
லோகேஷ் கனகராஜுடனான ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு விஜய்யின் 65வது படத்தை யார் இயக்கப் போக்கிறார்கள் என்ற கேள்வியே கோலிவுட் உலகில் அண்மைக்காலமாக எழுப்பப்பட்டு வரும் முக்கிய கேள்வியாக உள்ளது.
ஏற்கெனவே வெற்றிமாறன் விஜய்யின் 65வது படத்தை இயக்குவதாக பேசப்பட்டது. ஆனால் அவர், சூரியுடனான படத்தை இயக்கியப் பிறகு சூர்யாவின் 40வது படத்தை இயக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், மகிழ் திருமேனி, அட்லி, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் தங்கவேல் என பல முன்னணி இயக்குநர்களின் பெயர்கள் அடிப்பட்டது.
ஆனால் இதுதொடர்பாக எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை. இப்படி இருக்கையில், சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கியுள்ள ‘இறுதிச்சுற்று’ பிரபலம் சுதா கொங்கராவும் விஜய் 65-க்கான இயக்குநர் பட்டியலில் இணைந்துள்ளார்.
அண்மையில் நடிகர் விஜய்யிடம் சுதா கொங்கரா தரமான கதை ஒன்றைக் கூறியுள்ளதாகவும் அது விஜய்க்கும் பிடித்துப்போனதால் அடுத்தகட்ட ஆலோசனை பிப்ரவரி முதல் வாரத்தில் நடத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
‘சூரரைப் போற்று’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த வேளையில் தற்போது விஜய் - சுதா கொங்கரா கூட்டணி குறித்த தகவல் வெளியானது ரசிகர்களை மேலும் உற்சாகமடைய வைக்கவுள்ளது. ‘விஜய் 65’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ மற்றும் விஜய்யின் ‘மாஸ்டர்’ படங்கள் சித்திரை திருநாளை முன்னிட்டு ஏப்ரம் 9ம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது.








