தனியார் தொலைக்காட்சியில் கடந்த 2017 - 20188-ம் ஆண்டு ஒளிபரப்பான இசை நிகழ்ச்சிதான் 'சரி கம ப..". ரியாலிட்டி ஷோவான இதில் பலரும் தங்கள் கலந்துகொண்டனர். அதுவரை இளைஞர்கள் கலந்துகொண்ட சூழலில் அதிக வயதுடைய இந்த ரமணியம்மாள் பாட்டி அந்த போட்டியில் கலந்துகொண்டார்.
இவர் தனது குரலில் பாடி மக்கள் மத்தியிலும், அங்கிருந்த நடுவர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றார். பழைய எம்.ஜி.ஆர்., பாடலை பாடி முதன்முதலில் தேர்வான இவர், அந்த சீசனில் இறுதிக்கட்டம் வரைய சென்று 2-ம் பரிசையும் வென்றார். அதன் காரணாமாக பரிசாக ஐந்து லட்சம் ரூபாயும், ஐந்து சென்ட் நிலமும் வழங்கப்படும் என நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே இவரது குரல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக மாறியது. ஏழை குடும்பத்தை சேர்ந்த இவருக்கு அப்போது 63 வயது இருக்கும். அந்த சமயத்தில் இவர் சில வீடுகளில் வேலை பார்த்து வந்தார். அப்போது இவர் பாடல் பாடிக்கொண்டே வேலை செய்து வந்தார். இவரது இந்த திறமையை ஊக்குவிக்கும் விதமாக அவரது வீட்டின் உரிமையாளர் இவரை அந்த ரியாலிட்டி ஷோவில் கலந்துகொள்ள வைத்தார்.
இவருக்கு அந்த ஷோ மூலம் 'ராக் ஸ்டார் ரமணியம்மாள்' என்ற பட்டமே கிடைத்தது. இந்த ஷோவில் கலந்து கொள்வதற்கு முன்பே 'காத்தவராயன், 'ஹரிதாஸ்' ஆகிய படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். அதன்பிறகு இந்த ஷோ மூலம் மேலும் பிரபலமானார்.
இதையடுத்து இவர் ஜுங்கா, சண்டைக்கோழி 2, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, காப்பான் உள்ளிட்ட படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். தொடர்ந்து திரைப்படங்களில் பாடலுக்கு வாய்ப்பு கிடைத்து வந்த சூழலில், அண்மையில் யோகி பாபு நடிப்பில் வெளியான 'பொம்மை நாயகி' படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.
இப்படி தொடர்ந்து திரை பயணங்களில் பயணம் மேற்கொண்டு வரும் ரமணியம்மாள் பாட்டி சில நாட்களாக வயது மூப்பின் காரணமாக உடல்நிலை சற்று சரியில்லாமல் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது 69 வயதாகும் பாட்டி ரமணியம்மாள் இன்று காலமானார். இவரது மறைவுக்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வு தற்போது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இவர் இசை நிகழ்ச்சியில் வென்ற 5 லட்ச ரூபாய் பணத்தை தனது 7 பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுத்ததாக அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.