உலகம்

உடல்நலக்குறைவால் போப் பிரான்சிஸ் காலமானார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !

கத்தோலிக்க திருச்சபையின் 266-வது தலைவராக அர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் கடந்த 2013-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இவர் LGPTQ சமூகத்தினர் மற்றும் பாலின சமத்துவம் குறித்து தெரிவித்த முற்போக்கு கருத்துக்கள் பெரும் ஆதரவை பெற்றுத்தந்தது.

இதனிடையே உடல் நலக்குறைவால் கடந்த பிப்ரவரி 14-ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த போப் பிரான்சிஸ் மார்ச் 23ம் தேதி வாடிகன் திரும்பினார்

பின்னர் நேற்றைய தினம் ஈஸ்டர் திருநாளையொட்டி வாடிகனில் மக்களை சந்தித்து போப் பிரான்சிஸ் ஆசிர்வாதம் வழங்கினார். இதனிடையே இவர் இன்று உடல்நலக்குறைவு காரணமாக தனது 88-வது வயதில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப் என்ற பெருமை போப் பிரான்சிஸ்க்கு இருந்தது. அவரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், " இரக்கமுள்ள மற்றும் முற்போக்கான குரலாக இருந்தவர் போப் பிரான்சிஸ். ஏழை, எளிய மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோர் மீது அன்பு காட்டி அரவணைத்தவர். அவரது மறைவால் மிகுந்த வருத்தமடைந்தேன்" என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: வடிவேலுவின் பேக்கிரி நகைச்சுவை போல பாஜகவுடன் டீலிங் போட்டது அதிமுக - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !