தி.மு.க

“பெரும்பான்மை இருந்தால் எதுவும் செய்யலாம் என நினைப்பது மோசமான முன்னுதாரணம்” - கனிமொழி எம்.பி. பேட்டி!

“எதிர்க்கட்சிகள் கூறும் கருத்துகளை கவனத்தில் கொள்ளாமல் நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாக்களை பெரும்பான்மை பலத்தால் நிறைவேற்றுவது மத்திய அரசின் மோசமான முன்னுதாரணம்” என கனிமொழி எம்.பி., தெரிவித்துள்ளார்.

“பெரும்பான்மை இருந்தால் எதுவும் செய்யலாம் என நினைப்பது மோசமான முன்னுதாரணம்” - கனிமொழி எம்.பி. பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் சமீபத்தில் தி.மு.க மகளிர் அணி நிர்வாகியும் முன்னாள் மேயருமான உமாமகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் வீட்டுப் பணிப்பெண் மாரி ஆகிய 3 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசலைச் சேர்ந்த தி.மு.க செயற்குழு உறுப்பினர் வி.எஸ்.கருணாகரன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இவ்விரு சம்பவங்களில் உயிரிழந்த கட்சி நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி., தூத்துக்குடிக்கு இன்று விமானம் மூலம் வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வரும் சட்ட மசோதாக்கள் மீது எதிர்க்கட்சிகள் கூறும் கருத்துகளை கவனத்தில் கொள்ளாமலும், நிலைக்குழுவுக்கு அனுப்பாமலும் அவர்கள் நினைத்ததை சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகள் இதைக் கண்டித்த பிறகும் அவர்கள் எந்தவித கருத்து கேட்கும் கூட்டத்தையும் நடத்தாமல் தங்களுக்கு இருக்கக்கூடிய பெரும்பான்மையான பலத்தைக் கொண்டு சாதித்துவிட வேண்டும் எனச் செயல்படுகிறார்கள். இது ஒரு மோசமான முன்னுதாரணம்.

“பெரும்பான்மை இருந்தால் எதுவும் செய்யலாம் என நினைப்பது மோசமான முன்னுதாரணம்” - கனிமொழி எம்.பி. பேட்டி!

தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர் பிரச்சனை குறித்து தொடர்ந்து தி.மு.க சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்பி வருகிறது. அமைச்சர்கள் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று சொல்கிறார்களே தவிர இதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த ஆட்சியில் மக்கள் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; படுகொலைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆணவக் கொலைகள் அதிகரித்து கொண்டிருக்கக்கூடிய சூழலைக் காணமுடிகிறது. இந்தநிலையில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என எப்படிச் சொல்லமுடியும்?” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories