சினிமா

“தேவதைகளை எந்த பெயரில் அழைத்தாலென்ன?” - கர்ணன் பட பாடல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மாரி செல்வராஜ்!

கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றுக்கு எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“தேவதைகளை எந்த பெயரில் அழைத்தாலென்ன?” - கர்ணன் பட பாடல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மாரி செல்வராஜ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

`பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றிக்குப் பிறகு மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `கர்ணன்'. இதில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமத்திருக்கிறார். கலைப்புலி தாணு இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் மூன்று பாடல்கள், டீசர் எல்லாம் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.

படத்தின் இரண்டாவது பாடலாக வெளியான பண்டாரத்தி புராணம், குறிப்பிட்ட சமூகத்தை புண்படுத்துகிறது என சர்ச்சை கிளம்பியது. இப்போது அதற்கு பதிலளிக்கும் வண்ணம், பாடலில் பெயரை மஞ்சனத்தி புராணம் என மாற்றம் செய்திருக்கிறார்கள். இது பற்றி படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் சமூக வலைதளத்தில் எழுதியிருப்பது பின்வருமாறு,

“அனைவருக்கும் அன்பின் வணக்கம்.

கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நீங்கள் அளித்து வரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும் தான் சினிமா என்னும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுகொடுக்கிறது.

அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத் தன்மையோடும்தான் நான் என் காட்சி படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன். பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கபட்டதுதான். சொந்த அத்தையாக அக்காவாக ஆச்சியாக பெரியம்மாவாக என் நிலத்தோடும் என் இரத்தத்தோடும் கலந்து காலத்தின் தேவதைகளான பண்டாரத்திகளின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாக சிதறவிட்டு காட்சிபடுத்தினேன்.

ஆனால் நம் சமூக அடுக்குமுறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்துகொள்ள முடியாததாகவும் விலக முடியாததாகவும் இருக்கிறது. அதன் அடிப்படையில் பண்டாரத்தி புராணம் பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும் வருத்தத்தையும் கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.

தேவதைகள் எந்த பெயரில் அழைக்கபட்டாலென்ன பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்துவிட போகிறதா என்ன? இனி ஏமராஜாவின் மாடவிளக்காக மஞ்சனத்தி இருப்பாள். இனி ஏமன் கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தை பாடுவான் கர்ணன் ஆடுவான். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியும் ப்ரியமும் எப்போதும்..

காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம்❤️

—- மாரிசெல்வராஜ்

(குறிப்பு: படத்தில் மாற்றம் செய்யபட்டதை போலவே இணையத்திலும் மாற்றம் செய்யபட்டுவிட்டது. YouTube விதியின் படி ஓரிரு நாளில் தானாக மாறிவிடும்.)

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories