காட்டிக் கொடுத்துவிட்டது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“அமைச்சர் பாண்டியராஜன் போன்றோரைத்தான் ‘பதர்’ என்றார் வள்ளுவர்” : மு.க.ஸ்டாலின் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தியாகம் செய்து அரசியலுக்கு வந்து, மக்கள் தரும் பதவிப் பொறுப்புகளை அடைந்தவர்களுக்குத்தான், தியாகத்தைப் புரிந்து கொள்ளும் அறிவும், பக்குவமும், கொச்சைப்படுத்தாத சிந்தனையும் வரும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரும்பி வராதது காலம்; திருத்தி எழுதப்பட முடியாதது வரலாறு. எவ்வளவு படித்திருந்தாலும், சிலருக்கு இந்த அடிப்படை புரியாது.

சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தியாக வரலாற்று நிகழ்வுகளை, அவருடைய அரசியல் லாப நோக்கில், வக்கிர எண்ணத்துடன், திருத்தி எழுத எத்தனிக்கிறார், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

“அமைச்சர் பாண்டியராஜன் போன்றோரைத்தான் ‘பதர்’ என்றார் வள்ளுவர்” : மு.க.ஸ்டாலின் சாடல்!

நான் மட்டுமல்ல, தி.மு.கழகத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அன்றைய மத்திய அரசு அமல்படுத்திய அவசரநிலைப் பிரகடனத்தை எதிர்த்த காரணத்தால், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டோம்.

அதற்கான ஆவணங்கள் சிறைத்துறையில், சட்டமன்ற ஆவணங்களில், நீதியரசர் எம்.எம். இஸ்மாயில் அவர்களால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் நிரம்ப இருக்கின்றன. படிக்கத் தெரிந்தவர்கள், படிக்க மனமிருப்பவர்கள், பார்த்துத் தெரிந்து தெளிவு கொள்ளலாம். எல்லாம் எனக்குத் தெரியும் என்ற தன்முனைப்பால், தெளிவு பிறக்காது.

“அமைச்சர் பாண்டியராஜன் போன்றோரைத்தான் ‘பதர்’ என்றார் வள்ளுவர்” : மு.க.ஸ்டாலின் சாடல்!

அரசியலமைப்புச் சட்டத்தின்பால் பதவிப்பிரமாணம் எடுத்துவிட்டு, நாலாந்தரப் பேச்சாளரின் நடையைத் தழுவி , பாண்டியராஜன் பேசி இருப்பது, உண்மையில் எனக்கு வருத்தம் தரவில்லை.

ஏனென்றால், கல்லிலும் முள்ளிலும் நடந்து கடும் பயணம் மேற்கொண்டு, சொல்லடி பட்டு துயரங்களைத் தாங்கி, தியாகம் செய்து அரசியலுக்கு வந்து, மக்கள் தரும் பதவிப் பொறுப்புகளை அடைந்தவர்களுக்குத்தான், தியாகத்தைப் புரிந்து கொள்ளும் அறிவும் பக்குவமும், கொச்சைப்படுத்தாத சிந்தனையும் வரும். ஆனால் பாண்டியராஜன், அந்த வகைப்பட்டவர் அல்ல என்பதை நான் சொல்லி யாரும் தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை. அவரது கட்சிக்காரர்களே முழுவதையும் அறிவார்கள்.

இதுபோன்ற எத்தனையோ ஏசல்களையும் இழிமொழிகளையும் அவமானங்களையும் சுமந்துதான், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தன்மான - அறிவியக்கம் எழுந்து, தலை நிமிர்ந்து நிற்கிறது. இந்த அவமானங்கள், வேரில் வெந்நீர் ஊற்றுவதற்காகச் செய்யப்படுகின்றன. ஆனால் அதனையும் நன்னீர் ஆக்கிக் கொண்டு, மேலும் வளர்ந்து படரும் சக்தி படைத்தது கழகம்.

“அமைச்சர் பாண்டியராஜன் போன்றோரைத்தான் ‘பதர்’ என்றார் வள்ளுவர்” : மு.க.ஸ்டாலின் சாடல்!

எனவே, அமைச்சர் பாண்டியராஜனுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் நடத்தி வரும் எதிர்ப்புப் போராட்டங்களை, அன்புகூர்ந்து தவிர்க்குமாறு கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

அவர் பயன்படுத்தும் சொல், அவர் யார் என்பதையும், அவரது தரத்தையும் இந்த நாட்டு மக்களுக்குத் தோலுரித்துக் காட்டிவிட்டது; அவ்வளவு தான். "பயனில் சொல் பாராட்டுவாரை” பதர்தான் என்றார் அய்யன் திருவள்ளுவர்.

"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்" - என்ற வள்ளுவரின் அறிவுரைக்கு ஏற்ப நாம் நடந்து கொள்வோம். மறப்போம், மன்னிப்போம்! இது தான் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் நமக்குக் கற்றுத் தந்த அரசியல் பாடங்கள்.

பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், என்ன புரிந்து கொண்டார் என்பதை, அவர் பயன்படுத்தும் சொற்களே காட்டிக் கொடுத்துவிட்டது. நாம் பயனுள்ள சொற்களையே பயன்படுத்துவோம்; இழி சொற்களை ஏற்கமாட்டோம்; அவை எங்கிருந்து புறப்பட்டதோ, அந்த இடத்திற்கே போய்ச் சேர்ந்துவிடும். வாழ்க வசவாளர்கள்!'' எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories