
பேட்ட படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த், ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதில், நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், தம்பி ராமையா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பட பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் பொங்கல் பண்டிகை அன்று திரைக்கு வரவுள்ளது.
இந்த படத்தை அடுத்து இயக்குனர் சிவா இயக்கத்தில் தனது 168வது படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கும் இப்படம் ஆக்ஷன் கலந்த குடும்ப படமாக இருக்கும் என்று இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.

இதர நடிகர், நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. படத்தில் 2 கதாநாயகிகள் என்றும் இதற்காக ஜோதிகா, மஞ்சு வாரியர் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில், கீர்த்தி சுரேசும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க சூரியை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. இது உறுதியானால் ரஜினியுடன் சூரி நடிக்கும் முதல் படம் இதுவாக இருக்கும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.








