சினிமா

சூர்யா படத்தில் மீண்டும் இணைந்த வெற்றிமாறனின் ஆஸ்தான இசையமைப்பாளர்!

சூர்யா-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா படத்தில் மீண்டும் இணைந்த வெற்றிமாறனின் ஆஸ்தான இசையமைப்பாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

'அஞ்சான்' படத்தில் இருந்து மாஸ், சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம், என்.ஜி.கே, காப்பான் என கடந்த ஆறு ஆண்டுகளில் நடிகர் சூர்யா ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் அவை அனைத்தும் பெரிய வெற்றி பெறாமல், கலவையான விமர்சனங்களையே பெற்றன.

தற்போது ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கராவுடன் இணைந்து புதுமையான கதையமைப்பில் உருவாகி வருகிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’. இப்படத்தின் செகண்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நிலையில் டீசர் வருகிற 7ம் தேதி வெளியாகவுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வருகிறது.

இதற்கிடையே ஹரி, சிறுத்தை சிவா என அடுத்தடுத்து சூர்யா நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாறுபட்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து இயக்கும் வெற்றிமாறனுடன் சூர்யா தனது 40வது படத்துக்காக முதன்முறையாக இணைந்து நடிக்கவுள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவிருக்கும் இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு அண்மையில் வெளியானது. சூரரைப் போற்று படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருவதால் சூர்யா - வெற்றிமாறன் படத்தின் ஷூட்டிங் அநேகமாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வடசென்னை தவிர பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் என வெற்றிமாறனின் படங்களுக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்தான் சூர்யாவின் இந்தப் படத்துக்கும் இசையமைக்கவுள்ளார். இது அவரது 75வது படம் என தனது ட்விட்டர் பக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து #G75 என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதேசமயத்தில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கும் ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories