சினிமா

பழங்குடிகளின் நில உரிமையை பேசும் ‘பட’ - அரசுக்கு எதிராக இருந்தும் ஒடுக்குமுறை இல்லாமல் வெளியான படம்!

‘பட’ திரைப்படத்திற்கு கேரள அரசாங்கத்திடமிருந்து எந்த ஒடுக்குமுறையும் படத்துக்கு நேரவில்லை.

பழங்குடிகளின் நில உரிமையை பேசும் ‘பட’ - அரசுக்கு எதிராக இருந்தும் ஒடுக்குமுறை இல்லாமல் வெளியான படம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

மலையாளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுக் கொண்டிருக்கும் படம், ‘பட’. கதை 1996ஆம் ஆண்டில் நடந்த உண்மைச் சம்பத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. படத் துவக்கத்தில் ஓர் ஐந்து பேர் ஏதோவொரு முக்கியமான சதி வேலையை நிகழ்த்தத் திட்டமிடுகின்றனர். அந்த வேலைக்குத் தேவையான பொருட்களைத் திரட்டுகின்றனர். ஒரு துப்பாக்கியை தயார் செய்து கொள்கின்றனர். வெடிகுண்டும் தயாரித்துக் கொள்கின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்கவென செல்கின்றனர்.

வெவ்வேறு பிரச்சினைகளை மனுக்களாக்கி மக்கள் ஆட்சியர் அலுவலக வாசலில் நின்று கொண்டிருக்கின்றனர். கூடவே ஐவரும் நிற்கின்றனர். சற்று நேரத்தில் ஓர் ஊழியர் வருகிறார். ஆட்சியர் வேறு வேலைக்குச் சென்று விட்டதால் அந்த நாள் அவரைப் பார்க்க முடியாது என அறிவிக்கிறார். அனைவரும் கலைந்து செல்கின்றனர். ஐவருக்கும் ஏமாற்றம். கிளம்பிச் செல்கின்றனர். அடுத்த நாள் மீண்டும் ஆட்சியர் அலுவலகத்துக்குச் செல்வது என முடிவாகிறது. வீட்டில் தங்க வேண்டாமென ஐவரும் வேறொரு இடத்தில் தங்குகின்றனர்.

மறுநாள். மீண்டும் ஆட்சியர் அலுவலகத்துக்கு ஐவரும் செல்கின்றனர். முதல் நாள் வந்தது போலவே பிற மக்களும் வருகின்றனர். முதல் நாளைப் போலவே முதியோர் தம்பதி வருகிறார்கள். ஐவரில் ஒருவரிடம் உதவி கேட்கின்றனர். ஆனால் வேறு திட்டத்தில் அவர்கள் இருப்பதால் உதவ முடியவில்லை. மாவட்ட ஆட்சியர் வருகிறார். மக்கள் தயாராகின்றனர். வழக்கம்போல டோக்கன் கொடுக்காமல், மொத்த மக்களையும் வரச் சொல்கிறார் ஆட்சியர். அவசரமாக ஒரு வேலைக்குச் செல்ல வேண்டியதிருப்பதால் அனைவரையும் அவரவர் பிரச்சினையைச் சொல்லச் சொல்கிறார்.

மக்கள் தங்களின் பிரச்சினைகளை சொல்லச் சொல்ல குறிப்பெடுக்கப்படுகிறது. அப்பிரச்சினைகள் கவனிக்கப்படும் என்கிற உறுதிமொழி கொடுக்கப்பட்டு மக்கள் அனுப்பப்படுகின்றனர். ஐவர் மட்டும் மிஞ்சியிருக்கின்றனர். அவர்களுக்கு என்னப் பிரச்சினை என்னவென ஆட்சியர் கேட்க, அவர்கள் முன்னே செல்கின்றனர். ஒருவர் சற்று முன்னே வந்து, ‘பழங்குடி நிலவுரிமை சட்டத்தில் கொண்டு வரப் பட்டிருக்கும் திருத்தம் திரும்பப் பெறப்பட வேண்டும்’ என்கிறார். ஆட்சியர் தனக்கு அந்த அதிகாரம் இல்லை என சொல்ல, அதனால்தான் அவரை பிணையாகப் பிடிக்கப் போவதாக சொல்கிறார். ஐவரும் தங்களை அய்யன்காளிப் படை என அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.

ஐவரில் ஒருவர் துப்பாக்கி எடுத்து நீட்ட, மீதமுள்ளவர் அறைக்குள் ஓடி வரும் காவலர்களைத் தடுத்து வெளியே தள்ள முயல, சற்று நேரத்துக்கு பதட்டமும் குழப்பமும் நிலவுகிறது. ஒரு காவலர் மட்டும் ஐவருக்கும் போக்குக் காட்டி, துப்பாக்கியைப் பிடுங்கி, ஐவரில் ஒருவரை நோக்கி நீட்டுகையில், ஆட்சியர் 'சுட வேண்டாம்’ என உத்தரவிடுகிறார். ‘அவர்கள் பேசட்டும்’ என்கிறார். அதிர்ச்சியுடன் பார்க்கும் காவலரை, ஐவரும் அப்புறப்படுத்துகின்றனர். அறையின் கதவை அடைத்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர் ஐவரும்.

இந்திய ஒன்றிய வரலாறு என்பது பழங்குடிகளின் நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் பறித்துக் கட்டமைக்கப்பட்டதாகும். அதுபோன்ற ஒரு பிரச்சினையைதான் 1996ஆம் ஆண்டின் பழங்குடி நிலவுரிமை சட்டத்திருத்தம் கொண்டிருந்தது. உதாரணமாக ஒருங்கிணைந்த பழங்குடி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1982ம் ஆண்டு அட்டப்பாடியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 1960லிருந்து 1977ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 4,064 ஹெக்டேர் நிலங்களை பழங்குடியினர் இழந்திருக்கின்றனர். வெற்றுக் காகிதங்களில் கையெழுத்து வாங்கியும், குத்தகைக்கு வாங்கிய நிலங்களை திருப்பிக் கொடுக்காமலும் மதுபோதையைக் காட்டியும் என பல வழிகளில் பழங்குடியினர் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். இத்தனைக்கும் இத்தகைய நில அபகரிப்பு நடக்கக் கூடாதென 1975ம் ஆண்டிலேயே கேரள பட்டியல் பழங்குடி நிலக் கிரயத் தடைச் சட்டம் இயற்றப்பட்டிருந்தது. பிரயோஜனமில்லை.

பிரச்சினை கேரள உயர்நீதிமன்றத்துக்குச் சென்றது. நீதிமன்றம் சட்டத்தை முறையாக அமல்படுத்தும்படி உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசாங்கம் 1982ம் ஆண்டு வரை குடியேறி அபகரித்து வைத்திருப்போருக்கு ஏதுவாக 1996ம் ஆண்டில் சட்டத்தைத் திருத்தியது. சட்டத்திருத்தத்துக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்தார். ஆனால் அரசாங்கம் 1996ம் ஆண்டில் கொண்டு வந்த திருத்தத்துக்கும் பிறகு 1999ம் ஆண்டில் கொண்டு வந்தத் திருத்தத்துக்கும் ரத்து செய்தது. கேரள அரசாங்கம் உச்சநீதிமன்றம் சென்று அந்த உத்தரவுக்கு தடை வாங்கியது.

அரசாங்கத் தரப்பைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் ஒரு முக்கியமானப் பிரச்சினை இருப்பதாக சொல்கிறார்கள். 1975ம் ஆண்டில் உருவாக்கப்பட்டச் பழங்குடி நிலக் கிரயத் தடைச் சட்டத்தை மீறி நிலத்தை அபகரித்தவர்கள் அந்த நிலங்களை சார்ந்து வாழத் தொடங்கிவிட்டதாகவும் விவசாய நிலங்கள், கட்டிடங்கள் என அந்த நிலங்களை மாற்றி விவசாயிகளின் வசிப்பிடமாக அவை மாற்றப்பட்டு விட்டதாகவும் அவர்களை வெளியேற்றுவதென்பது ஒரு தலைமுறையின் வாழ்விடம் மற்றும் வாழ்வாதாரத்தை நிராகரிப்பதாகிவிடும் என்றும் சொல்லப்படுகிறது.

ஒரு தலைமுறை முக்கியமெனில் பல தலைமுறைகளாக அங்கு வசித்த பழங்குடிகள் முக்கியம் இல்லையா?

‘படா’ படம் அக்கேள்வியைத்தான் எழுப்புகிறது. கூடவே இன்னும் சில முக்கியமான கேள்விகளையும் கேட்கிறது.

பழங்குடி நில அபகரிப்புக்கு ஆதரவான சட்டத்திருத்தத்தை கொண்டு வருவதில் இடது, வலது அரசுகளிடம் பேதம் இல்லை என்கிறது இப்படம். இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் ஆண்ட இரு ஆட்சிக்காலங்களிலுமே பழங்குடிகளுக்கு எதிரான இந்த நிலைப்பாடு தொடரப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்த நடவடிக்கை பட்டியல் பழங்குடிக்கு எதிராக ‘இடது, வலது என இரு தரப்புகளிலும் இருக்கும் உயர்சாதிகளின் நடவடிக்கை’ என இப்படம் குற்றம் சாட்டுகிறது.

ஆட்சியரை பிணையாக பிடித்த பிறகு, அவர் தரப்பு நியாயம், ஒரு நல்ல தலைமை ஆலோசகரின் முயற்சி, பிறகு ஒரு நீதிபதியின் தலையீடு என அற்புதமாக தன்னை காண்பித்துக் கொள்ளும் இந்திய ஒன்றியத்தின் அமைப்பு இறுதியில் எப்படி பல்லிளித்து துரோகம் இழைக்கிறது என்பதை பொட்டிலடித்தாற்போல் சொல்லி முடிகிறது படம்.

பழங்குடி நிலவுரிமைப் போராட்டத்தை கேரளாவில் முன்னெடுத்த மார்க்சிய லெனினியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் அசல் புகைப்படங்களுடன் படம் முடிகிறது.

இன்று ஆட்சியில் இருப்பது இடது முன்னணிதான். படத்தின் ஐவரில் ஒருவராக வந்து ‘இடது வலது உயர்சாதியினரே காரணம்’ என வசனம் பேசும் நடிகர் விநாயகன் சிபிஐ(எம்) கட்சி சார்பு கொண்டவர். ஆனாலும் படம் வெளிவந்திருக்கிறது. பிரச்சினை தீவிரமான உரையாடலுக்கு உள்ளாகியிருக்கிறது. ஆனால் அரசாங்கத்திடமிருந்து எந்த ஒடுக்குமுறையும் படத்துக்கு நேரவில்லை.

இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இருக்கிறது.

banner

Related Stories

Related Stories