சினிமா

‘டோரதி’ – திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் துணிச்சலான முயற்சி!

ஒருவர் தனது பாலின அடையாளத்தை உணர்ந்து, அதை ஏற்றுக்கொண்டு வாழ விரும்பும்போது, அவரைச் சுற்றியுள்ளவர்கள் அதை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? குடும்பம் என்ன செய்கிறது? நண்பர்கள் எப்படி மாறுகிறார்கள்?

‘டோரதி’ –  திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் துணிச்சலான முயற்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சினிமா என்பது சமூகத்தின் கண்ணாடி. அந்தக் கண்ணாடியில் யாருடைய முகம் எப்படி இருக்கிறது, இதில் யாருடைய முகம் உண்மையாகப் பிரதிபலிக்கப்படுகிறது என்பதைக் காட்டும் கண்ணாடியாகும். திரைப்படம் ஒரு கலைவடிவம் என்பதைத் தாண்டி, அதில் காட்சிப்படுத்தும் விதம் முக்கியமானது. ஏனெனில், ஒரு திரைப்படத்தின் காட்சி ஒரு சில நொடிகளில் முடிந்துவிடும்.

ஆனால், அதன்வழியாக அந்தக் காட்சியைப் பார்வையாளர்கள் எடுத்துக்கொள்ளும் விதம் மனதில் நீண்ட தாக்கத்தை உண்டாக்கும். இன்றும் நடக்கும் கொலைகளில் சில சினிமா பாணிக் கொலைகள் அரங்கேறுவதைச் செய்திகளில் பார்க்கத்தான் செய்கிறோம். அந்த வகையில், திருநங்கைகள் பற்றிக் காண்பிக்கும் விதத்தைப் பொறுத்தே, நிஜ வாழ்க்கையிலும் திருநங்கைகளை அணுகும் முறையும் வேறுபடுகிறது.

தமிழ்ச் சமூகம் என்னதான் முற்போக்குச் சமூகம் எனப் பீற்றிக்கொண்டாலும், திருநங்கைகளைப் பல ஆண்டுகளாகத் தமிழ்த் திரைப்படங்களில் காட்டிய விதம் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. நகைச்சுவையைத் தாண்டி, கேலிக்கும் கிண்டலுக்கும் உரியவர்களாகவே திருநங்கைகள் சித்தரிக்கப்பட்டார்கள்.

‘டோரதி’ –  திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் துணிச்சலான முயற்சி!

குறிப்பாக, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘அப்பு’, ‘ஜெயம்’, ‘திருடா திருடி’, ‘பருத்திவீரன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் திருநங்கைகளின் அடையாளத்தை நகைச்சுவைக்கான கருவியாக்குவது, அவர்களை எதிர்மறையான அல்லது அச்சமூட்டும் பாத்திரங்களாகக் காட்டுவது போன்ற அணுகுமுறைகள் இருந்தன. இது சமூகத்தில் ஏற்கெனவே இருந்த தவறான புரிதல்களை மேலும் அதிகரிக்கும் வகையில் இருந்தன. சில படங்களில் திருநங்கைகளைக் காண்பிக்கும் விதத்திற்கு முற்போக்கு அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து எழுந்த எதிர்ப்பால், சிலர் அதனைத் தவிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். தற்போது இந்தப் பிம்பமும் மாறத் தொடங்கியிருக்கிறது.

திருநங்கைகளின் உணர்வுகள், அடையாளம், குடும்ப உறவுகள், சமூகப் புறக்கணிப்பு என அவர்களின் வாழ்வியலை மையப்படுத்தும் சில காட்சிகளைச் சமீபத்தில் சில இயக்குநர்கள் படைப்புகளாகக் கொண்டு வரத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த மாற்றத்தின் தொடர்ச்சியாக, திருநங்கைகளின் அடையாளத்தையும் சமூகத்தின் பார்வையையும் மையப்படுத்தி ‘டோரதி’ என ஒரு படைப்பை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

இதற்கு முன்பு திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசிய ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா’ திரைப்படம், திருநங்கைகள் எதிர்கொள்ளும் புறக்கணிப்பையும் அநீதியையும் உணர்ச்சிகரமான கதையின் வழியாகப் பார்வையாளர்களிடம் கொண்டு சென்றது. இது படத்தின் சில காட்சிகளில் வந்து சென்றாலும், அவை ஒரு தாக்கத்தை நல்ல முறையில் உண்டாக்கியது.

‘டோரதி’ –  திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் துணிச்சலான முயற்சி!

அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம். இப்படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தின் வழியாக இந்த விவாதம் மற்றொரு தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. தனது அடையாளத்துடன் குடும்பத்திடம் திரும்பும் ஷில்பா, குடும்பத்தினரின் அதிர்ச்சி, சமூகத்தின் பார்வை, மகனுடனான உறவு எனப் பல்வேறு உணர்வுகளைக் கடந்து செல்கிறாள்.

அதன் தொடர்ச்சியாக இப்போது ‘டோரதி’. இதற்கு முன்பு வெளியான திரைப்படங்களுடன் ஒப்பிடும்போது, ”ஒருவர் தான் விரும்பும் அடையாளத்துடன் வாழ்வதற்கு இந்தச் சமூகம் ஏன் தடையாக இருக்க வேண்டும்?” என ‘டோரதி’ ஒரு முக்கியமான கேள்வியை முன்வைக்கிறது.

திருநங்கைகள் தங்களது அடையாளத்துடன் சுதந்திரமாகவும், மற்றவர்களைப் போல சம உரிமையுடனும், மரியாதையுடனும் வாழ்வதற்கான சூழலைச் சமூகம் உருவாக்க வேண்டும் என்பதையே இப்படத்தின் கதைக்கரு உணர்த்துகிறது.

1990-ஆம் காலகட்டத்தின் இயல்பான கிராமத்து சூழலோடு கார்த்திக் மற்றும் சுப்பு என்ற இரண்டு சிறுவர்களின் நட்பில்தான் கதை தொடங்குகிறது. சிறுவயதில் நல்லது எது, கெட்டது எது எனக்கூடத் தெரியாதவர்களுக்கு, வயது வளர வளர ஒரு ஆணாக எப்படி இருக்க வேண்டும், எப்படி பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ஆணாதிக்கச் சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் எதிர்பார்ப்புகள் அவர்களின் வாழ்க்கைக்குள் நுழைகின்றன. அவர்களின் நட்பின் வழியாகவே படம் மெதுவாக தனது மையக் கதைக்குள் நகர்கிறது.

‘டோரதி’ –  திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் துணிச்சலான முயற்சி!

டோரதி வருகிறாள்...

இந்தப் பயணத்தில் கீர்த்தி சுரேஷ் ஏற்று நடித்திருக்கும் டோரதி கதாபாத்திரம் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. டோரதி, மற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் வந்து செல்லும் ஒரு கதாபாத்திரமாக மட்டும் இல்லாமல், அவர்களின் வாழ்க்கையையும் எண்ணங்களையும் மாற்றக்கூடிய ஒரு முக்கியமான கதாபாத்திரமாக உருவாக்கப்படுகிறார். டோரதிக்கும் கார்த்திக்குமான உறவு கதைக்கு உணர்வுப்பூர்வமான அடித்தளத்தை ஏற்படுத்துகிறது.

அந்த உறவு காதல் மட்டுமல்ல; ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது, ஏற்றுக்கொள்வது, துணையாக இருப்பது எனப் பல உணர்வுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. அதனால்தான் டோரதியின் கதாபாத்திரம் முடிந்த பிறகு கதை மிகப்பெரிய திருப்பத்திற்குச் செல்கிறது. படம் டோரதிக்கு முன் ஒரு குறிப்பிட்ட பாதையிலும், டோரதிக்குப் பின் முற்றிலும் வேறு உணர்வுத் தளத்திலும் செல்கிறது. அதன்பிறகு சுப்புவின் வாழ்க்கையிலும் ஏற்படும் மாற்றத்தையும் படம் முன்னிறுத்துகிறது.

டோரதியின் கதாபாத்திரம் முடிந்த பிறகு கதை நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்துக்கொண்டு நகர்கிறது. கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் மறைந்திருந்த சில உண்மைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்படத் தொடங்குகின்றன.

இதுவரை நாம் ஒரு மனிதரைப் பார்த்த விதமும், அவரைப் பற்றி உருவாக்கிக்கொண்டிருந்த எண்ணமும் மாறத் தொடங்குகிறது. அங்கேதான் திருநங்கை கதாபாத்திரத்தின் வாழ்வியல் கதையின் மையத்துக்குள் வருகிறது. ஒருவர் தனது பாலின அடையாளத்தை உணர்ந்து, அதை ஏற்றுக்கொண்டு வாழ விரும்பும்போது, அவரைச் சுற்றியுள்ளவர்கள் அதை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? குடும்பம் என்ன செய்கிறது? நண்பர்கள் எப்படி மாறுகிறார்கள்? சமூகம் அவரை எப்படி பார்க்கிறது? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை, கதாபாத்திரங்களின் வாழ்க்கையின் வழியே படம் எடுத்துச் செல்கிறது.

‘டோரதி’ –  திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் துணிச்சலான முயற்சி!

இறுதியில், “இன்னும் 10 வருஷத்துல நாங்கதான் நார்மல்” என்ற வசனம் இந்தக் கதையின் மையக் கருத்தை மிக எளிமையாகச் சொல்லிவிடுகிறது. அதாவது, “இன்று எங்களை நீங்கள் எப்படி பார்க்கிறீர்களோ, அதே பார்வையில் நாளையும் உலகம் இருக்காது.” இதுதான் அந்த வசனத்தின் உள்ளார்ந்த அர்த்தம். மார்க்சிய ஆசான் காரல் மார்க்ஸ் கூறிய வரிகளில் சொல்ல வேண்டும் என்றால், மாற்றம் ஒன்றே மாறாதது. அதாவது, காலத்தின் சூழலில் ‘மாற்றம்’ என்ற வார்த்தை மட்டுமே மாறாமல் இருக்குமே தவிர, அனைத்தும் மாற்றத்திற்கு உட்பட்டவையே. எனவே, காலம் மாறும்போது அந்த அளவுகோல்களும் மாறும் என்பதையே இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது.

ஒரு காலத்தில் திருநங்கைகள் திரையில் கேலிக்கான கதாபாத்திரங்களாக இருந்தார்கள். இன்று அவர்களின் வாழ்க்கையையும் அடையாளத்தையும் புரிந்துகொள்ளும் கதைகள் உருவாகின்றன. இந்த மாற்றம் சினிமாவில் மட்டும் நின்றுவிடாமல், நிஜ வாழ்க்கையிலும் தொடர வேண்டும் என்பதையே ‘டோரதி’யின் கதை நமக்கு நினைவூட்டுகிறது.

banner

Related Stories

Related Stories