தி.மு.க

“30 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையே இலக்கு” : தி.மு.க இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின்!

சென்னையில் நடைபெற்று வரும் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

“30 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையே இலக்கு” : தி.மு.க இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் மறைந்த தி.மு.க முன்னோடிகளுக்கும், கேரளா, நீலகிரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இளைஞரணி துணைச் செயலாளர்கள் ஆர்.டி. சேகர், தாயகம் கவி, அசன் முகமது ஜின்னா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பைந்தமிழ் பாரி, எஸ்.ஜோயல், ஆ.துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் திருவுருவப் படத்துக்கு இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்திய பின், 12 தீர்மானங்களை வாசித்தார்.

தீர்மானம் 1:

மறைந்த தி.மு.க. முன்னோடிகள் எஸ்.ஏ.எம்.உசேன், ராதாமணி, புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன் உள்ளிட்டோர் மற்றும் நீலகிரி, கேரளாவில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்.

தீர்மானம் 2:

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 39 தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்தும், நன்றியும் தெரிவித்து தீர்மானம்.

தீர்மானம் 3:

மத்திய மற்றும் மாநில அரசுத்துறை காலிப்பணியிடங்களுக்காக நடத்தப்படும் தேர்வுகளில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கான அந்தஸ்தை பெற்றுத்தந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி எம்.பிக்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம்.

தீர்மானம் 4:

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் இருவரின் பிறந்தநாளையொட்டி, மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளை இளைஞரணி நடத்தி வருவது போல, மார்ச் 1ம் தேதி இளைஞர் எழுச்சி நாளான தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மாநில, மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகளை இளைஞரணி நடத்த வேண்டும் என தீர்மானம்.

தீர்மானம் 5:

வருகிற செப்.,14 - நவ.,14க்குள் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் 10,000 வீதம் 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாக இளைஞரணியில் சேர்க்க நிர்வாகிகள் பணியாற்ற வலியுறுத்தி தீர்மானம்.

தீர்மானம் 6:

இளைஞரணியில் உறுப்பினராகச் சேர்வதற்காக வயது வரம்பு 15-30ல் இருந்து 18-35 என மாற்றப்பட்டுள்ளது. மேலும், உறுப்பினர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய உறுப்பினர் அட்டை வழங்கப்படும் எனவும் தீர்மானம்.

தீர்மானம் 7:

தூர்வாராமல் இருக்கும் நீர்நிலைகள், பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பிரச்னையை தீர்க்க தி.மு.க இளைஞரணி கவனம் செலுத்தும் எனவும், இந்தப் பணியை தலைவர் கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளையில் இருந்து தொடங்கவேண்டும் எனவும் தீர்மானம்.

தீர்மானம் 8:

தி.மு.கழக கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும், தி.மு.க அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலும், மூத்த நிர்வாகிகள் மூலம் பயிற்சிப்பாசறை கூட்டங்கள் மாவட்டந்தோறும் நடத்த தீர்மானம்.

தீர்மானம் 9:

இளைஞரணி அமைப்பு மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு, நிர்வாகிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்த பின்னர், மண்டல மாநாடு நடத்தப்படும். அதன் பிறகு இளைஞரணி மாநில மாநாடு நடத்தப்படும் என தீர்மானம்.

தீர்மானம் 10:

தமிழகத்தில் உள்ள ரயில்வே, அஞ்சல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் வட மாநிலத்தவர்களை பணியமர்த்தும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்தும், அரசு வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியும் தீர்மானம்.

தீர்மானம் 11:

தலைவர் கலைஞரின் கனவுத்திட்டமான சமச்சீர் கல்வி முறையை அழிக்கும் வகையிலும், நடுத்தர மாணவர்களின் கல்விக்கனவை சிதைக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கைக்கான வரைவை கண்டித்தும், திரும்ப பெறுமாறும் மத்திய அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம்.

தீர்மானம் 12:

பன்னாட்டு கார் உற்பத்தி நிறுவனங்களை தமிழகத்துக்கு அழைத்து வந்து இந்தியாவின் டெட்ராய்ட் என்ற நற்பெயரை பெற்றுத்தந்தது தலைவர் கலைஞரின் தி.மு.க ஆட்சி. ஆனால், இன்று மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் தொழில்துறை நிறுவனங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் வேலையை இழக்கும் சூழலுக்கு தள்ளிய மத்திய , மாநில அரசுகளை கண்டித்து தீர்மானம்.

banner

Related Stories

Related Stories