சினிமா

“முன்னணி நடிகர்களால் கேள்விக்குறியாகும் முகம் அறியாத கலைஞர்களின் வாழ்வு” - புலம்பும் டப்பிங் கலைஞர்கள்!

ஹாலிவுட் படங்களுக்கு முன்னணி நடிகர்களை வைத்து டப்பிங் பணிகளை செய்து வருவது டப்பிங் கலைஞர்களை கலக்கமடையச் செய்துள்ளது.

“முன்னணி நடிகர்களால் கேள்விக்குறியாகும் முகம் அறியாத கலைஞர்களின் வாழ்வு” - புலம்பும் டப்பிங் கலைஞர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒரு நடிகனுக்கு முகமும், உடல்வாகும் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு குரலும் முக்கியம். நல்ல குரல்வளம் கொண்ட நடிகர்கள், ரசிகர்களை எளிதில் ஈர்க்கின்றனர். மொழி அறியாத நடிகர்களை நம்மில் ஒருவராய் நாம் அறியவும் எளிதில் நம்மோடு இணைத்துக்கொள்ளவும் அந்த நாயகர்களை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவும் உதவும் மகத்துவம் வாய்ந்த கலைஞர்கள் தான் டப்பிங் கலைஞர்கள்.

கடந்த 80 ஆண்டுகளாக திரைத்துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த டப்பிங் முறை தற்போது ஒவ்வொரு படத்திற்கும் முதுகெலும்பாக இருந்து வருகிறது. தமிழில் முதன்முதலில் டப்பிங் செய்யப்பட்ட படம் பாலிவுட்டில் வெற்றிபெற்ற ‘ராமராஜ்யம்’. 75 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தப் படம் இன்றும் வரலாற்றில் மதிக்கப்படக் கூடியதாக உள்ளது. அன்று தொடங்கி இன்றுவரை டப்பிங் கலைஞர்களின் பங்கு படத்துக்குப் படம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இப்படி இருக்க இந்த கலைஞர்களை நசுக்கும் விதமாக சில நிகழ்வுகள் தற்போது இந்திய சினிமா துறையில் நிகழ்ந்து வருகிறது.

“முன்னணி நடிகர்களால் கேள்விக்குறியாகும் முகம் அறியாத கலைஞர்களின் வாழ்வு” - புலம்பும் டப்பிங் கலைஞர்கள்!

டப்பிங் கலைஞர்கள் இந்திய மொழிப்படங்களுக்கு மட்டும் டப்பிங் பேசுவது கிடையாது. ஹாலிவுட் படங்களுக்கும் அவர்கள் தங்களின் காந்தக்குரலை பயன்படுத்தி வருகின்றனர். 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படம் உருவானாலும் சரி 5 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படம் உருவாகியிருந்தாலும் சரி படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் டப்பிங் எனும் பணியும் இணைந்திருக்கும். ஆனால், இதற்காக டப்பிங் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தொகை என்னவோ குறைவான தொகையாகவே இருந்து வருகிறது.

ஹாலிவுட் படங்களின் தமிழ் டப்பிங் என்பது ரொம்ப சுவாரஸ்யமான ஒன்று. நம்ம ஊர் சென்னை, நெல்லை மற்றும் கொங்கு தமிழில் டப் செய்து அசத்துவார்கள். அப்படியான படங்கள் அதிகமாக ரசிகர்களால் ஈர்க்கப்பட்டது. அதிக ரசிகர்கள் ஆங்கில படங்களை பார்க்கவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. இப்படியான டப்பிங் மட்டுமே அந்த கலைஞர்களுக்கு இருக்கும் ஒரே வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் புதிய பூதம் ஒன்று கிளம்பியிருக்கிறது. தற்போதைய பல உச்ச நடிகர்கள், பட புரமோஷனுக்காக ஹாலிவுட் படங்களுக்கு டப்பிங் கொடுத்து வருகிறார்கள். இது, டப்பிங்கை மட்டுமே நம்பியிருக்கும் பல கலைஞர்களின் வாய்ப்பைப் பறிக்கும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சர்ச்சை தற்போது கோலிவுட்டில் பேசுபொருளாகியுள்ளது.

“முன்னணி நடிகர்களால் கேள்விக்குறியாகும் முகம் அறியாத கலைஞர்களின் வாழ்வு” - புலம்பும் டப்பிங் கலைஞர்கள்!

ஹாலிவுட் படங்களுக்கு நடிகர், நடிகைகள் குரல் கொடுக்கும் கலாச்சாரம் ஜங்கிள் புக் வெளியீட்டின்போதுதான் ஒரு ட்ரெண்டாக உருவானது. ஜங்கிள் புக்கின் இந்தி வெர்ஷனில் பிரியங்கா சோப்ரா, இர்ஃபான், ஓம்பூரி ஆகியோர் குரல் கொடுத்தனர். அதன்பிறகு இந்தி ட்ரெண்ட் தமிழுக்கும் வரத் தொடங்கியது. அப்படித்தான், மார்வெல் ஸ்டுடியோஸின் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்தில் இருந்து தொடங்கி, அடுத்து ரிலீஸாக இருக்கும் ‘ஃப்ரோஸன் 2’ வரை இந்தப் பிரச்னை ரசிகர்களின் சிந்தனைக்கு எட்டாமல் மறைமுகமாக நிகழ்ந்து வருகிறது.

ஹாலிவுட் படங்களுக்கு முன்னணி நடிகர்கள் குரல் கொடுப்பது படத்தின் ப்ரோமொஷனுக்கு பெரிய அளவில் பயன்படுகிறது என்பது ஒன்று மட்டுமே அந்தப் படத்தை அந்தந்த மொழிகளில் விநியோகம் செய்யும் நிறுவனத்துக்கு பலமாக இருக்கிறது.

“முன்னணி நடிகர்களால் கேள்விக்குறியாகும் முகம் அறியாத கலைஞர்களின் வாழ்வு” - புலம்பும் டப்பிங் கலைஞர்கள்!

ஆனால் மற்றொரு பக்கம் நடிகர்கள் குரல்கொடுக்க, டப்பிங் கலைஞர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை காட்டிலும் 10 மடங்கு அதிகமாகவே கொடுக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. இருந்தாலும் ஹாலிவுட் படங்களை விநியோகம் செய்யும் நிறுவனங்கள், போட்ட முதலீட்டை எடுக்க இந்த முயற்சியை தற்போது அதிகமாக மேற்கொள்கின்றன.

உதாரணத்துக்கு, அவெஞ்சர்ஸ் படங்களில் அயர்ன் மேன் கதாபாத்திரம் மிகவும் முக்கியமான ஒன்று. அந்த கேரக்டருக்கு நடிகர் விஜய் சேதுபதியை டப்பிங் பேசவைத்து கோலிவுட்டில் படத்தை எளிதாக ப்ரோமோட் செய்தனர். ஆனால் இதுவரை அயர்ன்மேனுக்கு டப்பிங் பேசிவந்த ரவி ஷங்கரின் குரல்தான் ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயமான ஒன்று. அவர் குரலை கேட்டுப் பழகிய ரசிகர்களுக்கு விஜய்சேதுபதியின் குரலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் சமயத்தில் இந்த சர்ச்சை வலுவானது. தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்கள் வரவே இனி நான் இதுபோன்ற படங்களுக்கு டப்பிங் பேசமாட்டேன் என விஜய் சேதுபதி கூறினார்.

நடிகர், நடிகைகள் ஹாலிவுட் போன்ற வேற்று மொழிப் படங்களுக்கு டப்பிங் பேசவில்லை என்றாலும், படத்தின் வசூலுக்கும், விளம்பரங்களுக்கும் எந்தக் குறையும் இருந்திருக்காது. ஆனால், வழக்கமாக தமிழ் டப்பிங் படங்களில் கேட்கப்பட்டு வரும் பின்னணி குரல்களுக்கு மாற்றாக எண்ட்கேம் படத்தில், விஜய் சேதுபதி டப்பிங் கொடுத்திருந்ததுதான் மிகப்பெரிய குறையாக கருதப்பட்டது. இதனைக் கருத்தில் கொள்ளாமல், கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுவதற்காக மட்டுமே படங்கள் எடுக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

“முன்னணி நடிகர்களால் கேள்விக்குறியாகும் முகம் அறியாத கலைஞர்களின் வாழ்வு” - புலம்பும் டப்பிங் கலைஞர்கள்!

ஒரு நடிகனுக்கு எத்தனையோ படவாய்ப்புகள் இருக்கும்போது தங்களின் அன்றாட தேவைக்கே டப்பிங் தொழிலை நம்பியிருக்கும் அந்த கலைஞர்களின் வாய்ப்பைத் தட்டிப்பறிப்பது என்பது அவர்களின் வாழ்வை அழிப்பதற்கு சமமாகும் என்று புலம்புகிறார்கள் டப்பிங் கலைஞர்கள். எண்ட்கேம் படத்தின் ப்ரோமோஷன் வெற்றியைப் பார்த்து ருசிகண்ட விநியோகிஸ்தர்கள், தற்போது இந்தச் செயலை தொடர்ந்து வருகின்றனர். எண்ட்கேமை தொடர்ந்து வெளியான ‘The Lion King’ ‘Aladdin’ ‘Maleficent: Mistress of Evil’ என வரிசையாக பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ஹாலிவுட் படங்கள் அனைத்திற்கும் அந்தந்த மொழியின் முன்னணி நடிகர்களே குரல் கொடுத்தனர்.

தென்னிந்திய மொழிகளில் விஜய் சேதுபதி, சித்தார்த், அரவிந்த் சாமி, துல்கர் சல்மான், பகத் ஃபாசில், மகேஷ் பாபு, நானி, ஜெகபதி பாபு, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரோபோ ஷங்கர் உட்பட பலர் குரல் கொடுத்துவரும் நிலையில் வட இந்திய மொழிகளில் ஷாருக்கான், சஞ்சய் மிஷ்ரா, ஆஷிஷ் வித்யார்த்தி, ஐஷ்வர்யா ராய், ப்ரியங்கா சோப்ரா, ப்ரனிதி சோப்ரா ஆகியோர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இவர்கள் அனைவருக்கும் அவர்களின் மொழிகளில் நல்ல மார்க்கெட்டும் இவர்களுக்கென ரசிகர் பட்டாளமும் இருப்பதால் இவர்களை வைத்து படத்தை இன்னும் அதிகமான ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துவிடலாம் என்பது பட நிறுவனங்களின் நோக்கமாக இருக்கிறது. ஆனால், இந்த வியாபாரத்துக்குப் பின்னால் முகம் தெரியாத பலரின் வாழ்க்கை கேள்விக் குறியாகிறது என்பதே டப்பிங் யூனியனின் ஒற்றைக் குரலாகவும் ஒலிக்கிறது.

“முன்னணி நடிகர்களால் கேள்விக்குறியாகும் முகம் அறியாத கலைஞர்களின் வாழ்வு” - புலம்பும் டப்பிங் கலைஞர்கள்!

வருகிற நவம்பர் 22ம் தேதி திரைக்கு வரவிருக்கும் ‘ஃப்ரோஸன் 2’ படத்திற்கும் இதே நிலைதான் தொடர்ந்துள்ளது. இந்தியில் இந்தப் படத்திற்கு பிரியங்கா சோப்ரா மற்றும் ப்ரனிதி சோப்ரா குரல் கொடுக்க, தமிழில் ஸ்ருதிஹாசனை டப்பிங் பேசியுள்ளார்.

இதுபோன்று டப்பிங் கலைஞர்களுக்கான வாய்ப்பு தொடர்ந்து நடிகர்களின் வசம் போவதை கண்டித்து டப்பிங் யூனியன் விரைந்து நடவடிக்கை எடுக்க அந்தத் துறை சார்ந்த கலைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

வெளிச்சம் தொடாத முகங்களைக் கொண்டிருக்கும் இக்கலைஞர்களுக்கு குரல் மட்டுமே ஒரே மணிமகுடம். அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல் உழைக்கும் இவர்களின் வாய்ப்புகள் குறையும் காலம் தொடங்கிவிட்டது. பிரச்னைகளை இப்போதே சரி செய்வது வருங்கால சினிமாவுக்கு நல்லது என்பதே அவர்களின் ஒருமித்த பதிலாகவும் இருக்கிறது.

- சுரேஷ்

banner

Related Stories

Related Stories