
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தில், ஜாக்கி ஷெராஃப், அபர்ணா பாலமுரளி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் கோடை விடுமுறைக்கு படம் ரிலீஸாகவுள்ளதால் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது படத்தின் பாடல் வெளியீடு உள்ளிட்ட புரோமோஷன் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது படக்குழு.
அதன் ஒரு பகுதியாக, நாளை (பிப்.,13) ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 விமானத்தில் பறந்தபடி நடுவானில் சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றுள்ள “வெய்யோன் சில்லி” என்ற ரொமான்டிக் பாடல் வெளியிடப்பட உள்ளது.
இந்த திட்டமே புதுமையானதாக இருந்தாலும், இதில் மேலும் ஒரு புதுமையைச் சேர்த்துள்ளார் நடிகரும் படத்தின் தயாரிப்பாளருமான சூர்யா.
என்னவெனில், ‘சூரரைப் போற்று’ படக்குழுவினர் நடத்திய ‘தங்களின் மிகப்பெரிய கனவு’ கட்டுரைப் போட்டியில் வென்ற 100 அரசுப்பள்ளி மாணவர்கள் முதல் முறையாக பாடல் வெளியீட்டிற்காக விமானத்தில் பறக்கவுள்ளனர்.
ஏற்கனவே, ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி ரீதியில் தன்னுடைய அகரம் அறக்கட்டளை மூலம் உதவிவரும் நடிகர் சூர்யாவின் இந்தப் புது முயற்சிக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல், மற்றுமொரு அப்டேட்டில், வெய்யோன் சில்லி முழு பாடல் ரிலீஸாவதற்கு முன், அதன் ஒரு நிமிட ப்ரோமோ வீடியோ நாளை மாலை 3 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.








